
ஒரு கிராமத்தில் பணக்காரர் ஒருவர் இருந்தார். அவர் இயல்பிலேயே மிகப் பெரிய கஞ்சன் என்றாலும், தம்முடைய கருமித்தனத்தை பிறர் அறிந்து கொள்ள முடியாமல் மறைத்து வந்தார்.
எப்போதும் அவர் கிழிந்த கந்தல் வேட்டி யைத்தான் மடித்துக் கட்டியபடி வயல் வெளிக்கு போவார்.
'நீங்கள் எவ்வளவு வசதி மிக்கவர். நீங்கள் ஏன் கிழிந்த உடையை உடுத்திக் கொண்டு திரிகிறீர்கள்?' என்று யாராவது அவரிடம் கேட்டால், 'நான் வசதியானவன் என்பதுதான் நம் ஊரில் எல்லாருக்கும் தெரியுமே. இங்கே நான் எப்படி உடை உடுத்தினால் என்ன?' என்பார்.
அந்தக் கருமி பணக்காரர் உடுத்துக்கிற ஆடை விஷயத் தில் மட்டும்தான் அப்படி என்பதில்லை. அவருடைய வீட்டைக் கூடப் பல ஆண்டு காலமாகப் பழுது பார்க்காமலும், செப்பனிடாமலும் விட்டு வைத்திருந்தார். 
ஒருசமயம் அந்தக் கஞ்சப் பணக்காரர் மாடு விற்க வெளியூருக்குப் போனார். அச்சமயம் அவருடைய ஊர்க்காரர் ஒருவரும் அங்கு வந்திருந்தார்.
கஞ்சப் பணக்காரைப் பார்த்து வணக்கம் தெரிவித்த அவர், ''என்னங்க இது? அசலுாருக்காவது நல்ல வேட்டி சட்டையைப் போட்டுக்கிட்டு வரக் கூடாதா?'' என்று கேட்டார்.
''இங்கே நம்மை யாருக்குத் தெரியும்? தெரியாத ஊர்ல நாம எந்த வேட்டியைக் கட்டிக்கிட்டா என்ன?'' என்றார் கஞ்சப் பணக்காரர்.
''அதுவும் நியாயம் தானுங்க,'' என்று கூறிவிட்டு போய் விட்டார் ஊர்க்காரர்.
இப்படி கேட்பவர்களுக்கெல்லாம் அவர் சாமர்த்தியமாகப் பதில் சொல்லி அனுப்பினாலும், அவருடைய கந்தல் உடை அவருடைய வியாபாரத்தைப் பெரிதும் பாதித்தது.
அவர் கூறிய மாதிரியே உள்ளூர் என்றால் அவர் எவ்வளவு கந்தல் உடையை உடுத்தியிருந்தாலும் அவருடைய செல்வ நிலை எல்லாருக்கும் தெரியும் என்பதால் அவரை அனைவரும் மதிப்பர். அதுவே, வெளியூர் என்ற போது, அயலுார்க் காரர்களை அவர்களுடைய தோற்றத்தையும், ஆடை ஆபரணங்களையும் வைத்துத்தான் எடை போட்டனர். அதனால் கஞ்சப் பணக் காரரின் மாடுகளை மிகவும் குறைந்த விலைக்கே அனைத்து வியாபாரிகளும் கேட்டனர்.
கருமிப் பணக்காரரின் கந்தல் உடைகளைப் பார்த்து, 'ஐயோ பாவம்! குடிக்கக் கஞ்சிக்கும், கட்டுவதற்கு துணிக்கும் கூட வழியில்லாதவர் போலும் இந்த ஆள். அதனால் வந்த விலைக்குத் தன் மாடுகளை விற்று விடுவார்' என்ற அவர்கள் கருதினர்.
அவர் மாடுகளை விற்று விட்டு, டிராக்டர் வாங்கி விவசாயம் பண்ணப் போகிறார் என்ற விஷயம் அவர்களுக்குத் தெரியுமா என்ன?
பத்தாயிரம் ரூபாய் பெறுமான முள்ள அவருடைய காளை மாடுகளை, ஐயாயிரம் ரூபாய்க்கே எல்லாரும் கேட்டனர்.
கஞ்சப் பணக் காரருக்கு அதன் காரணம் என்ன வென்று புரியவில்லை. சிறிது நேரத்தில் அவருடைய ஊர்க்காரர் மீண்டும் அவரைப் பார்த்தார்.
''என்னங்க இன்னுமா உங்க மாடுகளை விற்க முடியலே,'' என்றார்.
''என்னப்பா! இந்த ஊர்ல பத்தாயிரம் ரூபாய் மாட்டை ஐயாயிரம் ரூபாய்க்கு கேட்கிறாங்க. ரொம்ப அநியாயமா இல்ல இருக்கு,'' என்றார் கஞ்சப் பணக்காரர்.
