PUBLISHED ON : ஜூலை 29, 2011

வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!
மண்டை ஓடு காக்கை அலறல்!
படிம்பு, யானை போன்ற விலங்குகள் தங்களை தாக்கியவர்களை நினைவில் வைத்திருந்து பழி வாங்கும் குணம் கொண்டவை என்ற 'நம்பிக்கை' கிராமப்புற மக்களிடம் உள்ளது.
பொதுவாக மனிதர்களிடம் தான் காத்திருந்து பழிவாங்கும் குணம் உள்ளதே தவிர, விலங்குகளிடம் அந்த குணம் கிடையாது. அந்த அளவுக்கு புத்திசாலித்தனமும் அந்த ஜீவன்களிடம் கிடையாது. எந்த விலங்கும் தனக்கு ஆபத்து வரும் போது முதலில் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடவே பார்க்கும்.
அது முடியாமல் போகும் போது மட்டுமே தன்னை பாதுகாத்து கொள்ள திருப்பித் தாக்கும். விலங்குகள் மற்றும் பறவை இனங்களிடம் உள்ள இந்த குணம் குறித்து ஆய்வு ஒன்றை அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகம் நடத்தியது.
இதற்காக பறவைகள் மற்றும் வனவிலங்குகள் சரணாலயத்தில் உள்ள காக்கைகளை தேர்வு செய்தனர். சரணாலயத்தில் சுதந்திரமாக சுற்றி திரிந்த காக்கைகள் சிலவற்றை பிடித்து கூண்டில் அடைத்தனர். அவ்வாறு காக்கைகளை பிடித்தவர்கள் மண்டை ஓடு சின்னம் பொறித்த முகமூடி அணிந்து இருந்தனர். மேலும், கூண்டில் காக்கைகள் அருகே அந்த முகமூடி அணிந்தவர்கள் அடிக்கடி நடமாடினார். சில வாரங்கள் கழித்து கூண்டில் அடைத்த காக்கைகளை சுதந்திரமாக பறக்க விட்டனர்.
சில நாட்களுக்குப்பின் அந்த காக்கைகள் இருந்த பகுதியில் மண்டை ஓடு சின்னம் கொண்ட முகமூடி மற்றும் வேறு சில வண்ணங்கள், படங்கள் கொண்ட முகமூடியை ஆங்காங்கே போட்டு வைத்தனர்.
இதில் மண்டை ஓடு சின்னம் கொண்ட முகமூடிகளை பார்த்து காக்கைகள் ஆபத்து காலத்தில் எழுப்பும் வகையில் சத்தமிட்டன. மேலும், பிற காகங்கள் அந்த முகமூடி அருகே செல்ல முயன்றபோது அவற்றை தடுத்தன. அதே நேரத்தில் பிற முகமூடிகள் அருகே அந்த காகங்கள் பயமின்றி சுற்றி திரிந்தன. இந்த ஆய்வின் மூலம் காக்கைகள் தங்களது எதிரிகளை அடையாளம் கண்டு கொள்ளும் திறன் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
இதுபோன்ற ஆய்வுகள் மற்ற பறவை இனங்களிடமும் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த ஆய்வுகளின் முடிவில் பறவைகளின் நினைவுத்திறன், ஆபத்துகளை முன் கூட்டியே அறியும் திறன் போன்றவை எந்த அளவுக்கு உள்ளது என்பதை கண்டுபிடிக்க முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
பெரிய பஸ் நிலையம்!
உலக அளவில் மிகப் பெரிய பேருந்து நிலையம் உள்ள நாடு இஸ்ரேல். இந்த பெருமையை பல வருடங்களாக தக்க வைத்து கொண்டிருந்தது அந்நாடு. ஆனால், இப்போது அதைவிட பிரமாண்டமான பேருந்து நிலையம் இந்திய தலைநகர் டெல்லியில் உருவாக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்காக பலவித பிரமாண்டமான ஸ்டேடியங்கள் உருவாக்கப்பட்டன. அப்படி உருவான ஒரு பிரமாண்டம்தான் இந்த பேருந்து நிலையம். கிழக்கு டெல்லியில் இந்திரப்பிரஸ்தா பூங்காவிற்கு அருகில் அமைந்திருக்கும் காமன்வெல்த் கிராமத்தில்தான் இந்த பேருந்து நிலையம் உள்ளது.
