
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார், போர்டு உயர்நிலைப் பள்ளியில், 1968ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்தபோது, வகுப்பாசிரியர் சீனுவாச ஐயங்கார், பள்ளி தலைமை ஆசிரியராகவும் இருந்தார். ஒழுக்கம், நீதியை பின்பற்ற வலியுறுத்துவார்.
பொது தேர்வு முடிந்து, மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா நடந்தது. அதில், 'படிப்பை முடித்து, பணிக்கு செல்லும் போது, உழைப்பிற்கேற்ற ஊதியம் மட்டும் பெற்று, உண்மை, நேர்மையாக வாழுங்கள். லஞ்சம் வாங்காமல் பணி செய்யுங்கள்...' என்றார். விரிவான விளக்கமும் அளித்தார்.
படிப்பை முடித்து, கூட்டுறவு துறையில் பணியில் சேர்ந்தேன். லஞ்சம் வாங்காமலும், அதிகாரிகளுக்கு வாங்கி கொடுக்காமலும் நேர்மையாக பணி செய்தேன். ஊழல் பெருச்சாளியாக இருந்த கூட்டுறவு துறை மண்டல இணைப்பதிவாளர் பொய் குற்றம் சாட்டி என்னை பணிநீக்கம் செய்தார்.
லஞ்சம் தந்தால் மீண்டும் சேர்ப்பதாக கூறினார். அதை மறுத்து, நீதிமன்றத்தில் முறையீடு செய்து மீண்டும் பணியை பெற்றேன். நேர்மையாக சேவையாற்றி ஓய்வு பெற்றேன்.
தற்போது, எனக்கு, 72 வயதாகிறது; அந்த ஆசிரியர் போதித்த நேர்மை ரத்தத்தில் கலந்துள்ளது. அதன் வழி மகிழ்வுடன் வாழ்கிறேன்.
- கி.மணி, திருவண்ணாமலை.
தொடர்புக்கு: 96267 93890