PUBLISHED ON : ஆக 17, 2018

கோடை விடுமுறைக்குப் பின், பள்ளி திறந்தது. காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, எட்டாம் வகுப்பு, 'ஏ' பிரிவில், தமிழ் ஆசிரியை வனிதாகுமாரி, மாணவியரின் பெயரையும், அவர்கள் லட்சியத்தையும் கேட்டபடியே வந்தார்.
சில மாணவியர், 'மருத்துவராக விரும்புகிறோம்...' என்றனர்.
வேறு சிலர், 'பொறியியல் வல்லுநராக வேண்டும்...' என்றனர். வழக்கறிஞர் மற்றும் ஆசிரியர் என பலவாறாக தெரிவித்தனர்.
மாணவி முனியம்மா, ''நான் கலெக்டராக விரும்புகிறேன்...'' என்றாள். இதைக் கேட்ட மாணவியர், 'கொல்'லென்று சிரித்தனர்.
''ஏன் சிரிக்கிறீர்கள்... அந்த மாணவியின் துணிச்சலைப் பாராட்டுங்கள்...'' என்றார், வகுப்பு ஆசிரியை.
''ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேறுவது சிரமம்ன்னு எங்க அப்பா சொன்னார் மிஸ்...'' என்றாள், காயத்ரி.
''விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் எதிலும் வெற்றி பெறலாம்...'' என்று கூறி, அந்த மாணவியைத் தன் அருகில் அழைத்தார் ஆசிரியை.
கிழிந்த பாவாடையைத் தைத்தும், சட்டையில் ஒட்டுப் போட்டும் அணிந்திருந்த அந்த மாணவியைப் பார்த்து வியப்படைந்த ஆசிரியை, ''நீ என்னவாக விரும்புகிறாய்...'' என்று மறுபடியும் கேட்டார்.
மாணவி முனியம்மா, ''இந்திய ஆட்சித் துறையில் பணியாற்ற விரும்புகிறேன்...'' என்று உறுதியாகச் சொன்னாள். அவள் வார்த்தையில் முன்னை விட, அழுத்தம் தெரிந்தது; மாணவியர் இப்போது சிரிக்கவில்லை.
மறுநாள் -
முனியம்மாவை தனியாக அழைத்தார் ஆசிரியை.
''உன் அப்பாவிற்கு என்ன வேலை...''
இந்த கேள்வியைக் கேட்டதும், தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள். அவளைச் சமாதானம் செய்வது பெரியபாடாகி விட்டது.
''நான் ரெண்டு வயசுப்பிள்ளையா இருக்கும் போதே அப்பா, செத்துப் போச்சு...''
''அம்மாவுக்கு என்ன வேலை...''
''இட்லி வியாபாரம்...''
''பெரிய படிப்பெல்லாம் படிக்க வருமானம் போதுமா...''
மாணவி பதில் சொல்லவில்லை.
''போன ஆண்டு என்ன மதிப்பெண் வாங்கினே...''
''வகுப்பில் முதல் பத்துக்குள்ள வருவேன்...''
''பத்தாது... முதல் மாணவியா வர முயற்சி செய்யணும்...''
''சரி டீச்சர்...''
''தெரியாத பாடங்களை என் கிட்ட கேட்டுக்க...''
''கேட்டுக்கிறேன் டீச்சர்...''
'இந்த பெண்ணுக்குத்தான் எவ்வளவு மனோதிடம்' என்று வியந்தார் ஆசிரியை.
ஒரு நாள் -
முனியம்மாவின் வீட்டுக்கு சென்றார் ஆசிரியை. நெருக்கமான குடிசை வீடுகள் நிறைந்த பகுதியில் இருந்தது. அதுவும், ஒரு குடிசை தான். ஆசிரியையைக் கண்டதும், முனியம்மாவிற்கு மகிழ்ச்சி; இதுவரை, அவள் வீடு தேடி எந்த ஆசிரியையும் வந்ததில்லை.
''இதாம்மா எங்க டீச்சர்...'' என்று தாயிடம் அறிமுகப்படுத்தினாள்.
''வாங்கம்மா... முனியம்மா எதாவது குறும்பு செய்றாளா...''
''அதெல்லாம் ஒண்ணுமில்லேம்மா; சும்மா பார்த்திட்டுப் போலாம்ன்னு வந்தேன்...''
''முனியம்மா நல்லா படிக்கிறாளா...''
''படிக்கிறா... ஒழுங்கா பள்ளிக் கூடத்துக்கு அனுப்புங்க...''
''படிச்சா யார் உத்தியோகம் கொடுக்கப் போறாங்க; எட்டாவதோட நிறுத்திடலாம்ன்னு பார்க்கிறேன்...''
''அப்படியெல்லாம் நிப்பாட்டிறாதீங்க; தொடர்ந்து படிக்க வைங்க...''
