PUBLISHED ON : ஜூலை 29, 2011

1947ம் வருடம் அன்று அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமேன் இங்கிலாந்து பிரதமர் சர்ச்சிலிடம் மிகவும் பரவசத்துடன் தங்கள் கைவசம் உள்ள ஒப்பற்ற அணு ஆயுதத்தை பற்றிக் கூற... அதைக் கேட்ட சர்ச்சில் பன்மடங்கு மகிழ்ச்சியுடன், 'ஓ! ரஷியாவை ஒழித்துக்கட்ட இது ஒன்று போதும்' என்று ஆனந்தக் கூத்தாடினார்!
அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமேனைத் தவிர இந்த அணுகுண்டை உபயோகிப்பதில் வேறு எவருக்கும் விருப்பம் இல்லை. ஆயினும் அவர் மிகவும் பிடிவாதமாக 'இந்த யுத்தம் சீக்கிரமாக முடியவேண்டும்... நம் ராணுவத்தில் அதிகம் உயிர் சேதம் இல்லாமல் இருக்க வேண்டுமானால் இந்த அணுகுண்டை உபயோகித்தே தீர வேண்டும்' என்று அடித்துக் கூறிவிட்டார். அவரின் உத்தரவு... ஆசியுடன் 'எனோலா கே' என்ற ஒரு ஊழிகாலத்து அரக்கன் பதினான்கு அடி நீளமும்... ஐந்து அடி அகலமும் பத்தாயிரம் பவுண்டு கனமுள்ள 'தி லிட்டில் பாய்' என்று செல்லமாக அழைக்கப்பட்ட அந்த குழந்தையை தன்னுள் சுமந்து கொண்டு, டோக்கியோவிலிருந்து இரண்டாயிரத்து ஐம்பது கிலோமீட்டர் தூரத்திலுள்ள 'டினியன்' என்ற தீவிலிருந்து புறப்பட்டான்.
அவனின் இலக்கு ஹிரோஷிமா... ஏனெனில் அங்குதான் மிகப்பெரிய அளவில் ஆயுத கிடங்குகள்... போர் தளவாடங்கள் அனைத்துமே குவிக்கப்பட்டிருந்தன. காலை 8.30 மணிக்கு தன் இலக்கில் இருக்க வேண்டும். ஆகாயத்தில் மேகக்கூட்டங்கள் இருக்கக் கூடாது... நீலவானத்தில் சூரியனின் கிரணங்கள் மட்டுமே பளீரென இருக்க வேண்டும். அப்போதுதான் அங்கே நடக்கவிருக்கும் வீரதீர சாகசத்தை துல்லியமாக படமெடுத்து உலகமக்களை வியக்கச் செய்யலாம்... என்று மிக நீண்ட பட்டியலுடனும், தங்கள் ஜனாதிபதி ட்ரூமேனின் ஆசியுடன் புறப்பட்டான்.
கண் இமைக்கும் நேரத்தில், பன்மடங்கு சூரிய ஒளியுடன் மிக பிரகாசமாக ஹிரோஷிமா தீக்கங்குகளில் குளித்துக்கொண்டிருக்க... ஐந்து மீட்டர் சுற்றளவுள்ள அடர்த்தியான கருமேகம் ஆகாயத்தில் சூழ்ந்து கொண்டது. இந்த குண்டு மழைக்கு ஆளான இரண்டு லட்சத்துக்கும் மேலான மக்கள் அப்படியே கருகிவிட... தீயில் உருகும் உடலோடு கதறக்கூட ஜீவனற்ற மிஞ்சிய மக்கள் ஆஸ்பத்திரிகளை நோக்கி ஓட... ஓ! அங்கே எரியும் உடலோடு, கண்... கை கால்கள் சிதைந்த நிலையில் உள்ள கூட்டத்தை பார்த்த டாக்டர்களே, 'இனி உங்களுக்கு வாழ்க்கையே கிடையாது... திரும்பி விடுங்கள்!' என்று கூறினார்களாம்!
'நாங்கள் சரணடைந்து விடுகிறோம்' என்று ஜப்பான் மன்னர் ஹிரோஹிட்டோ அபாயக்குரல் எழுப்புவார் என்று இந்த கர்ம வீரர்கள் எதிர்பார்க்க அது நடக்கவில்லை என்று அறிந்ததும்... பின்னர் அந்த 'லிட்டில் பாய்' நாகஸாகி மேல் பறந்து விளையாடி ஊரையும்... மக்களையும் பொசுக்கி, அழித்து கோரப்படுத்தி... இந்த தலைமுறைகள் மட்டுமல்ல... இனி வரும் இரண்டு மூன்று தலை முறைகளிலும் கூட உங்களால் நிமிர முடியாது... உட்கார முடியாது எழுந்து நிற்க கை கால்கள் கிடையாது... பார்க்க கண்கள் கிடையாது... கேட்க செவிகள் கிடையாது... தோல் சுருங்கி உடல் சுருங்கி இனி என்றும் நீங்கள் அனைவருமே நடைபிணங்கள் தான் என்று எக்காளமிட்டான்.
