
கடைத்தெருவில் பொருட்களை வாங்கியப் பின், நண்பன் நாசருடன், வீட்டை நோக்கி, நடந்து வந்தான் கணேசன். கிராமத்தில் வீட்டிற்கு இன்னும், 2 கி.மீ., துாரம் போக வேண்டும்.
இருவரும், கிராமத்து பள்ளியில், 3ம் வகுப்பு படிக்கின்றனர். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி அது; இருவரும், மகிழ்ச்சியாக பேசியபடி வந்தனர்.
''தம்பீங்களா... சவுக்கியமா... அப்பா, நல்லா இருக்கிறாரா...''
- குரல் கேட்டு குழம்பியபடி பார்த்தனர். சாலையோரம் மரத்தடியில், காருடன் நின்று கொண்டிருந்தனர் இருவர். அதில் ஒருவர் கேட்டார்.
''யாரு இவரு... உனக்கு தெரியுமா...'' என்றான் கணேசன்.
''தெரியாது... அவரு உன்னை தான் கேக்குறாரு...'' என்றான் நாசர்.
''உங்கள, எனக்கு தெரியாதே...''
''தம்பி... நானும், உங்க அப்பாவும் ரொம்ப பழக்கம்; ஒரு வேலையா இங்கு வந்தேன்...'' காரில் வந்த இருவரில், ஒருவர் பேச்சு கொடுத்தார்.
''இவங்க யாருன்னு தெரியாது; வா போகலாம்...''
வேகமாக நடந்தான் கணேசன். அவனை பின் தொடர்ந்தான் நாசர்.
''தம்பிகளா... நில்லுங்க... சாக்லெட், பிஸ்கெட் என, நிறைய வாங்கி தரேன்... காருல அப்படியே, ஊர சுத்திட்டு வருவோம்; அலைபேசியில், நிறைய விளையாட்டை பதிவிறக்கம் செய்து இருக்கேன்; மகிழ்ச்சியாக விளையாடலாம்...'' என்றார்.
''திரும்பி பார்க்காம நட... ஒரு ஆளு, நம்மை தொடர்ந்து வந்திட்டு இருக்கார்...''
கணேசனின் கையை பிடித்தபடி வேகமாக நடந்தான் நாசர்.
சற்று தொலைவில், மோட்டார் சைக்கிள் வரும் சத்தம் கேட்டது; இதைப் பார்த்ததும், பின் தொடர்ந்தவர்கள் வேகமாக காரில் புறப்பட்டனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த போலீஸ்காரர், ''இங்கே யாராவது, காருல வந்ததை பார்த்தீங்களா...'' என்றார்.
'ஆமாங்க ஐயா... இப்போ தான் கார்ல ஏறி போறாங்க...'
ஒருமித்த குரலில் இருவரும் கூறினர்.
''உங்களுக்கு பிடிச்சத வாங்கி தரேன்னு பேச்சு கொடுத்தானுங்களா...'' என்றார் போலீஸ்காரர்.
''ஆமா... நொறுக்கு தீனி வாங்கி தரேன்னு சொன்னாங்க; காருல ஊர சுத்திகாட்டுறேன்னு கூப்பிட்டாங்க... எதுவும் தேவையில்லை என்று வந்துவிட்டோம்...'' என்றான் நாசர்.
''நல்ல பசங்க; அவங்க பேச்சை நம்பிடாதீங்க; தெரியாதவங்க, எதை கொடுத்தாலும் வாங்க கூடாது... காருல வந்தவங்க, குழந்தை கடத்துற கும்பலை சேர்ந்தவங்கன்னு தகவல் வந்திருக்கு; அவங்கள தான் தேடிட்டு வந்தோம்...'' என்றார்.
''சாமார்த்தியமா தப்பிச்சு இருக்கோம்...'' என்றான் நாசர்.
''இரண்டு பேரையும் தேடி பிடிச்சு, முட்டிக்கு முட்டி தட்டிடுவோம்; நீங்க, பயப்படாம வீட்டுக்கு போங்க...'' என்ற போலீஸ்காரர், கார் போன வழியில் தேடி சென்றார்.
''ரொம்ப நல்லதா போச்சு... தப்பிச்சுட்டோம்...'' என்றான் கணேசன்.
''புதுசா வர்ற, ஆளுங்க கிட்ட, எப்பவும் கவனமாக இருக்கணும்...''
இருவரும், பேசியபடி, வீட்டுக்கு நடந்தனர்.
குழந்தைகளே... எப்போதும் முன் ஜாக்கிரதையாக எல்லாரிடமும் பழகணும்.
- வே. சுந்தரம்