இதிலுள்ள மூன்று பிரதான வாசல்கள் தனித்தனியாக கிழக்கு டெல்லி, வடக்கு டெல்லி, தெற்கு டெல்லி ஆகிய பகுதிகளை இணைக்கின்றன. இந்த பேருந்து நிலையத்தின் பரப்பளவு 61 ஏக்கர்.
இதில் சாதாரண பேருந்துகளை விட கூடுதலான அகலமும் நீளமும் கொண்ட தாழ்தள பேருந்துகளை ஆயிரத்துக்கும் மேல் தாராளமாக நிறுத்தலாம்.
அதை உடனுக்குடன் சரி செய்ய வசதியாக பேருந்து நிலையத்துக்குள்ளேயே 5 ஓர்க் ஷாப்புகள் இயங்கி வருகின்றன. இதுபோக ஒரு சரக்கு மையம் வேறு இருக்கிறது. பயணிகள் கொண்டு வரும் லக்கேஜ்களில் அபாயகரமான பொருட்கள் ஏதாவது இருக்கிறதா என்பதை கண்காணிப்பதற்காகவே அதிநவீன கண்காணிப்பு மையம் ஒன்றும் இயங்கி வருகிறது. டெல்லி வாகனங்கள் டீசலுக்கு விடை கொடுத்து பல மாதங்கள் ஆகின்றன. அங்கு இயக்கப்படும் வாகனங்களில் சி.என்.ஜி., என்ற காஸ் (எரிவாயு) மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
இந்த காஸிலும் மிக குறைந்த பட்சமாக மட்டுமே புகை வெளியிடக்கூடிய 'சி.என்.ஜி.ஹை பிரிட்' பேருந்துகள் வந்துவிட்டன. குறைவான மாசுக் குறியீடும், சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த பேருந்துகள் ஒன்றின் விலை ரூ.1.5 கோடியாகும். இத்தகைய சிறப்பான பேருந்துகளை உலகிலேயே முதன்முதலாக இயக்கிய பெருமையும், டெல்லி போக்குவரத்து கழகத்துக்கே உரியது. காமன்வெல்த் போட்டிகளுக்காக இந்த பேருந்துகளை மாநகரில் வலம் வர வைத்திருந்தது டெல்லி போக்குவரத்து கழகம். நமது ஊரில் ஓடக்கூடிய தாழ்தள சொகுசு பேருந்துகள் மத்திய அரசின் திட்டம் மூலம் வழங்கப்பட்டவை.
இதையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிடும் அதி நவீன சொகுசு மற்றும் சுற்றுச்சூழலை கெடுக்காத பேருந்துகள் காமன்வெல்த் போட்டிக்காக அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த பேருந்துகளும் அவை நிறுத்தி வைக்கப்படும் பிரமாண்டமான பேருந்து நிலையமும் காமன்வெல்த்தால் இந்தியாவுக்கு கிடைத்த பெருமை.
அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!
இது 'கொள்ளு உருண்டை காரக்குழம்பு' செய்முறை நேரம்.
தேவையானவை: கொள்ளு-200 கிராம், காய்ந்த மிளகாய்-6, துவரம்பருப்பு - 4 டீஸ்பூன், கறுப்பு உளுந்து-4 டீஸ்பூன், புளி-ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி-2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு -தேவையான அளவு.
செய்முறை: துவரம் பருப்பு, கறுப்பு உளுந்து, கொள்ளு ஆகியவற்றை சேர்த்து ஊற வைத்து உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய்விட்டு, அரைத்த விழுதை போட்டு நன்கு கிளறி, எடுத்து சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். புளியை கரைத்து உப்பு, சாம்பார் பொடி போட்டு கொதிக்க வைத்து குழம்பாக தயாரிக்கவும். உருண்டைகளை இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுத்து, குழம்பில் போட்டு இறக்கவும்.
குறிப்பு: கொள்ளு, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு சத்தை குறைக்கும். குழம்பை சாதத்தில்போட்டு உருண்டைகளை தொட்டு கொள்ள வைத்து கொள்ளலாம். உருண்டையை சாதத்துடன் பிசைந்து கொண்டு, குழம்பு தொட்டும் சாப்பிடலாம். இது ஒரு டூ-இன்-ஒன் குழம்பு.
அன்புடன், அங்குராசு.
