PUBLISHED ON : மே 06, 2023

மதுரை, டி.வி.எஸ்.மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில், 1984ல், 3ம் வகுப்பு படித்தேன். வகுப்பு ஆசிரியையாக இருந்த சுப்புலட்சுமி மிக இனிமையானவர்; பாடங்களை வெகு எளிமையாய், விளையாட்டாக கற்றுத் தருவார்.
அன்று, கணிதப் பாடத்தில் 'தகு' மற்றும் 'தகாபின்னம்' பற்றி விளக்கினார். பின், மாதிரி கணக்குகளை போட சொன்னார். சரியாக புரியாததால் எப்படி பிரித்தறிவது என தெரியாமல் தவித்தேன்.
என்னை போல் பலரும் விழித்தது கண்டு, 'தகா பின்னம் என்றால், சிறியோர் கீழ் இருப்பர்; பெரியோர் மேல் இருப்பர். சிறியோரால், பெரியோரை சுமக்க இயலாது. தகு பின்னத்தில், சிறியோர் மேல் இருப்பதால், பெரியோரால் எளிதாக சுமக்க முடியும்...' என விளக்கி கற்றுத் தந்தார். சுலபமாக புரிந்தது. மாதிரி கணக்குகளை சரியாக போட்டு பாராட்டு பெற்றேன்.
என் வயது, 45; கணிதத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். மாலை நேரத்தில் சிறுவர் சிறுமியருக்கு, அந்த ஆசிரியை கற்று தந்த வழிமுறையை பின்பற்றி கணித சிறப்பு வகுப்பு எடுக்கிறேன். மிகச் சரியாக புரிந்து, ஆர்வமுடன் அவர்கள் கற்பது மகிழ்ச்சி தருகிறது.
- வத்சலா ராகவன், பெங்களுரூ.