PUBLISHED ON : பிப் 10, 2012

வந்தே மாதரம்! என் தாய்நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!
சூரியக்காற்றே!
விண்வெளியில் கோள்களுக்கு இடையில் இடைவிடாமல் பெருகிப் பாய்ந்து கொண்டிருக்கும் மின்னோட்டமுள்ள துகள்களையே சூரியக்காற்று என்று விண்வெளி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சூரியனின் கொனராப் பரப்பிலிருந்து வெளியாகிறது. இந்த புரோட்டான் எலக்ட்ரான்களின் காற்று வீச்சு. கொனராப் பரப்பிலிருந்து வெளியாகும் வாயுக்கள் அயனி நிலையில் உள்ளவை. மிக அதிக வெப்ப ஆற்றல் உடையவை. சூரியனின் ஈர்ப்பாற்றலால் இந்த அயனிநிலை வாயுவை நிலை வாயுக்களைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. இந்த அயனிநிலை வாயுவை 'பிளாஸ்மா' என்று கூறுவர். இது பொருளின் நான்காவது நிலை.
கட்டுக்கடங்காத இந்த அயனிகள் விண்வெளியில் வெள்ளம் போல் சீறிப் பாய்கின்றன. சூரியனின் மின்காந்தப் புலம், இந்த அயனிகள் விரிவடைவதைக் கட்டுப்படுத்துகிறது. சாதாரணமாக, கடுஞ்சூட்டால் ஏற்படும் வாயுக்களின் இயக்கம் ஒழுங்கற்றுத் தாறுமாறாக இருக்கும். சூரியனின் பரப்பில் உள்ள நிலையைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.
இந்நிலையில் சூரியன் கோள வடிவமாக இருப்பதற்குக் காரணம் அதன் அசுர ஈர்ப்பு ஆற்றல்தான். நமது புவியின் ஈர்ப்பு ஆற்றலை விட 27 மடங்கு அதிகமாக சூரியனுக்கு ஈர்ப்பாற்றல் உள்ளது. அதனால்தான் சூரியனால் வெகு தொலைவில் உள்ள கோள்களையும் ஈர்த்து அதனை தன் பாதையில் சுற்றி வரச் செய்ய முடிகிறது.
சில சமயங்களில் அதன் ஈர்ப்பாற்றலையும் மீறி அதன் பரப்பில் இருந்து சூரியக் கொழுந்துகள் சீறிப் பாய்வதுண்டு. சூரியனின் பரப்பு, குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருக்கும் ஒரு வாயுக்கடல், சூரியனின் ஈர்ப்பாற்றல்தான் அக்கடலைக் கரை தாண்டாமல் கட்டி வைத்துள்ளது. சில சமயங்களில் அக்கடலில் இருந்து செந்நிறச் சுவாலைகள் சீறிப் பாய்வதுண்டு.
குட்டி அரக்கன்!
பூமியின் வடதுருவப்பகுதியில் இருக்கும் கிரீன்லாந்தில் ஒரு விஞ்ஞான பொக்கிஷம் கிடைத்தது. பார்ப்பதற்கு சாதாரண உருண்டைக்கல்போல் இது தெரியும். இதன் வயது 386 கோடி ஆண்டுகள். இந்த கல்லில் இருந்து சின்ன சின்ன உயிரினங்கள் தோன்றியுள்ளன என்பதுதான் விஞ்ஞானி களையே மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது. இது வரை உயிரின் தோற்றம் பற்றி மனிதன் வைத்திருந்த சித்தாந்தங்களை எல்லாம் இந்த உருண்டைக்கல் சுக்கு நூறாக உடைத்தெறிந்து விட்டது.
அதன்படி 386 கோடி வருடங்களுக்கு முன், பூமி முழுவதும் பனி மூடிக்கிடந்தது. எந்த ஜீவராசியும் கிடையாது. மேற்பரப்பில் பல மீட்டர் உயரம் வரை பனியும், அதற்கு கீழே தண்ணீரும் இருந்தன. அந்த தண்ணீரில் அமோனியா பார்மால் டிஹைட், ஹைட்ரஜன், சயனட் என்ற வாயுக்கள் தனித்தனியாக ஆங்காங்கே மிதந்து கொண்டு இருந்தன.
