
புதுச்சேரி, அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில், 2014ல், 10ம் வகுப்பு இறுதி தேர்வு எழுதிய போது நடந்த நிகழ்வு...
தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' கல்வித்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய அறிவிப்பு வந்திருந்தது. என் தந்தை, 'அலுவலகத்திலே, 'பிரின்ட்' எடுத்து வருகிறேன்...' என்று பெருமிதமாக தெரிவித்தார். அதன்படி எடுத்து வந்து கொடுத்தார்.
அதை பயன்படுத்தி, முதல் இரண்டு நாள் தேர்வுகளை எழுதினேன். மூன்றாம் நாள், புதிதாக வந்திருந்த தேர்வு கண்காணிப்பாளர், ஹால் டிக்கெட் பிரதியின் பின்புறத்தை பார்த்ததும், என் மீது கோபப் பார்வையை வீசினார். புரியாமல் தவிப்புடன் நின்றேன்.நடந்தது இது தான்...
சிக்கனம் கருதி, அலுவலகத்தில் ஏற்கெனவே ஒரு பக்கம் பிரின்ட் ஆகியிருந்த காகிதத்தை பயன்படுத்தியிருந்தார் என் தந்தை. ஹால் டிக்கெட்டின் பின்புறம், வேறு தகவல் இருந்ததால் கண்காணிப்பாளருக்கு சந்தேகம். நான், 'பிட்' அடிப்பதாக எண்ணி, கேள்வி மேல் கேள்வி கேட்டார்.
சக மாணவர்கள் முன்னிலையில் விசாரித்ததால் மனக்காயம் அடைந்தேன். நிதானமாக, விபரத்தை எடுத்துரைத்த பின் அமைதியானார். மறுநாள், புதிய தாளில் பிரின்ட் எடுத்து சென்றேன்.
என் வயது, 24; மருத்துவம் பயின்று பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறேன். ஒரு வெள்ளைத்தாளை சிக்கனம் பிடிக்க முயன்றதால், சிக்கலில் மாட்டிய தவிப்பு நினைவில் பதிந்துள்ளது. இது போன்ற செயல்களை தவிர்க்க அந்த அனுபவத்தில் இருந்து கற்றுள்ளேன்.
- ரா.அருண்குமார், புதுச்சேரி.

