தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/புத்திசாலிகள்!

புத்திசாலிகள்!

புத்திசாலிகள்!


PUBLISHED ON : ஜன 20, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 20, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேதபுரி கிராமத்தில் வாழ்ந்தவர்கள் அனைவரும் படித்த பண்டிதர்கள். அரசவைப் பண்டிதர்கள் அவர்களிடம் செல்வம் கொழித்தது. அதனால் செருக்கும், தருக்கும் கொண்டு வாழ்ந்து வந்தனர்.

வேகாத வெயிலில் நடந்து களைத்துப் போன ஒரு இளைஞன், வேதபுரியில் உள்ள ஒரு மரத்தடியில் நிம்மதியாக உட்கார்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தான்.

அப்போது கத்திக்கொண்டே வந்த இரு பண்டிதர்கள் அந்த மரத்தடியில் வந்து நின்று கொண்டு, ''சுரைக் காய்க்கு உப்பு தேவையா? தேவை இல்லையா?'' என்று பட்டிமன்றம் நடத்தினர்.

அந்த வெட்டிப் பேச்சைக் கேட்டுப் பொறுமை இழந்து போன இளைஞன், ''பண்டிதர்களே! சுரைக்காய்க்கு உப்பு தேவையோ, தேவை இல்லையோ எனக்குத் தெரியாது. ஆனால், உங்களுக்குக் கொஞ்சம் அறிவு தேவை என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது. உங்களுக்குக் கொஞ்சமாவது அறிவு இருந்திருந்தால், இளைப்பாறிக் கொண்டிருக்கும் ஒருவனிடம் வந்து இப்படிக் கூச்சல் போட மாட்டீர்கள்,'' என்றான்.

அதைக் கேட்டதும், ''அடே மூடா! உனக்குப் புத்தி கேடா? யாரைப் பார்த்து அறிவு இல்லாதவர்கள் என்று கூறினாய்? நாங்கள் அரசவைப் புலவர்கள்,'' என்று வெடித்தார் ஒரு பண்டிதர்.

''எங்களை கேவலமாகப் பேசிய உன்னை அரசரின் முன்னால் நிறுத்தி தண்டனைக் கொடுக்கப் போகிறோம்,'' என்று தாளித்தார் இன்னொரு பண்டிதர்.

''இல்லாவிட்டால், நீ எங்களை விடப் புத்திசாலி என்று நிரூபிக்கவேண்டும். அதோ அந்த மரத்தடியைப் பார். யாரோ அங்கு உட்கார்ந்து சாப்பிட்டதற்குப் அடையாளமாகச் சோற்றுப் பருக்கைளும் இலையும் கிடக்கின்றன. அந்த இடத்திற்கு வெகு தொலைவுக்கு அப்பால் அவர்கள் இடத்தைச் சுத்தம் செய்து தூங்கிய அடையாளம் தெரிகிறது. அவர்கள் சாப்பிட்ட இடத்திற்குப் பக்கத்தில் படுக்காமல், விலகிப் போய் படுத்து இருக்கிறார்களே... அது ஏன்?... நாளை மத்தியானத்திற்குள் இதற்கு நீ விடை சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் ராஜ தண்டனை பெறுவாய்,'' என்று கூறி, அந்த இளைஞன் தப்பிப் போக முடியாதபடி இருவரைக் காவலுக்குப் போட்டார்கள்.

இளைஞனுக்கு ஒன்றும் புரியவில்லை, அன்று இரவு அங்கேயே படுத்துக் கொண்டான். மறுநாள் காலையில் சோற்றுப் பருக்கை சிந்திக் கிடந்த இடத்தைப் பார்த்தான்.

சிறிது நேரத்திற்குப் பிறகு படுப்பதற்காகச் சுத்தம் செய்த இடத்தைப் பார்த்தான். விடை கிடைத்து விட்டது. அந்தணர்களை அழைத்தான்.

''அவர்கள் சாப்பிட்ட இடத்தில் வெயில் விழுந்த காரணத்தால், தொலைவில் நிழல் உள்ள இடத்தில் படுப்பதற்காக அந்த இடத்தைச் சுத்தம் செய்தனர்,'' என்றான்.

இளைஞன் சரியான பதிலை கூறியதால், பண்டிதர்கள் அவமானத்தால் தலை குனிந்தனர். தாங்கள் மட்டுமே புத்திசாலி என்ற எண்ணத்தை கைவிட்டனர்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us