sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

மாய விழிகள்! (6)

/

மாய விழிகள்! (6)

மாய விழிகள்! (6)

மாய விழிகள்! (6)


PUBLISHED ON : ஆக 19, 2023

Google News

PUBLISHED ON : ஆக 19, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதை: பள்ளி சிறுமி தியா, கிராமத்தில் பாட்டி வீட்டருகே தோப்பு கிணற்றில் தண்ணீர் குடித்தபோது பார்வையில் சக்தி கிடைத்தது. அந்த கிணற்றருகே கண்ட மூதாட்டி பற்றி கூறியபடி தோழி அனுவை அங்கு அழைத்து சென்றாள். இனி -



''தெரியல... அந்த பாட்டிய பார்த்தாலே எனக்கு பயமா இருந்தது. ரொம்ப வயசானவங்க...'' என்றாள் தியா.

தோப்புக் கிணற்றுக்கு வந்த போது முன் போலவே, அந்த இடம் நிசப்தமாக இருந்தது. மெல்லிதாய் பூச்சிகளின் ரீங்காரம் மட்டும் கேட்டது.

''இந்த கிணறு தான்...''

குனிந்து கிணற்றை எட்டி பார்த்தாள் அனு.

தண்ணீர் மேலேயே இருந்தது; அவள் முகம் கூட தெரிந்தது.

''தண்ணீர் ரொம்ப தெளிவாக இருக்கு அக்கா...''

''போன முறை வந்தப்ப ஒரு வாளி இருந்தது. தண்ணீர் குடித்து பார்த்தேன். இப்போ அந்த வாளிய காணாமே...'' என்றாள் தியா.

''அதனால என்ன... தண்ணீர் எப்படி எடுக்கணும்ன்னு எனக்கு தெரியும்...'' என்றாள் அனு.

சுற்றும் முற்றும் பார்த்தாள். அங்கு படர்ந்து இருந்த கொடியை பிடுங்கி எடுத்தாள்.

விழுந்து கிடந்த தென்னை ஓலையில் கீற்றை பிரித்து எடுத்தாள். சில நொடிகளிலேயே பின்னி, ஒரு கூடையாக மாற்றினாள்.

அவள் செயலை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தாள் தியா.

அந்த கூடையை கொடியோடு பிணைத்து கிணற்றுக்குள் போட்டாள்.

''தண்ணி நிறைய வராது. ஆனால், ஓரளவுக்கு எடுத்துடலாம்...''

கொடியோடு பிணைக்கப்பட்டிருந்த கூடையை கிணற்றுக்குள் போட்டு லேசாக அலசி, விசுக்கென லாவகமாக மேலே எடுத்தாள் அனு. கூடையில் முக்கால் அளவு தண்ணீர் வந்தது.

''அக்கா... பிடி, பிடி...''

தியா அதை பிடித்துக் கொள்ள கூடையில் ஒழுகிய தண்ணீரை, உள்ளங்கைகளை குவித்து பிடித்து குடித்தாள் அனு.

''சூப்பர் டேஸ்ட்... எங்க ஊர்ல புது நீரூற்று வரும் போது இப்படித் தான் இருக்கும்...''

ஓலைக் கூடையில் மீண்டும் தண்ணீர் சேந்தி இருவரும் குடித்தனர்.

''ஒரு பாட்டி இருப்பாங்கன்னு சொன்னியேக்கா...''

''போன முறை இங்கே தான் பார்த்தேன்...''

பார்வையால் தேடினர்.

மூதாட்டி கண்ணுக்கு தென்படவில்லை.

சற்று தொலைவில் குடிசை தெரிந்தது.

''அங்கே போய் பார்க்கலாமாக்க...''

''ஐயோ... எனக்கு கொஞ்சம் பயம் அனு...''

''பரவாயில்லை... நான் இருக்கிறேனே...''

அந்த குடிசைக்கு வந்தனர். பழசாக இருந்தாலும் சுத்தமாய் பராமரிக்கப்பட்டிருந்தது.

கொஞ்சம் பழைய துணியும், நாலைந்து மண் பாத்திரங்களும் இருந்தன. ஒரு மண் சட்டியில் கீரை வேக வைக்கப்பட்டிருந்தது.

ஆச்சரியமாக பார்த்தாள் அனு.

''அக்கா... இது காயகல்ப கீரை...''

''அப்படின்னா...''

''இந்த கீரையை சாப்பிட்டால் ஆரோக்கியமும், இளமையும், ஆயுளும் பெருகும்ன்னு சொல்லுவாங்க. இந்த பாட்டிக்கு மூலிகைகளைப் பற்றி நல்லா தெரிந்திருக்கு...''

''இந்த கீரையை நான் பார்த்ததே இல்லை...''

''இது, இயற்கையாக விளையக் கூடியது. நாம் பயிரிட முடியாது. எங்க காட்டுப் பகுதியில் ரொம்ப அரிதாக கிடைக்கும். யார் கண்ணில் பட்டாலும், உடனே பறித்து வந்து விடுவர். இந்த ஏரியாவில், எங்கேயோ இது வளர்ந்திருக்கு...''

