
ஹலோ ஜெனி ஆன்டி... நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். உங்ககிட்ட என் மனதில் உள்ளதைச் சொல்லி அழணும் போல் உள்ளது. மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். எனக்கு, 'சிங்கப்பல்' இருக்கு. அந்த இரண்டு பல்லுக்கும் இடையே ஓட்டை இருக்கு. அதன் காரணமாக, என் பள்ளியில் எல்லாரும் என்னை , 'ஓட்டை ஓட்டை'ன்னு கிண்டல் பண்றாங்க. மூன்றாம் வகுப்பு படிக்கும்போது டாக்டர்கிட்ட காட்டினாங்க என் பெற்றோர். நான் வளர, வளர சரியாயிடும்னு சொன்னாங்க டாக்டர். அப்ப இது எனக்கு பெரிசா தெரியல. ஆனா, இப்ப அப்பாவிடம் சொல்லி, 'ஏதாவது செய்யுங்கன்'னு சொன்னா, கண்டுக்கவே மாட்றாங்க...
'ஓட்ட பல்லு... ஓட்டப் பல்லு'ன்னு பசங்க என்னை கூப்பிடும்போது, ரொம்ப கவலையாக இருக்கு. சில சமயம் செத்துடலாம்னு கூட தோணுது. தயவு செய்து நீங்கள்தான் இதற்கு ஒரு நல்ல முடிவு சொல்லணும் ஆன்டி.
ஹாய் செல்லம்... என்ன இது? இந்த சின்ன விஷயத்துக்கு போய் செத்துடலாம்னு நினைப்பியா என்ன? 'சிங்கப்பல்'லுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் தெரியுமா? எனக்கு தெரிஞ்சி நிறைய பேருக்கு இந்த சிங்கப்பல் மிகவும் பிடிக்கும். சிரிக்கும்போது, 'ஸ்டைலா' வெளியே தெரியும். அது ரொம்ப, 'லக்கி'ன்னும் சொல்வாங்க.
பாரேன்...உன்னோட எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும். இதுக்குப் போய் செத்துப் போயிடுவேன் அப்படி, இப்படின்னு இனிமேல் நீ பேசவே கூடாது. உன்னோட பிரண்ட்ஸ்க்கு பொறாமை. நமக்கு, 'சிங்கப்பல்' இல்லையேன்னு. அதனாலதான், அதுல இருக்கும் ஓட்டைய பார்த்துட்டு, கிண்டல் பண்ணி உன்னோட மனச நோகடிக்கிறாங்க... சரியா? இனிமேல் நீ அவர்களைப் பார்த்து, 'நான் சிங்கப்பல் அழகி; லக்கி ஸ்டார்!'னு சொல்லு. எந்த விஷயத்தையும், 'பாஸிடிவ்' ஆ எடுத்துக்கணும். அப்போதான் நீ வாழ்க்கையை ஜெயிக்க முடியும்.
நடிகைகளில், பாவனா, சுவாதி, கார்த்திகா இவர்களுக்கெல்லாம்,' சிங்கப்பல்' அழகாக இருக்குதானே... ஸோ, கவலைப்படாதே... சந்தோஷமா இரு.
பற்களுக்கு கால்ஷியம் சத்து குறைவாக இருக்கும்போது இப்படி, 'கேப்' விழும். கால்ஷியம் சத்து நிறைந்த உணவு பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் இந்த, 'கேப்' மறையும். சாப்பிடும் உணவு பொருட்களை கால்ஷியம் சத்தாக மாற்றி ரத்தத்தில் கலப்பதற்கு விட்டமின் டி, விட்டமின் டி 3 தேவை.
இந்த விட்டமின் டி 3, இளம் காலை சூரியனில் இருந்து பெறலாம். வெயிலில் அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய். அப்போது இந்த விட்டமின் டி3 உனக்கு கிடைக்கும். அத்துடன், உன் பெற்றோர் ரத்த சம்பந்தத்தில் திருமணம் செய்திருந்தாலும் பற்கள் குறைபாடுகள் சம்மந்தப்பட்ட நோய்கள் வரும். இந்த பல் ஓட்டைக்கு இதுவும் ஒரு காரணம் மகளே...
உன்னுடைய ஊர் தேனி என்பதால், தேனியில் உள்ள, 'கானா விளக்கில்' இருக்கும் தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு, 'இலவச ட்ரீட்மென்ட்' செய்கின்றனர். அங்கு சென்று சரி செய்துகொள். சரியா? இப்போ, கண்ண தொடச்சிகிட்டு, 'சிரி' பார்க்கலாம்!
செல்ல முத்தங்களுடன்,
ஜெனி பிரேம்.

