PUBLISHED ON : ஜன 20, 2012

வந்தேமாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!
வெள்ளை ரத்தமா!
நம் வீட்டு பாத்ரூமிலும், சமையலரையிலும் சுறுசுறுப்பாக வலம் வரும் கரப்பான் பூச்சியை பார்த்தாலே, பெண்களுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்துக் கொள்ளும். ஏதோ பயங்கரமான ஒரு உயிரினத்தை கண்டதுபோல் கூச்சலிட்டு ஊரையே கூட்டிவிடுவர்.
வெப்பமும், ஈரமும் கரப்பானுக்கு பிடித்தவை. இந்த இரண்டும் அதிகம் இருக்கும் இடத்தில் கரப்பான் பூச்சியும் இருக்கும். இதன் கண்கள் எல்லா திசைகளிலும் பார்க்கக் கூடியவை. கண்களில் 2 ஆயிரம் தனிப்பட்ட செல்கள் உள்ளன. கிட்டத்தட்ட ஒவ்வொன்றும் ஒரு கண் போன்றதுதான். இதன் மீசை சகல திசைகளிலும் தடவவும், வாசனையை அறியவும் உதவுகிறது.
கரப்பானுக்கு முன்னால் மட்டுமல்ல பின்பக்கத்திலும் 'எஸர்ஸி' என்ற குட்டி மீசை இருக்கிறது. இதுதான் பின்னால் இருந்து வரும் ஆபத்தை உணர்ந்து எச்சரிக்கை செய்கிறது. இந்த 'எஸர்ஸி' இருப்பதால்தான் கரப்பான் துரத்தி பிடிக்க முடிவதில்லை. இதற்கு மூக்கு கிடையாது. இரண்டு வாய்கள் உண்டு. ஒன்று சாப்பிடவும் மற்றொன்று வாசனை பிடிக்கவும் பயன்படுகிறது. இதற்கு எச்சில் சுரப்பு உண்டு.
சில சமயம் பெண் கரப்பான் பூச்சி தன் வாழ்நாள் முழுவதும் கர்ப்பமாகவே இருக்கும். ஒரு பையில் 16 முதல் 64 வரை முட்டைகளை இட்டு அதை எதாவது ஒரு பொருளோடு ஓட்டி வைத்துவிடும். பரண் மீது உபயோகிக்காமல் போட்டு வைத்த பொருட்களில் கூடுகளாகவும், வெள்ளை நிறத்தில் சிறு சிறு துகள் போலவும் ஒட்டிக் கொண்டிருப்பவை கரப்பான் பூச்சியின் முட்டைகள்தான். கரப்பானுக்கு சின்னதாக ஒரு கிட்னியும் உண்டு. தனது கழிவை வெளியேற்றும் போது அதிலிருக்கும் நீர்சத்தை முழுவதுமாக எடுத்து சுத்தப்படுத்தி தன் உடலுக்குள் வைத்துக் கொள்ளும். தண்ணீர் இல்லாத இடத்தில் நீண்ட நாட்கள் கரப்பான் பூச்சி இருக்கும் ரகசியம் இதுதான். சின்னதாக ஒரு இதயம் கூட உண்டு. இதயம் நின்று போனாலும் கரப்பான் உயிர் வாழும்; மூக்கு இல்லை, உடல் முழுவதும் துவாரங்கள் உள்ளன. இதன் மூலம் மூச்சுவிடும். மூளையும் உடம்பு முழுவதும் உள்ளது. தலையில் கொஞ்சம் நரம்பு மண்டலம் உள்ளது. தலையை வெட்டி விட்டால் கூட கரப்பான் பூச்சி ஒரு வாரம் உயிரோடு இருக்கும்.
ரத்தம் என்பதே கிடையாது. அதன் உடலில் இருந்து வெள்ளை நிறத்தில் வெளிப்படுவது கிட்டத்தட்ட ரத்தத்தை ஒத்ததாக இருந்தாலும் அது ரத்தம் கிடையாது. அதில் கொழுப்பு சக்தியும், சாப்பிட்டதை சக்தியாக மாற்றும் என்சைம்களும் உள்ளன.
அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!
இது 'பிரட் உப்புமா' செய்முறை நேரம்.
தேவையானவை:ரொட்டி-6 துண்டுகள், கேரட் துருவல்-கால் கப், நறுக்கிய பீன்ஸ் துண்டுகள்-கால் கப், நறுக்கிய பெரிய வெங்காயம்-கால் கப், இஞ்சி துண்டுகள்-ஒரு தேக்கரண்டி, நறுக்கிய பச்சை மிளகாய்-ஒரு தேக்கரண்டி, உப்<பு, எண்ணை-தேவைக்கு.