''அட நீங்க ஒண்ணு. மாடு விக்க வந்தவரு வெள்ளையும், சொள்ளையுமா வந்து நின்னா விலை கேட்கிறவன் யோசிச்சு கேட்பான். இப்படிக் கந்தல் துணியைக் கட்டிக்கிட்டு வந்து நின்னா பாதி விலைக்கு தாங்க கேட்பாக,'' என்றான் அவருடைய ஊர்க்காரன்.
''அட அதுதானா காரணம்! இப்ப என்ன பண்றது?'' என்றார் கஞ்சப் பணக்காரர்.
''இது என்னங்க பெரிய விஷயம்? அதோ அந்த துணிக்கடையில் போய் பார்டர் போட்ட ஒரு வேட்டியும், சரிகை வைத்த ஒரு கெண்டைக்கரைத் துண்டும் வாங்கிக் கட்டிக்கிட்டு, மாப்பிள்ளை மாதிரி வந்து நில்லுங்க. அப்புறம் பாருங்க, மாடு எப்படி விலை போகுதுன்னு,'' என்றான் ஊர்க்காரன்.
கஞ்சப் பணக்காரருக்கு அதுவும் சரி என்றே தோன்றியது.
''அப்ப நீ கொஞ்சம் மாட்டைப் பார்த்துக்கப்பா. நான் போய் வேட்டி, துண்டு வாங்கிகிட்டு வந்துடறேன்,'' என்று கூறிவிட்டு துணிக்கடையை நோக்கி நடந்தார்.
துணிக்கடைக்குச் சென்று துணி விலையைக் கேட்டபோது அவருக்கு, 'பகீர்' என்றது.
''வேட்டி 300 ரூபாய்; துண்டு 200 ரூபாய்,'' என்று விலை சொன்னான் துணிக்கடைக்காரன். 
'ஒருநாள் கூத்துக்கு மீசை மழித்த கதையாக இருக்கிறதே... நம்முடைய மாட்டை விற்பதற்கு நாம் ஐந்நூறு ரூபாய் செலவழித்து வேட்டி, சட்டை எடுப்பதா?' என்று யோசித்தார் கஞ்சப் பணக்காரர். 
அது நியாயமில்லை என அவருக்குத் தோன்றியது. அதனால் எடுத்த வேட்டியைக் கடைக்காரரிடமே கொடுத்து விட்டு, வந்த வழியே திரும்பி நடந்தார் கஞ்சப் பணக்காரர்.
இவர் என்ன சொன்னாலும் திருந்த மாட்டார் என்பதைப் புரிந்து கொண்ட ஊர்க்காரன், 'நமக்கேன் பொல்லாப்பு' என்று நினைத்தவனாக, ''அப்ப நான் புறப்பட றேனுங்க. அடுத்த வாரச் சந்தை வரைக்கும் நீங்க இங்கே நின்று மாட்டை வித்துட்டு வாங்க,'' என்று எகத்தாளமாகக் கூறிவிட்டுப் போய்விட்டான்.
கஞ்சப் பணக்காரர் எப்படியாவது தன் மாடுகளை விற்று விட வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான யோசனையில் ஈடுபட்டார்.
அப்போது பகட்டான உடையணிந்த தரகன் ஒருவன் அந்த பக்கமாக வந்தான். அவனைப் பார்த்த கஞ்சப் பணக்காரருக்கு, இவன் வாட்டசாட்டமாக ஆடம்பர உடை யணிந்து இருக்கிறான். இவனையே சிறிது நேரம் நம்முடைய மாடுகளுக்குச் சொந்தக்காரன் போல் நடிக்க கூறி, விலை பேசி விற்கச் சொன்னால் என்ன? என்ற யோசனை தோன்றியது.
உடனே, அந்தத் தரகனை அழைத்து  விவரத்தைக் கூறி, ''நீயே இதை விற்றுக் கொடுத்து விடு. உனக்குப் புண்ணியமாகப் போகும்,'' என்றார் கஞ்சப் பணக்காரர்.
அதற்கு அவன்,  ''தரகு எவ்வளவு தருவீர்கள்?'' என்று கேட்டான்.
''தரகா. அதெல்லாம் கிடையாது. ஏதோ காப்பிச் செலவுக்கு அஞ்சு, பத்து கொடுப்பேன்,'' என்றார் கஞ்சப் பணக்காரர்.
'இவன் கடைந்தெடுத்த கருமி. இவனை மொத்தமாக மொட்டையடிக்க வேண்டும்'' என்று எண்ணிய தரகன், ''சரி உங்களுக்கு இஷ்டமானதைக் கொடுங்கள். நானே மாட்டை விலைபேசி விற்றுத் தருகிறேன். ஆனால், நீங்கள் மாடுகளுக்கு பக்கத்தில் நின்றால் யாரும் நல்ல விலைக்குக் கேட்க மாட்டார்கள். நீங்கள் சற்று மறைவாகப் போய் நில்லுங்கள். மாட்டை விற்றுப் பணம் வாங்கியதும் நான் உங்களை அழைக்கிறேன்,'' என்றான் தரகன்.
