
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், கஸ்துாரி ரெட்டியார் கழக உயர்நிலைப் பள்ளியில், 1962ல், 7ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...
வகுப்பாசிரியர், ராஜேந்திர தாஸ் மிகவும் அன்பானவர்; நகைச்சுவை உணர்வு மிக்கவர்.
அன்றைய வகுப்பில், இந்திய இயற்கை வளங்கள் பற்றி பாடம் நடந்திக் கொண்டிருந்தார். அப்போது, 'ஜீவநதி என்றால் என்ன... இந்தியாவில் பாயும் ஜீவநதிகள் எவை...' என கேட்டார்.
அனைவரும் அமைதி காத்ததால், 'பதில் தெரிந்தோர் கையை உயர்த்துங்கள்...' என்றார்.
நான் மட்டும் உயர்த்தினேன். புன்னகைத்தபடி, 'பதில் சொல்லு...' என்றார். மடை திறந்த வெள்ளம் போல், 'ஆண்டு முழுதும் வற்றாமல் ஓடுவதை ஜீவநதி என்போம். இந்தியாவில், கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா இந்த வகையில் சேரும்...' என்றேன்.
என்னை பாராட்டியபோது, மாணவன் காந்தி எழுந்து, 'ஐயா... இத்தனை நதிகளை கூறியவன், ஒன்றை விட்டு விட்டானே...' என்றான். சந்தேகத்துடன், 'சரி... நீ சொல்லு...' என்றார். உடனே, 'அவன் மூக்கு தான் ஐயா அந்த ஜீவநதி...' என்றான். வகுப்பறையில் சிரிப்பலை அடங்க வெகு நேரமாயிற்று. காரணம், 'சைனஸ்' பிரச்னையால் என் மூக்கில் எப்போதும் சளி ஒழுகியவாறு இருக்கும்.
தற்போது, என் வயது, 73; பள்ளி இறுதி வகுப்பை முடித்தது வரை, ஜீவநதி என்றே என்னை அழைப்பர் சக மாணவர்கள். இன்றும் அந்த உபாதையுடன் தான் வாழ்கிறேன்.
- எஸ்.நல்லதம்பி, திண்டுக்கல்.
தொடர்புக்கு: 97504 74820