PUBLISHED ON : மார் 11, 2023

மதுரை, ஆரப்பாளையம், மங்கையர்கரசி மேல்நிலைப் பள்ளியில், 1993ல், 10ம் வகுப்பு படித்த போது, தமிழாசிரியையாக இருந்தார் கந்தம்மாள். மொழியை திறனுடன் மிக தெளிவாக கற்பிப்பார். நாக்கை உள்மடக்கி, 'ழ' என்ற எழுத்து ஒலியை உச்சரிக்க பயிற்சி தந்தார்.
ஒருமுறை, 'எங்கள் ஊருக்கு பேருந்து வேண்டி' என்ற தலைப்பில் விண்ணப்பம் எழுத சொன்னார். ஒரு மாணவி, 'எங்கள் ஊருக்கு, போய் வர என்பதை, 'பேய்' வர என, பிழையாக எழுதி இருந்தாள்.
அதை படித்ததும், 'ஏன்டி... நாம போறதுக்கே பேருந்து இல்லை; இதில், பேய் வரதுக்கு எப்படி பேருந்து விடுவாங்க...' என்றார். சிரிப்பால் அதிர்ந்தது வகுப்பறை.
அமைதிபடுத்தியபடி, 'நகைப்பதற்காக இதை கூறவில்லை; ஒரு துணைக்கால் போடாததால், சொல்லின் பொருளே மாறிவிட்டதே... எப்போதும் கவனமாக எழுதி பழகுங்கள்...' என அறிவுரை கூறினார்.
அதை மனதில் பதித்து, பயிற்சி செய்து கடைப்பிடித்து வருகிறேன். யார் எழுதியதில் தவறு இருந்தாலும், என் கண்ணில் பட்டு விடுவதால், 'அம்மா... நீங்க ஆசிரியராக இருந்தால், அவ்வளவு தான்... நல்ல வேளை நாங்க தப்பித்தோம்...' என்று நகைச்சுவை பொங்க கூறுவாள் என் மகள்.
எனக்கு, 42 வயதாகிறது; ஆய்வக நுட்பவியலில் டிப்ளமோ படித்து சொந்தமாக, ரத்த பரிசோதனை நிலையம் நடத்தி வருகிறேன். அந்த ஆசிரியை கற்பித்தபடி, எங்கும், எப்போதும் தமிழ் மொழியை தெளிவாக உச்சரித்து வருகிறேன்.
- வே.அருணா செல்வகுமாரி, மதுரை.