தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/யார் வள்ளல்?

யார் வள்ளல்?

யார் வள்ளல்?


PUBLISHED ON : ஜூலை 29, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 29, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்னொரு காலத்தில் பொதிகை மலையை நன்மாறன் என்ற அரசன் ஆண்டு வந்தான். வாரி வழங்கும் வள்ளலாக இருந்த அவன் புகழ் எங்கும் பரவியது. கரூர் அரசன் மணிமாறன் இதைக் கேள்விப்பட்டான்.

'சிறிய பகுதியை ஆளும் நன்மாறனுக்கு இவ்வளவு பேரா? நான் அவனைவிட வாரி வழங்கும் பேரும் புகழும் பெற வேண்டும்,' என்று நினைத்தான்.

தன் பிறந்த நாளன்று மக்களுக்கு வாரி வழங்கப் போவதாக அறிவித்தான். பிறந்த நாள் வந்தது. பரிசு பெறுவதற்காக நிறைய பேர் அரண்மனை முன் கூடினர். அங்கிருந்த மேடையில் நின்றபடி ஒவ்வொருவருக்கும் பரிசு வழங்கிக் கொண்டிருந்தான் அவன்.

அப்போது தெற்கு வாயில் வழியாகக் கிழவி ஒருத்தி வந்தாள். அவன் முன் கை நீட்டினாள். அவனும் பரிசு தந்து அனுப்பினான். சிறிது நேரம் சென்றது. மேற்கு வாயில் வழியாக அவள் வந்தாள்; அவன் முன் கையை நீட்டினாள். மீண்டும் பரிசு பெற அவள் வந்திருக்கிறாள் என்பதை அவன் தெரிந்து கொண்டான். அவளுக்குப் பரிசு தந்து அனுப்பினான்.

மூன்றாம் முறையாக அவள் வடக்கு வாயில் வழியாக வந்தாள். கையை நீட்டினாள். இந்தக் கிழவி திரும்பவும் வந்திருக்கிறாளே என்று முகத்தைச் சுளித்துக் கொண்டான். வேண்டா வெறுப்பாக அவளுக்குப் பரிசு தந்து அனுப்பினான்.

திரும்பத் திரும்பத் தான் வருவதை அரசர் தெரிந்து கொண்டார். அதனால்தான் வெறுப்பைக் காட்டுகிறார் என்பது அவளுக்குப் புரிந்தது. இருந்தும் அவள் நான்காம் முறையாகக் கிழக்கு வீதி வழியாக வந்தாள். அரசனின் முன் கையை நீட்டினாள். அவளைப் பார்த்ததும் அவனால் கோபத்தை அடக்க முடியவில்லை.

''கிழவி! நீ எத்தனை முறைதான் பரிசு பெற்றுச் செல்வாய்? என்னை ஏமாளி என்று நினைத்துக் கொண்டாயா? உனக்குப் பரிசு ஏதும் தர மாட்டேன்,'' என்று அவளை விரட்டினான்.

அங்கிருந்து செல்லாத அவள், ''அரசே! உங்களைப் போலவே பொதிகை மலை அரசர் நன்மாறனும் பிறந்தநாள் பரிசு வழங்கினார். அவரிடம் நான் திரும்பத் திரும்பப் பதினாறு முறை சென்று கையை நீட்டினேன். என்னைத் தெரிந்ததாகவே அவர் காட்டிக் கொள்ளவில்லை. ஒவ்வொரு முறையும் சிரித்த முகத்துடன் பரிசு தந்து அனுப்பினார். ஆனால், நீங்களோ நான் மூன்றாவது முறை வந்தபோதே கோபத்தைக் காட்டினீர்கள். நான்காவது முறை இல்லை என்றே விரட்டுகிறீர்கள்!'' என்றாள்.

இதைக் கேட்ட அவன் தன்னால் நன்மாறனைப் போல வள்ளலாக முடியாது என்பதை அறிந்து கொண்டான்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us