செய்முறை: பிரட் ஓரத்தில் இருப்பதை 'கட்' செய்து விட்டு, சின்ன சின்ன துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை விட்டு சூடாக்கி, பெரிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் போன்றவற்றை கொட்டி தாளிக்கவும். அதில் கேரட், பீன்ஸ், சேர்த்து கிளறவும். நன்றாக கிளறிய பிறகு, அதில் ரொட்டித் துண்டுகளைப் போட்டு கிளறவும். தேவைக்கு, உப்பு மற்றும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மூடிவைக்கவும். லேசான தீயில் வேக வைக்கவும். ஆவி வந்தவுடன், வாணலியை இறக்கி வைக்கவும். சூடான சுவையான பிரட், உப்பு மாவை குட்டீஸ்கள் குதூகலத்துடன் சாப்பிடுவர்.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஆறு நாட்களுக்கும்... ஆறு விதமான உணவு வகைளை ருசியாக சமைத்துக் கொடுங்கள். இந்த ஆறு வகையான உணவிலும், குழந்தைகள் விரும்பும் கலர்புல் விஷயங்களும் இருக்கு... சுவையும் இருக்கு. குழந்தைகளுக்கான ஆரோக்கியமும் இருக்கு.
கலாம் காலம்!
இந்தியாவின் குடியரசுத் தலைவர்களில் உலகின் பெரும் பகுதி மக்களை ஈர்த்த முதல் மனிதர் கலாம். இரண்டாவது முறையாக அவரே ஜனாதிபாதியாக வர வேண்டும் என்று இந்திய மக்கள் விரும்பினர். செய்தித்தாள், தொலைக்காட்சி வாக்கெடுப்பில் 85 முதல் 95 சதவிகிதம் வரை இவரே மீண்டும், அப்பதவியில் அமர வேண்டும் என்று வாக்களித்தனர்.
அப்போது நிலவிய அரசியல் சூழ்நிலையை உணர்ந்து கொண்ட கலாம், மறுமுறை அந்த பதவியில் அமர்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. பதவிக்காலம் முடிந்ததும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணியைத் தொடரப் போகிறேன் என்று நாகரிகமாக பதில் அளித்து, தன் கவுரத்தைக் காப்பாற்றிக் கொண்டார்.
ஏழ்மையிலும் நேர்மை, கோபத்திலும் பொறுமை, தோல்வியிலும் விடாமுயற்சி, வறுமையிலும் பரோபகாரம், செல்வத்திலும் (ஜனாதிபதி மாளிகை) எளிமை, பதவியிலும் பணிவு-என்று தமிழ் இலக்கியம் வழங்கிய அத்தனை பொன்மொழிகளுக்கும் வாழும் உதாரணமாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் கலாம். இத்தகைய ஒப்பற்ற ஒப்பனையற்ற மனிதர்களால் தான், உலக அரங்கில் இந்தியாவின் பெருமை உயந்து கொண்டே வருகிறது.
துண்டான உடல் பாகம்!
ஒரு விபத்தில் கைவிரலோ, கால் விரலோ அல்லது உடம்பின் ஏதாவது ஒரு பாகமோ துண்டாகிவிட்டால் விபத்துக்குள்ளானவர் அதிர்ச்சியடைந்து மயக்கமடைந்துவிடுவர். பக்கத்தில் இருப்பவர்கள்தான் தைரியமாக செயல்பட வேண்டும். துண்டான பாகத்தை எந்த காரணத்தை முன்னிட்டும் தண்ணீரில் கழுவி விடக்கூடாது. அந்த பாகம் எப்படி இருக்கிறதோ அதனை அப்படியே எடுத்து சுத்தமான ஓட்டையில்லாத பாலித்தீன் பையில் வைத்து, இறுக்கமாக கட்ட வேண்டும். அதன்பின்பு அந்த பாலித்தீன் பையை சுற்றிலும் ஐஸ் கட்டிகளை வைத்து ஒரு மரப் பெட்டியில் கொண்டு வர வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் ஐஸ்கட்டி அல்லது தண்ணீர் ஆகியவை துண்டான பாகத்துக்குள் நேரடியாக படும்படி வைக்ககூடாது. விபத்து நடந்த நிமிடத்திலிருந்து 24 மணி நேரத்திற்குள் துண்டான பாகத்தை கொண்டு வந்து விட வேண்டும். ஆனால், எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரமாக கொண்டு வருகிறர்களோ அதற்கு ஏற்றாற்போல் அந்த உறுப்பை மீண்டும் இணைப்பதற்கான சாத்தியம் அதிகமாகும்.
என்றென்றும் உங்கள் அன்பில்,
ஆட்டம் போடும் அங்குராசு.