முனியம்மாவின் மேல் ஒரு ஈர்ப்பு ஆசிரியை வனிதாகுமாரிக்கு ஏற்பட்டது. அடிக்கடி, அவளை வீட்டிற்கு அழைத்துப் பாடம் சொல்லிக் கொடுப்பார். சில நேரம் முனியம்மாவை, தன் வீட்டிலேயே சாப்பிடச் செய்வார்.
தன், இரண்டு குழந்தைகளுடன், மூன்றாவது குழந்தை போல் பார்த்துக் கொண்டார்; மெல்ல மெல்ல படிப்பில், அதிக கவனம் செலுத்தினாள், முனியம்மா.
எட்டு, ஒன்பது வகுப்புகளில் சற்றுப் பின் தங்கிய அவள், பத்தாம் வகுப்பு ஆரம்பத்திலேயே மிகவும் அக்கறையாகப் படித்தாள்.
அவளுடைய துரதிர்ஷ்டம் அரையாண்டுத் தேர்வு நேரம், அவளது அம்மாவிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. தாய் வேலை பார்த்த வீடுகளில், காலையிலும், மாலையிலும் முனியம்மா வேலை செய்ய வேண்டியதாகி விட்டது.
அரையாண்டுத் தேர்வில், வகுப்பில், மூன்றாவது இடத்தைப் பிடித்தாள்.
வகுப்பு ஆசிரியையும், தலைமை ஆசிரியையும் வெகுவாகப் பாராட்டினர்; ஆசிரியை வனிதாகுமாரியின் உற்சாகமும், வழிகாட்டலும் தொடர்ந்தது.
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில், முனியம்மா மாநிலத்திலேயே முதலாவதாகத் தேறியிருந்தாள்.
ஆசிரியை வனிதாகுமாரி உச்சி முகர்ந்து பாராட்டினார்; பல பரிசுகளும், பாரட்டுகளும் குவிந்தன.
கல்லுாரிக்குச் சென்றாள் முனியம்மா. ஆசிரியை வனிதாகுமாரி வேறு இடத்திற்கு மாறுதல் ஆகி சென்றுவிட்டார். காலச்சக்கரம் சுழன்றது.
முனியம்மாவை மறந்தே விட்டார் ஆசிரியை வனிதாகுமாரி. எங்கே இருக்கிறாள் என்று விசாரித்ததில் சிலர் அவள் ஆசிரியை வேலை பார்ப்பதாகக் கூறினர். யாரும் சரியான தகவலைக் கொடுக்கவில்லை.
அன்று -
தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற வனிதாகுமாரிக்கு பாராட்டு விழா. விழாவிற்கு மாவட்ட ஆட்சியரும், சிறப்பு விருந்தினர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.
மாவட்ட ஆட்சியர் ஸ்வேதாவுடன் அவரது கணவர் சிவாவும் வந்திருந்தார். அசப்பில் ஸ்வேதா, முனியம்மா போலவே இருந்தார்.
ஆட்சியர் பேசும் போது, 'வனிதாகுமாரி போன்ற நல்லாசிரியர்கள் நாட்டுக்குத் தேவை' என்று பொதுப்படையாக பேசினார்; விழா முடிந்தது.
வனிதாகுமாரி வீட்டிற்குச் சென்ற சிறிது நேரத்தில், ஒரு கார் அவர் வீட்டின் முன் வந்து நின்றது. அது சந்தேகமில்லாமல் மாவட்ட ஆட்சியரின் கார் தான். அதிலிருந்து, ஸ்வேதாவும், அவரது கணவரும் இறங்கினர்.
கொண்டு வந்திருந்த ஆளுயர ரோஜா மாலையை வனிதாகுமாரியின் கழுத்தில் போட்டு, ஆசிரியை காலில் விழுந்து வணங்கினார் மாவட்ட ஆட்சியர்.
'இவர், என் ஆசிரியர் மட்டுமல்ல, அன்பு தாயும் கூட; இவர் போட்ட பிச்சையால் தான், இந்தப் பரம ஏழை முனியம்மா மாவட்ட ஆட்சியராக வர முடிந்தது...' என்று கணவரிடம் அறிமுகப்படுத்தினார்.
வடமாநிலங்களில் பணியாற்றிய ஸ்வேதா ஐ.ஏ.எஸ்., முனியம்மா என்ற பெயரை, மாற்றிக் கொண்டதும், ஐ.ஏ.எஸ்., அதிகாரியை திருமணம் செய்துள்ளதையும், ஆசிரியையிடம் தெரிவித்தார்.
ஆசிரியை வனிதாகுமாரி, தன் மாணவியைக் கட்டிப் பிடித்து, உச்சி முகர்ந்தார்.
குட்டீஸ்... தன்னம்பிக்கையும், மன உறுதியும் இருந்தால் உலகில் எதையும் சாதிக்க முடியும். இந்த முனியம்மா போல நீங்களும் சாதிக்கணும். ஓ.கே!
