
சிவகாசி, இந்து நாடார் விக்டோரியா உயர்நிலைப் பள்ளியில், 1945ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்தபோது, ஆங்கிலம், தமிழ், சரித்திரம் பாடங்களை கற்பித்தார், ஆசிரியர் ஆறுமுக நாடார். வகுப்பில், முதல் அல்லது இரண்டாம், 'ரேங்க்' மாறிமாறி பெற்று வந்தேன்.
ஒருமுறை பாடத்தேர்வில், 99 மதிப்பெண் எடுத்திருந்தேன். வகுப்புக்கு வெளியே நிறுத்தி, 'பளார்' என கன்னத்தில் அறைந்து தண்டித்தார். பின், மிக கவனமுடன் படித்து, பள்ளி இறுதி தேர்வில் முதன்மை மதிப்பெண் பெற்றேன்.
சென்னை, ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்தேன். மருத்துவராகி, நாகர்கோவிலில் மருத்துவமனை நடத்திய போது, என்னை காண வந்தார் அந்த ஆசிரியர்.
கனிவுடன் வரவேற்று மரியாதையுடன் விருந்து உபசாரம் செய்தேன். என், 'ஹில்மென்' காரில், நாகராஜா மற்றும் சுசீந்திரம் கோவில்களை சுற்றிக் காட்டிய போது, 'இவ்வளவு பணிவிடைகள் செய்து, அன்பாய் இருக்கிறாயே... என் குழந்தைகள் கூட இப்படி நடந்து கொண்டதில்லை...' என நெகிழ்ந்தார்.
பள்ளியில் ஆசிரியர்கள் நேர்மை மற்றும் அர்பணிப்புடன் செயல்பட்டதால் தான், இது போல் உயர்ந்த நிலைக்கு வந்துள்ளதை நன்றியுடன் நினைவு கூர்ந்தேன்.
என் வயது, 93; பள்ளியில் படித்த காலத்தில் நடந்த நிகழ்வுகள், மனதில் பசுமையாய் படர்ந்துள்ளன.
- டாக்டர் எ.டி.ராமமூர்த்தி, நாகர்கோவில்.
தொடர்புக்கு: 94864 45520