PUBLISHED ON : ஜூலை 29, 2011

செருப்புத் தைக்கும் கலைஞன் ஒருவன் தினந்தோறும் அதிகாலையிலிருந்து இரவு வரை எவ்விதக் கவலையும் இல்லாமல், சந்தோஷமாகப் பாடிக் கொண்டேயிருப்பான். பக்கத்தில் ஒரு பெரிய மாளிகையில் ஒரு பணக்காரன் வசித்து வந்தான். அவனுக்கு இரவில் சரியாகத் தூக்கம் வராது. அதிகாலையில்தான் சிறிது கண்ணயர்வான். அந்தச் சமயம் பார்த்துச் செருப்புத் தைப்பவன் பாட ஆரம்பித்து விடுவான். பணக்காரனின் தூக்கம் கலைந்துவிடும். இப்படியே பல நாட்கள் நடந்து கொண்டிருந்தது.
ஒருநாள் -
அவன் செருப்புத் தைப்பவனைத் தன் மாளிகைக்கு வரவழைத்து, ''உனது வருட வருமானம் எவ்வளவு?'' என்று கேட்டான்.
''நான் வருஷக் கணக்கெல்லாம் பார்ப்பது கிடையாது. அன்றாட வருமானம்தான் எனக்கு. அதுவும் ஒருநாள் கிடையாது,'' என்றான் செருப்புத் தைப்பவன்.
''உன்னை நான் பணக்காரனாக்க விரும்புகிறேன். இதோ நூறு தங்க நாணயங்கள் இருக்கிறது. இவற்றைக் கொண்டு போய்ப் பத்திரமாக வைத்துக் கொண்டு, அவசியம் நேரும் போது செலவு பண்ணிக் கொள்!'' என்று கூறி பணக்காரன் தங்க நாணயங்களைக் கொடுத்தான்.
செருப்புத் தைப்பவன் கரை காணாத சந்தோஷத்துடன் தங்க நாணயங்களை வாங்கிக் கொண்டு, வீட்டில் பத்திரமான ஓரிடத்தில் அவற்றைப் புதைத்து வைத்தான். அன்று முதல் அவன் பாடுவதை நிறுத்திவிட்டான். அவனுக்கு எப்போதும் தங்க நாணயங்களைப் பற்றியே ஞாபகம். அவற்றைக் காவல் செய்வதைவிட வேறு வேலை எதுவும் செய்ய முடியவில்லை.
யாராவது வந்து திருடிவிடக்கூடாதே என்று இரவிலும் அவன் கண்விழித்துக் கொண்டு உட்கார்ந்து இருப்பான். சிறு சலசலப்புக் கேட்டாலும் ஓடிப்போய் நாணயங்கள் பத்திரமாக இருக்கின்றனவா என்று பார்த்துவிட்டு வருவான். இப்படி மன நிம்மதியிழந்து கவலையிலும், பயத்திலுமே காலம் தள்ள அவனால் முடியவில்லை.
ஒருநாள் -
தங்க நாணயங்களை எடுத்துக் கொண்டு பணக்காரனுடைய மாளிகைக்குச் சென்றான்.
''ஐயா! நீங்கள் கொடுத்த இந்த நூறு நாணங்களையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். என்னுடைய பாட்டையும், என்னுடைய நித்திரையையும் எனக்குத் திருப்பிக் கொடுங்கள்!'' என்றான்.
பணக்காரனுக்கு அப்போதுதான் உண்மை புரிந்தது, தனக்கு ஏன் தூக்கம் போனது என்று.
***
