
கொங்கராயக்குறிச்சி கோவில் முன், படர்ந்து நிற்கும் ஆலமரம் தான், பறவைகளுக்கு அடைக்கலம். அதன் கிளையில் கூடு கட்டி, சந்தோஷமாக வாழ்ந்து வந்தன பறவைகள். அதில், ஜோடியாக கூடு கட்டிய அணில், நான்கு குட்டிகளை ஈன்று இருந்தது.
வல்லநாட்டு மலையில், இலந்தை பழுத்திருப்பதை கேள்வி பட்டன அணில்கள். உடனே, அங்கு சென்று பழங்களை ருசித்து பசியாற விரும்பின.
'மலைக்கு சென்று திரும்பும் வரை, குட்டிகளை யார் கவனித்து கொள்வார்...'
கேள்வி எழுப்பியது ஆண் அணில்.
'பக்கத்து கிளையில் கூடமைத்துள்ள தேனீக்களிடம் கவனித்துக் கொள்ளும்படி, உதவி கேட்கலாம்...' என்றது பெண் அணில்.
மறுப்பு தெரிவிக்கும் விதமாக, 'ச்சே... கருப்பாக இருக்கும் தேனீக்களை பார்த்தாலே அருவெறுப்பா இருக்கு. தும்பைப் பூ நிறத்தில் இருக்கும், கொக்கு அண்ணனிடம் உதவி கேட்கலாம்; அது கவனமாக பார்த்துக் கொள்ளும்...' என்றது ஆண்.
'வீண் வாக்குவாதம் ஏற்படும்' என நினைத்து ஆமோதிப்பதாக தலையாட்டியது பெண்.
'நாங்க, வல்ல நாட்டு மலைக்குச் சென்று, எலந்த பழங்களை ருசித்து வருகிறோம்; அதுவரைக்கும், எங்க குட்டிகள் உன் பொறுப்பில் இருக்கட்டும்; கவனமாக பார்த்துக்கொள்...' என்றது ஆண் அணில்.
'சந்தோஷமாக போய் வாருங்க... கவலை வேண்டாம்... நான் பார்த்து கொள்கிறேன்...' என்றது கொக்கு.
அவை புறப்பட்டதும் சற்று நேரத்தில் கொக்கு பறந்து போய், பருந்து நண்பனை அழைத்து வந்தது. கூட்டில் அணில் குட்டிகளை கண்டதும், 'நன்றி நண்பனே... நீ, என் உயிரினும் மேலானவன். உன்னால், இன்று சுவையான அணில் குட்டிகளை ருசித்து பசியாறப் போறேன்...' என கூறி கூட்டை நெருங்கியது பருந்து.
பக்கத்து கிளையில் இதை பார்த்துக் கொண்டிருந்த தேனீ கூட்டம், 'தாமதிக்காமல் வாருங்கள்... குட்டி அணில்களை காக்க வேண்டும்...' என பறந்து வந்தன.
பருந்தையும், கொக்கையும், மாறி மாறி கொடுக்குகளால் கொட்டி தள்ளின தேனீக்கள். ஆபத்தை குறிப்பால் உணர்ந்த அணில் குட்டிகள், தேனீ கூட்டத்திற்கு நன்றி தெரிவித்தன.
தேனீக்களின் விஷம் உடலெங்கும் பரவியதால், வலி தாங்க முடியாமல் பருந்தும், கொக்கும் தப்பி பறந்தன.
திரும்பி வந்தஅணில்கள் விஷயம் அறிந்தன. மிகவும் வெட்கத்துடன், 'நிற தோற்றத்தை வைத்து மதிப்பிட்டுவிட்டோம் அது நல்லதல்ல...' என தேனீ கூட்டத்திடம் மன்னிப்பு கேட்டன. தவறை திருத்திக்கொண்டது ஆண் அணில்.
குழந்தைகளே... வெளிப்புற தோற்றத்தை வைத்து, எதையும் எடைப் போடக் கூடாது என புரிந்திருப்பீர் தானே!
எஸ்.டேனியல் ஜூலியட்