PUBLISHED ON : ஆக 17, 2018

கேரள மாநிலம், வடவனுார் கிராமத்தில் வசித்தவர், மருதுார் கோபால மேனன். இவரது மனைவி சத்தியபாமா. இந்த தம்பதிக்கு, ஜனவரி 17, 1917ல், பிறந்த குழந்தைக்கு, 'ராமச்சந்திரன்' என்று பெயரிட்டனர்.
மருதுார் கோபால மேனன் ராமச்சந்திரன் என்ற நீண்ட பெயர்தான், எம்.ஜி.ராமச்சந்திரன் ஆனது. காலப்போக்கில், எம்.ஜி.ஆர்., என்பதே நிரந்தரமாயிற்று!
மருதுார் கோபால மேனன் குடும்பம் மிகப்பெரியது; அதில், 35 பேர் இருந்தனர். கேரள மாநிலம், இருஞானக்குடா கிராம பள்ளியில், கோபால மேனன், தலைமையாசிரியராகவும், கவுரவ நீதிபதியாகவும் பணியாற்றி வந்தார். இவரது திருமணத்துக்குப் பின், அந்த பெரிய குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு, சொத்துக்கள் பிரிக்கப்பட்டன.
எம்.ஜி.ஆர்., பிறந்த மூன்றாவது ஆண்டு, தந்தை மருதுார் கோபால மேனன் இறந்தார்; மூன்று குழந்தைகளுடன் அவதிபட்டார் சத்தியபாமா.
குடும்ப நண்பர் வேலு நாயர், கும்பகோணத்தில் இருந்ததால், குழந்தைகளுடன், அங்கு வந்தார் சத்தியபாமா. அவரது உதவியுடன் மூத்த மகன் சக்கரபாணி, இளைய மகன் எம்.ஜி.ஆர்., பள்ளியில் சேர்க்கப்பட்டனர். சக்கரபாணி, ஏழாம் வகுப்பையும், எம்.ஜி.ஆர்., மூன்றாம் வகுப்பையும் முடித்தனர். அதன்பின், படிக்க வைக்க குடும்ப சூழல் ஒத்துழைக்கவில்லை. அதனால், நாராயண நாயர் சிபாரிசில், சக்கரபாணியையும், எம்.ஜி.ஆரையும், அந்த நாடக கம்பெனியில் சேர்த்தனர்.
எம்.ஜி.ஆர்., இளைஞராகி, நாடக மேடைகளில், பாடி, வசனம் பேசி நடித்து, வரவேற்பை பெற்றுக் கொண்டிருந்த போது, வாள் சுழற்றல், சிலம்பம் ஆடுதல் போன்ற விளையாட்டுகளையும் கற்றார்.
அப்போது மகரக்கட்டு ஏற்பட்டு குரல் மாறியது. குரலைக் காரணம் காட்டி, நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தைக் கொடுக்க மறுத்தார், நாடக கம்பெனி முதலாளி. இது பற்றி, அம்மா சத்தியபாமாவிடம், எம்.ஜி.ஆர்., சொல்லி, மற்றொரு நாடகக் கம்பெனியில் சேர முடிவு செய்தார்.
அந்த காலத்தில், ஒரு நாடகக் கம்பெனியில் இருந்து, எளிதாக எவரும் வெளியேற முடியாது. தாய் சத்தியபாமா, தாய்மாமன் நாராயண நாயர் ஆகியோர், எம்.ஜி.ஆரை அழைத்துக் கொண்டு, நாடகக் கம்பெனி உரிமையாளர் சச்சிதானத்தை சந்தித்தனர். வேறு கம்பெனியில், சேர்ந்தால், பிரச்னை செய்வதாக மிரட்டினார்.
அதற்கு சத்தியபாமா, 'என் பிள்ளைகளை, உங்கள் கம்பெனியில் நடிக்கத்தான் அனுப்பினேன்; கொத்தடிமைகளாக இருக்க அனுப்பிவில்லை; என் பிள்ளைகளின் எதிர்காலம் தான், எனக்கு முக்கியம்; அதற்கு தடை செய்வதை, சந்திக்க தயார்...' என்று ஆவேசமாகச் சொன்னார். அதை, கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., தாயின் ஆவேசத்தில் அசந்து விட்டார்.
இதன்பின், இரண்டு பிள்ளைகளையும் மற்றொரு நாடகக் கம்பெனியில் சேர்த்தார் சத்தியபாமா. நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆருக்கு, சதி லீலாவதி படத்தில், நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ராஜகுமாரி என்ற படத்தில், எம்.ஜி.ஆர்., கதாநாயகனானார். அவரது திரையுலக பயணம், அடித்தட்டு மக்களை ஆர்ப்பரிக்க செய்தது.
மொத்தம், 136 திரைப்படங்களில் நடித்த எம்.ஜி.ஆர்., எந்த நிலையிலும், தாய் சத்தியபாமாவை மறந்ததில்லை. அவர் நடித்த திரைப்படங்களுக்கு, தாய்க்குப் பின் தாரம், தாய் சொல்லை தட்டாதே, தாயைக் காத்த தனயன், தெய்வத்தாய், கன்னித்தாய், தாய்க்கு தலைமகன் மற்றும் ஒரு தாய் மக்கள் என்று தலைப்பிட்டனர்.
இத்துடன், எம்.ஜி.ஆரின் தாய்ப்பாசம் முற்றுப் பெறவில்லை; தான் கட்டிய சினிமா ஸ்டுடியோவிற்கு, சத்யா ஸ்டுடியோ என்று பெயரிட்டு மகிழ்ந்தார். இதுவும் போதாதென்று, ஒவ்வொரு நாளும் அதிகாலை வணங்குவதற்காக, ராமாவரம் வீட்டில், தாய்க்கு கோவில் கட்டினார்.
இந்த குணத்தால் தான், மறைந்து பல்லாண்டுகளுக்கு பின்பும் கூட, தமிழக தாய்மார்களின் நெஞ்சங்களில், எம்.ஜி.ஆர்., வாழ்ந்து கொண்டிருக்கிறார்!
