PUBLISHED ON : ஜன 06, 2012

நெய்யூர் பாளையத்தில் இரு சகோதரர்கள் இருந்தனர். மூத்தவன் பெரிய தம்பி; இளையவன் சின்னத் தம்பி. இருவருக்கும் கொஞ்சம் நிலம் இருந்தது. அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.
ஒருநாள் சின்னத் தம்பி கழனியில் உழுது கொண்டு இருந்த பொழுது, ஏர் முனையில் ஏதோ, 'ணங்' என்று தட்டியது. உடனே அவன் அந்த இடத்தைச் தோண்டிப் பார்த்தான். ஒரு குடத்தில் தங்கக் காசுகள் இருந்தன. அதை ஆவலுடன் அவன் எடுத்தப்போது, அவன் முன்னால் தேவதை தோன்றினாள்.
சின்னத்தம்பி திடுக்கிட்டான்.
''யார் நீ?'' என்று கேட்டான்.
''நான்தான் திருப்தி தேவதை. இதுவரை நான் உன்னோடு வாழ்ந்தேன். தங்கம் இருக்கும் இடத்தில் நான் இருப்பதில்லை. உனக்குத் தொல்லையைத் தரும் தங்கம் வேண்டுமா அல்லது திருப்தியைத் தரும் நான் வேண்டுமா?'' என்று கேட்டது திருப்தி தேவதை.
''எனக்கு தங்கம் தான் வேண்டும்; நீ வேண்டாம்,'' என்றான் சின்னத் தம்பி.
திருப்தி தேவதை அவனை விட்டுப் போய் விட்டது. சின்னத் தம்பி தங்கத்தை மூட்டை கட்டி எடுத்துக்கொண்டு மேலும் சம்பாதிப் பதற்காகப் படகில் வெளிநாட்டிற்குப் புறப்பட்டான்.
ஒருவாரம் சென்றது. பெரிய தம்பி நிலத்தை உழுது கொண்டு இருந்தான். ஏர் முனையில் ஏதோ தட்ட, அவன் அந்த இடத்தைத் தோண்டிப் பார்க்க, ஒரு தங்கக் குடம் நிறையத் தங்கக் காசுகள் இருந்தன.
பெரிய தம்பி ஆவலோடு புதையலை எடுக்கப் போனான்.
அப்போது அவன் முன்னால் தோன்றியது திருப்தி தேவதை.
''பெரிய தம்பி! நான்தான் திருப்தி தேவதை. தங்கம் திருப்தியைக் கெடுக்கும். உனக்குத் தங்கம் வேண்டுமா? நான் வேண்டுமா?'' என்று கேட்டது.
''எனக்குத் தங்கம் வேண்டாம்; திருப்திதான் வேண்டும்,'' என்றான் பெரியதம்பி.
''மகிழ்ச்சி. புதையலை எடுத்து ஏழைகளுக்குத் தர்மம் செய்து விடு. நான் உனக்கு என்றும் குறையாத நிம்மதியைக் கொடுத்துக் கொண்டே இருப்பேன்,'' என்று கூறி மறைந்தது.
பெரிய தம்பி அவ்வாறே செய்து திருப்தியையும், மகிழ்ச்சியையும் சம்பாதித்தான்.
மேலும், சம்பாதிப்பதற்காக வெளிநாட்டுக்குப் படகில் புறப்பட்ட சின்னத் தம்பி, புயலால் படகு கவிழ, ஒரு மரப் பலகையின் உதவியால் நீந்திக் கரை சேர்ந்தான்.
அது ஒரு தீவு. ஏற்கனவே அங்கிருந்த சிலர், அவனைப் பார்த்து, ''நீயும் எங்களைப் போலப் பேராசைக்காரனா? வா! நாம் இங்கே ஒன்றாக வாழ்ந்து, ஒரு நாள் சாகலாம் வா!'' என்றனர்.
சின்னத் தம்பி அப்போதுதான் திருப்தி தேவதையின் உயர்வை உணர்ந்து வேதனைப்பட்டான்.
'அய்யோ! பேராசைப்பட்டதால் என் குடும்பத்தினரை இழந்து, இன்று இந்தத் தீவில் மாட்டிக் கொண்டேனே... என் வாழ்வில் திருப்தியும், மகிழ்ச்சியும் இல்லாமல் போனதே,' என்று எண்ணி அழுதான்.
***