இவையெல்லாம் ஒரு குறிப்பிட்ட அளவில் ஒன்று சேர்ந்தால் உயிரினம் உருவாக வாய்ப்பு இருந்தது. ஆனால், கிட்டத்தட்ட 50 கோடி ஆண்டுகள் வரை அதற்கு வாய்ப்பே ஏற்படவில்லை. அந்த சமயத்தில் தான் எரியும் நட்சத்திரங்களும், விண்கற்களும் பூமியை ஒரே சமயத்தில் தாக்கத் தொடங்கின. அவை தீப்பந்துகளாக தாக்கியதால் பனி உருக ஆரம்பித்தது. சில கோடி ஆண்டுகளில் வெண்பனி உறைந்து பூமி எரிமலைகள் கக்கும் உஷ்ணப்பிரதேசம் ஆனது. சூடான புகை மேகங்கள் சூழ்ந்தன. பூமி இப்படி ஒரேயடியாக வெப்பமடைந்ததால் பனிப்பாறைகளுக்கு கீழே இருந்த தண்ணீரும், ரசாயன மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டது. சேராமல் தனித்தனியாக விலகியிருந்த வாயுக்கள் மெல்ல மெல்ல சேரத் தொடங்கின. அதன் சேர்க்கையில் பூமியில் புதிய முதல் உயிரினம் உற்பத்தி யானது. அதன் பெயர் ஆர்ச்சியா. இது ஒரு நுண்ணுயிரிதான். ஆனாலும் இது தீயிலே வாழக்கூடிய அதிசய ஜீவி. ஒரு மனிதன் எரிந்து சாம்பலாகும் அளவுக்கு உஷ்ணம் இருந்தால் மட்டுமே இது உயிர் வாழும். அந்த உஷ்ணம் குறைந்தால் அது இறந்து போகும். இதுதான் உலகின் முதல் உயிரி என்று விஞ்ஞானிகள் பிரமிப்போடு கண்டுப்பிடித்திருக்கிறார்கள். இதற்கு முன் அமீபாதான் முதல் உயிரினம் என்று இருந்தது.
இந்த ஆர்ச்சியா என்ற தன்னந்தனி உயிரினம் 30 கோடி ஆண்டுகள் வாழ்ந்தது. இதன் உணவு, இரும்பும், நச்சுப் பொருட்களும்தான். எனவே, இதை குட்டி அரக்கன் என்று விஞ்ஞானிகள் வர்ணிக்கின்றனர். இது மட்டும் அழியாமல் இருந்திருந்தால் மற்ற உயிரினங்கள் தோன்றியிருக்க முடியாது. 30 கோடி ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆர்ச்சியா பரிணாமம் கொஞ்சம் மாறி சைனோ பாக்டீரியா என்ற உயிரினமாக மாறியது. அதிலிருந்து மற்ற உயிரினங்கள் தோன்றின.
டிவி தன் வரலாறு கூறுதல்
நமது நண்பர்களில் ஒன்றாகி விட்ட 'டிவி' பெட்டி தன் சரித்திரத்தை கூறுதல்.
1926-30: ஜான் பெயர்டு 30 வரிகள் பிரிதிறன் (ரிசொல்யூஷன்) கொண்ட 'டிவி' சிஸ்டத்தை உருவாக்கினர். இதில் 1 நொடிக்கு 5 பிரேம்கள் ஓடின.
1928: அமெரிக்காவைச் சேர்ந்த பெடரல் ரேடியோ கமிஷன் என்ற அமைப்பு சார்லஸ் ஜென்கின்ஸ் என்பவருக்கு முதல் தொலைக்காட்சி உரிமத்தை வழங்கியது.
1930: பி.பி.சி., நிறுவனம் 'டிவி' ஒளிபரப்பை துவக்கியது.
1936: உலகம் முழுவதும் சேர்த்து மொத்தம் 200 பேர் 'டிவி' வைத்திருந்தனர்.
1937: சி.பி.எஸ்., நெட்வொர்க் 'டிவி' பிரிவை துவக்கியது. லண்டனிலிருந்து பி.பி.சி., நிறுவனம் எச்.டி., எனப்படும் துல்லியமான ஒளிபரப்பை அளித்தது.
1940: ஹங்கேரியன் நாட்டை சேர்ந்த பீட்டர் கோல்டு மார்க் என்பவர், 343 வரிகள் பிரிதிறன் கொண்ட 'கலர்டிவி'யை வடிவமைத்தார்.
1941: அமெரிக்காவிலுள்ள பெடரல் கம்யூனிகேஷன், கமிஷன், நேஷனல் டெலிவிஷன் சிஸ்டம் கமிட்டி ஒப்புதல் டிவிகளை வெளியிட்டது.
1943: விளாடிமிர் வோர்கின் ஆர்திகன் என்ற கேமரா டியூப் பை வடிவமைத்தார். இதையே நாம் பிக்சர் டியூப் என அழைக்கிறோம்.
1956: அமெரிக்காவை சேர்ந்த ராபர்ட் அட்லர், ரிமோட் கன்ட்ரோலை உருவாக்கினார். இவர் உருவாக்கிய ரிமோடர் வயர்களால் இணைக்கப்பட்டவை.
1959: இந்தியாவில் 'டிவி' அறிமுகப்படுத்தப்பட்டது.
1962: அமெரிக்காவில் உள்ள 'ஏடி-டி' நிறுவனம் டிவி ஒளிபரப்புகளுக்காக 'டெல்ஸ்டார்' என்ற செயற்கை கோளை அனுப்பியது.
1967: கலரில் பெரும்பாலான 'டிவி' ஒளிபரப்பு துவங்கியது.
1976: சோனி நிறுவனம், பீட்டாமேக்ஸ் என்ற முதல் 'ஹோம்' வீடியோ கேசட் ரிகார்டரை அறிமுகப்படுத்தியது.
1984: ஸ்டீரியோ டிவி ஒளிபரப்பிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
என்றென்றும் உங்கள் அன்பினில்,
ஆட்டம் போடும்,அங்குராசு.
***
