தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தேக்கும் நாணலும்!

தேக்கும் நாணலும்!

தேக்கும் நாணலும்!


PUBLISHED ON : ஜூலை 29, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 29, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு ஆற்றங்கரையில் ஒரு பெரிய தேக்கு மரம் இருந்தது. மிகுந்த வலிமையுடன் நன்றாக வேரூன்றி நின்ற அந்த தேக்கு மரத்திற்கு வெகு அருகிலேயே ஒரு நாணல் இருந்தது. அது ஒல்லியாக ஒடிந்து விடுவது போலிருந்தது.

அந்த நாணல், மெல்லிய காற்று அடிக்கும் போதெல்லாம் மெல்ல பூமியை நோக்கி வளையும்; காற்றின் வேகம் குறைந்ததும் நிமிர்ந்து கொள்ளும். இப்படி சதா சர்வகாலமும் குனிந்தும், நிமிர்ந்தும் வாழ்கின்ற நாணலைக் கண்டு தேக்கு மரம் சிரித்தது.

உடனே நாணல் அதனிடம், ''நண்பா! என்னைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய்?'' என்று கேட்டது.

உடனே தேக்கு, ''உன் அடிமை புத்தியை எண்ணித்தான் சிரிக்கிறேன். ஒரு சிறு காற்றடித்தால் கூட நீ வளைந்து அந்தக் காற்றுக்கு சரணம் போடுகிறாயே... நிமிர்ந்து உன் மேல் மோதும் காற்றை எதிர்த்தோம் என்று இல்லாமல் இப்படி எந்த நேரமும் குனிந்தும், வளைந்தும் வாழும் உன்னை நினைத்து நான் சிரிக்காமல் என்ன செய்ய... என்னைப் பார் காற்று என் மீது மோதினாலும் நான் ஒரு நிமிடமாவது வளைவேனா? என்மீது மோதும் காற்றுதான் பயந்து திரும்ப வேண்டும்'' என்று கூறி பலமாக சிரித்தது.

நாணல் பதிலேதும் பேசாமல் இருந்தது.

ஒருநாள் மிகப் பெரிய மழை பெய்தது. புயலும் காற்றும் பலமாக வீசின. அந்தப் பேய் சுழற்காற்றில் தேக்கு மரம் சில மணி நேரங்கள் நிமிர்ந்து நின்றது. திடீரென அதன் வேர்கள் மண்ணிலிருந்து பிய்த்துக் கொண்டன.

அந்தோ பரிதாபம்! அந்த வலிய பெரிய தேக்கு மரம் ஒரே நொடியில், 'மளாரென' பூமியில் விழுந்து விட்டது. வெள்ளம் அடித்துச் சென்று நாணலின் அருகிலிருந்த கரையோரத்தில் ஒதுக்கியது.

மறுநாள் புயல் ஒய்ந்ததும் தேக்கு மெல்ல திரும்பிப் பார்த்தது. அங்கே நாணல் மெல்ல காற்றில் ஆடியபடி நின்றது. உடனே தேக்கு அதனிடம், ''இத்தனை பெரிய புயலில் நீ அடியோடு விழாமல் நிற்கிறாயே! அது எப்படி?'' என்று கேட்டது.

''நண்பா! வளைந்து கொடுத்து வாழ்வது கேவலமானதல்ல; அடிமைத்தனமானதும் அல்ல; அது நமக்கு மிகவும் பாதுகாப்பானது. நீ அதைப் புரிந்து கொள்ளவில்லை, காற்றும், புயலும் வேகமாக வீசிய போதெல்லாம் நான் காற்றடிக்கும் திசையிலேயே வளைந்து விட்டேன். எனவே, என் வேரை காற்றாலும், புயலாலும் சிறிது கூட அசைக்க முடியவில்லை.

''ஆனால், நீயோ காற்றுக்கும், புயலுக்கும் எதிராக தலை நிமிர்ந்து நின்றாய். எனவே, காற்று உன் மீது மோதிய ஒவ்வொரு நிமிடமும் உன்னைத் தாங்கி நின்ற வேர்கள் அசையத் துவங்கின. முடிவில் நீ விழுந்து விட்டாய். இனியேனும் புரிந்துக் கொள். எப்போதுமே வளைந்து கொடுத்து வாழ்ந்தால் வருடக்கணக்கில் வாழலாம். எதிர்த்து வாழ்ந்தால் நிமிடத்தில் சாய்ந்து விடத்தான் வேண்டும்,'' என்று கூறியது நாணல்.

நாணல் கூறியதன் உண்மையை உணர்ந்த தேக்கு தன் முட்டாள்தனத்தை எண்ணி அழுதபடி கரையில் கிடந்தது.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us