
மதுரை, துாய மரியன்னை உயர்நிலைப் பள்ளியில், 1974ல், 9ம் வகுப்பு படித்த போது, வகுப்பாசிரியராக இருந்தார் அற்புதம். ஆங்கில பாடமும் நடத்தி வந்தார்.
அன்று ஆங்கில கவிதை ஒன்றை சுவாரசியமாக விளக்கிக் கொண்டிருந்தார். அதில், இரண்டு இடங்களில், 'செர்ரி' என்ற சொல் வந்தது. உடனே, 'செர்ரி என்பது ஒரு வகை பழம். கண்ணைக் கவரும் சிவப்பு நிறத்தில் இருக்கும். எத்தனை பேர் இதை சாப்பிட்டுள்ளீர்...' என்று கேட்டார். சிலர் மட்டுமே கை துாக்கினோம்.
உடனே, வகுப்பு மாணவர் தலைவனை அழைத்து, பொது நிதியில் செர்ரி பழம் வாங்கி வரச் சொன்னார். பள்ளி அருகே, திருமலை நாயக்கர் மஹால் எதிரே உணவுக் கடையில் வாங்கி வந்தான். அதை பகிர்ந்து தந்து சாப்பிட வைத்தார். அன்று தான் பலருக்கும் அதை பார்க்க வாய்த்தது; சுவையை ருசித்து வியந்தோம்.
எனக்கு, 62 வயதாகிறது; பெரம்பூர், ரயில் இணைப்புப் பெட்டி தொழிற்சாலையில், முதன்மை அலுவலக கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். இன்றும் செர்ரி பழத்தை பார்க்கவோ, அதுபற்றி கேட்கவோ நேர்த்தால் அந்த சம்பவம் நினைவுக்கு வந்துவிடுகிறது. வகுப்பில் இறுக்கத்தை விலக்கி, குதுாகலமாக கற்பித்த ஆசிரியரை போற்றுகிறேன்.
- மு.தங்கவேல் பாண்டியன், சென்னை.
தொடர்புக்கு: 92837 04882