''சரி... வா போகலாம் நேரமாச்சு...''

வீட்டை நோக்கி நடந்தனர்.

வேடிக்கை பார்த்தபடியே வந்த அனு, சட்டென தியாவின் கையைப் பிடித்தாள்.

''அக்கா... அக்கா...'' என்று பதறினாள்.

''என்னாச்சு...'' என கேட்டாள் தியா.

''அக்கா... எனக்கு, என்னவோ செய்யுது. என் கண் முன், புகை மாதிரி தெரியுது...'' என்றாள் அனு.

திடுக்கிட்டாள் தியா.

''நீ எதை பார்க்கிறாய்...''

''அந்த பெயர் பலகையை தான்...''

''சற்று பொறுமையாக இரு. புகை மூட்டம் குறையுதா...''

''ஆமாக்கா... ஆனால், அந்த பெயர் பலகை மங்கலா தெரியுதே...''

பெயர் பலகை மறையாமல் தெளிவாக தெரிந்தது.

''இப்பவும் மங்கலா தான் தெரியுதா...''

''ஆமாக்கா...''

''சரி... கண்ணை சிமிட்டு...''

சிமிட்டினாள் அனு.

''இப்ப, பெயர் பலகை எப்பவும் போல தெரியுதுக்கா... எனக்கு என்னாச்சு...''

தோப்புக் கிணற்று தண்ணீரை குடித்த அனுவுக்கும், பொருட்களை மறைய வைக்கும் சக்தி கிடைத்திருப்பதை அறிந்த தியா, ''அது ஒன்றும் இல்லை. அதைப்பற்றி பின்னர் சொல்கிறேன். இப்போ நான் சொல்வது போல செய்...'' என்றாள்.

''சரிக்கா... ஆனால், பயமாக இருக்கு...''

''பயப்பட ஒன்றுமே இல்லை. உனக்கு நேராக ஒரு மின் கம்பம் தெரியுதா...''

''ஆமாக்கா...''

''அதை உற்று பாரு...''

தியா கூறியபடியே செய்தாள் அனு.

புகை மூட்டம் தோன்றியது. மின் கம்பம் மங்கலானது.

''அக்கா... எனக்கு, அந்த மின் கம்பம் மிகவும் மங்கலா தெரியுது...''

தியா, அந்த மின் கம்பத்தை பார்த்தபோது மறையவில்லை.

'அனுவின் கண்ணுக்கு மங்கலாக தெரியும் பொருள், தன் கண்ணுக்கு மறையவில்லையே' என சிந்தித்தாள் தியா.

அந்நேரம், ஒரு நபர், மிதிவண்டியில் வந்தார். மிதிவண்டியை, மின் கம்பத்தின் அருகில் நிறுத்தினார். பிளாஸ்டிக் வாளியையும், ஒரு பிட் நோட்டீசையும் எடுத்து, மின் கம்பம் நோக்கி சென்றார். வாளியில் இருந்த பசையை, அந்த பிட் நோட்டீசுக்கு பின்புறம் தடவி, மின் கம்பத்தில் ஒட்டி சென்றார்.

அதைப் பார்த்து வியந்தாள் தியா.

'என்ன இது. அனுவின் கண்ணுக்கு மங்கலாக தெரியும் மின் கம்பம், அந்த மனிதருக்கு தெளிவாக தெரிகிறது. அதில் ஒரு பிட் நோட்டீசை ஒட்டி விட்டு செல்கிறாரே'

தியாவுக்கு, பெரும் குழப்பம் ஏற்பட்டது.

நீண்ட நேரம், அந்த மின் கம்பத்தையே உற்றுப் பார்த்து கண் சிமிட்டினாள் அனு.

இப்போது மின் கம்பம் தெளிவாக தெரிந்தது.

''எனக்கு என்னாச்சுக்கா...''

''சிறிது நேரம் பொறு. வா போகலாம்...''

'அனுவின் பார்வைக்கு, மங்கலாக தெரிந்த அந்த மின் கம்பம், மற்றவர்களுக்கு மறைந்து இருக்க வேண்டும்.

ஆனால், அது மறையவில்லை. ஒருவேளை இந்த நோட்டீசை ஒட்டியவனும், தோப்புக் கிணற்று தண்ணீரை குடித்திருப்பானோ... அதனால் தான், என்னைப் போல அவன் கண்ணுக்கும், இந்த மின் கம்பம் மறையாமல் தெரிகிறதோ'

நடந்தபடியே சிந்தித்தாள் தியா.

''என்னக்கா ஒன்னுமே சொல்லாம வர்ற... எனக்கு பயமா இருக்கு...''

''வீட்டுக்கு வா அனு... எல்லாம் விபரமா சொல்றேன்...''

''எனக்கு ஏதாவது பிரச்னையா...''

''நிச்சயமா இல்ல. போற வழியில, எதையும் உற்றுப் பார்க்காதே...''

அறிவுரைத்து வீட்டுக்கு அழைத்து வந்தாள் தியா.

இருவரும் வீட்டின் அறையில் அமர்ந்தனர்.

- தொடரும்...

- ஜே.டி.ஆர்.







      Dinamalar
      Follow us