ஓ! அந்த 'லிட்டில் பாய்'ன் குரூர சூளுறைகள் அனைத்தும் இப்ப என்ன வாயிற்று? சில வருட இடைவெளிக்குப் பின்... இப்போது அன்று அழிக்கப்பட்ட அந்த ஜப்பானில் மிக கம்பீரமாக பளிங்கு மனிதர்கள், செல்வத்தில்... விருந்தோம்பல் நீந்துகின்றனர். புத்தம் புதிய கண்டுபிடிப்புகள்... கார் வகைகள்... போன் வகைகள்... எலக்ட்ரானிக் சாதனைகள்... நகர்கள் எங்கும் வானளாவிய கட்டடங்கள் வெளிநாட்டவரை அசத்தும் ஹோட்டல்கள்... இன்னும் எத்தனை எத்தனையோ... இன்று அமெரிக்காவிற்கு இக்குட்டி நாடு ஒரு மிகப் பெரிய சவால் என்றால் மிகையாகாது!
'தி இன்டர்நேஷனல் மிலிட்டரி ட்ரைபூனல்' என்ற பதினோரு நபர்களை கொண்ட அமைப்பு. போர் கைதிகளை விசாரணை செய்து அவர்களுக்கு உரிய தண்டனையை வழங்கும் அதிகாரத்தை கொண்டது. ஜப்பானிய ஜெனரல் டோஜோவையும் அவருடைய கூட்டாளிகளையும் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட இக்குழுவும் இந்தியாவைச் சேர்ந்த ராதா வினோத் பால் என்ற நீதிபதியும் இருந்தார்... இவர் துணிந்து 'ஜப்பானியர்கள் குற்றவாளிகளே அல்லர்... யுத்தத்தில் தாங்கள் வென்று விட்டோம் என்ற ஒரே காரணத்திற்காக தோற்றவர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி விசாரணை செய்வது எப்படி நியாயமாகும்? அதிர்ஷ்ட தேவதை ஜெயித்தவர்களுடன் கை குலுக்கிக்கொண்டு விட்டதால், அவர்கள் குற்றமற்றவர்கள் என்று கூறுவது என்ன நியாயம்' என்று கூறிவிட்டார்.
சமீபத்தில் 'தி ஜப்பான் டைம்ஸ்' என்ற பத்திரிகையில் வெளியான ஒரு குறிப்பு இது. போர் கால விசாரணை நடந்து கொண்டிருந்த சமயம்... நீதிபதி ராதா வினோத் பால் வீட்டில் சமையல்காராக இருந்தவன் ஒரு இளம் மலையாள சிறுவன். அவன் ஜப்பானிலே தங்கி ஒரு சிறிய ஓட்டலை ஆரம்பிக்க... அது தற்போது மிகப்பெரிய ஓட்டலாக மாறிவிட்டது. தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கிய தங்களின் மதிப்பிற்குரிய அந்த இந்திய நீதிபதியின் நினைவாக அந்த மலையாள சிறுவனின் (இன்று வயதாகிவிட்ட) ஓட்டலுக்கு சென்று உணவருந்துவதை தங்களின் இனிமையான கடமையாக எண்ணுகின்றனர் ஜப்பானியர்கள்.
ஐன்ஸ்டின் என்ற விஞ்ஞானி, 'நாங்கள் வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்து எங்கள் ஆராய்ச்சிகளின் அரிய கண்டுபிடிப்புகள் அனைத்தும் இப்படி கொடூரமான செயல்களுக்கெல்லாம் பயன்படுத்துவதைக் காணும் போது, என் மனம் வெதும்புகிறது. என் அடுத்த பிறவியில் நான் மறுபடியும் ஒரு விஞ்ஞானியாக பிறக்க விரும்பவில்லை. ஒரு சாதாரண பிளம்பர் ஆகவே பிறக்க விரும்புகிறேன் என்றாராம்.
ஐம்பது வருடங்களுக்கு முன் தீயில் முக்குளித்து முற்றிலும் சாம்பலாகிப் போன அந்த ஜப்பான் நாடுதான் இன்று அந்த சாம்பல் குவியலிலிருந்து ஒரு 'பீனிக்ஸ்' பறவையாகத் துள்ளி எழுந்து தன் இறக்கைளை ஆகாயமளவு விரித்து உலகமே வியக்கும் வண்ணம் கொடிகட்டிப் பறக்கிறது. இது எப்படி? இது எப்படி சாத்தியம்? என்று உலகமே வியக்கிறது என்பதே சத்தியம்.
இங்கே ஒரு கல்லால் ஆன பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு குறிப்பேடு. அதில் குண்டின் கதிர்வீச்சிற்கு ஆளாகி உடல் நலிவுடன் வாழ்ந்து மறைந்தவர்களின் பெயர் பட்டியல் அவ்வப்போது எழுதப்படுகிறது. இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டிவிட்டது.
'ஓ! இந்தப் போர் எங்களுக்குக் கற்று கொடுத்த பாடம் இனி நாங்கள் ஒரு போதும் யுத்தத்திற்காக பணம் செலவழிக்க மாட்டோம். மாறாக அந்தப் பணத்தை எங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக மட்டுமே செலவழிப்போம்' என்று தங்களுக்கே உரிய புன்னகையுடன் ஒவ்வொரு ஜப்பானியரும் சொல்கின்றனர்.