'சரி' என்று கூறிவிட்டு, சற்றுத் தொலைவில் உள்ள ஒரு மண்டபத்தில் போய் அமர்ந்தார்.
சிறிது நேரத்தில், அந்தத் தரகன் கஞ்சனின் மாடுகள் இரண்டையும் ஒரு வெளியூர்காரனுக்கு விற்று, பத்தாயிரம் ரூபாயும் வாங்கி தன் சட்டைப் பையில் மறைத்து வைத்து விட்டு, கஞ்சப் பணக்காரர் என்ன செய்கிறார் என்று திரும்பிப் பார்த்தான்.
கருமி யாரோ ஒரு ஆளுடன் பேசிக் கொண்டிருந்தார்.
உடனே தரகன் மாட்டை வாங்கியவர் களிடம், ''ஐயா! எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். அதோ அந்த மண்டபத்தில் அமர்ந்திருக்கிறாரே அவர் ஒரு தரகர். அவர் இன்று காலையில் என்னோடு சிறிது நேரம் இங்கும், அங்கும் வந்து கொண்டிருந்தார். ஆனால், அவரால் என் மாடுகளை விற்றுத் தர முடியவில்லை. 
''இப்போது நீங்களாகவே வந்துதான் என் மாடுகளை வாங்கினீர்கள் என்றாலும், அந்தத் தரகர் என்னிடம் கமிஷன் கேட்பார். அதனால், நானும் உங்களுடனேயே வருகிறேன். அந்தத் தரகர் கூட வந்தால், மாடுகளை இன்னும் விலைபேசி முடிக்கவில்லை. வண்டியில் பூட்டி, ஓட்டி பார்க்கிறோம் என்று சொல்லுங்கள், ஊர் எல்லையைத் தாண்டியதும் நான் என் வழியில் போய் விடுகிறேன். இந்தத் தரகரிடமிருந்து தப்பு வதற்கு இதுதான் சரியான வழி,'' என்றான்.
மாடுகளை வாங்கியவர்களும், 'சரி' என்று தலையாட்டி விட்டு, அந்த மாடுகளை தங்கள் வண்டியில் பூட்டினர். தரகனும் வண்டியில் ஏறிக் கொண்டான். வண்டி மண்டபம் அருகில்சென்ற போது கருமிப் பணக்காரர், ''மாடுகளை வண்டியில் பூட்டிக் கொண்டு எங்கே போகிறீர்கள்? விலை பேசி முடித்து விட்டீர்களா?'' என்று கேட்டார்.
''இல்லை. இவர்கள் நம் மாடுகளை வண்டியில் பூட்டி ஓட்டிப் பார்க்க வேண்டும் என்றனர். ஊர் எல்லை வரை போய்விட்டு வருகிறோம். நீங்கள் இங்கேயே உட்கார்ந்திருங்கள்,'' என்றான் வண்டியில் இருந்த தரகன்.
கஞ்சப் பணக்காரரும் அதை உண்மையென நம்பிவிட்டார்.
அந்த இடத்தைக் கடந்ததும் வண்டி வேகமாகப் பறந்தது. ஊர் எல்லையைத் தாண்டியதும் வண்டியை விட்டு இறங்கிக் கொண்ட தரகன், ''எதற்கும் கொஞ்சம் வேகமாகவே ஓட்டிச் செல்லுங்கள். இல்லாவிட்டால் அந்தத் தரகன் ஓடிவந்து உங்களிடம் கமிஷன் கேட்டுத் தகராறு செய்தாலும் செய்வான்,'' என்று கூறினான்.
மாடுகளை வாங்கியவர்கள் அதுவும் சரிதான் என்று கருதி, வண்டியை வேகமாக ஓட்டிச் சென்றனர். தரகனும் குறுக்குப் பாதையில் இறங்கி வேகமாகச் சென்று தலைமறைவானான்.
வண்டி திரும்பி வரும், வரும் என்று எண்ணிக் காத்திருந்த கஞ்சப் பணக்காரர், நீண்ட நேரமாகியும் திரும்பாததால் சந்தேகப்பட்டு ஊரின் எல்லை வரை ஓடிச் சென்று தன் மாடுகள் பூட்டப்பட்ட வண்டியைத் தேடினார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அவருடைய மாடுகள் பூட்டப்பட்ட வண்டியைக் காணோம்; தரகனையும் காணோம்.
தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை உணர்ந்த  கஞ்சப் பணக்காரர், ''ஐயோ! என் மாடுகள் போச்சே! போச்சே!'' என்று தலையில் அடித்துக் கொண்டார்.
அன்றுமுதல் தன் கஞ்சத்தனத்தை கைவிட்டுத் திருந்தினார்.

