PUBLISHED ON : ஆக 17, 2018

ஒரு விவசாயி, கழுதையும், குதிரையும் வளர்த்து வந்தார்; வேளா வேளைக்குத் தீனி போட்டு, பல வேலைகளுக்கு, அவற்றை பயன்படுத்திக் கொண்டார். அங்கு, யாரும் கழுதையை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.
ஒரு நாள் -
கழுதையைப் பார்த்து, ஒரு விதமாகக் கனைத்தது குதிரை; கழுதைக்குக் கோபம் வந்துவிட்டது. பலமாகக்கத்தி, குதிரை மீது தனக்குள்ள வெறுப்பைக் காட்டியது.
'சுமை சுமக்கப் பிறந்தது தான் கழுதை' என்பதே குதிரையின் மதிப்பீடு.
'பந்தயங்களில் ஓடி, பணம் குவிக்கும் திறன் உள்ளதால், குதிரைக்கு இவ்வளவு திமிர் கூடாது!' என்று எண்ணியது கழுதை.
உருவில் சிறியதானாலும், பெரியதானாலும் நேசக்கரம் நீட்டி வாழ வேண்டும் என்று கழுதை, புத்திமதி கூறியதை துச்சமென தள்ளி விட்டது குதிரை.
இவ்வாறு பல விஷயங்களில், இரண்டுக்கும் பகை ஏற்பட்டது.
ஒரு நாள் -
அந்த விவசாயி, கழுதை, குதிரையுடன் வெளியூருக்குப் போனார்; பயணத்தின் போது தேவைப்படும் பொருட்களை, மூட்டையாகக் கட்டி, பாதியை கழுதை முதுகில் ஏற்றினார்; மீதியை குதிரை முதுகில் ஏற்றிய போது, சுமக்க மறுத்தது.
''ஏன் மறுக்கிறாய்...'' என்று கேட்டார் விவசாயி.
''சுமக்க பிறப்பெடுத்த கழுதை மீதே சுமைகளை ஏற்றுங்கள்...'' என்று கூறியது குதிரை. எப்படி எடுத்துச் சொல்லியும், சுமைகளை சுமந்து செல்ல மறுத்து விட்டது.
'என்ன இருந்தாலும், குதிரைக்கு, இவ்வளவு திமிர் கூடாது' என்று, உள்ளூர நினைத்துக் கொண்டார் விவசாயி; அவருக்கும் குதிரை மீது வெறுப்புத் தோன்ற ஆரம்பித்தது.
சுமக்க முடியாத அளவுக்கு, சுமை ஏற்றியதால், தள்ளாடி தாள்ளாடி கழுதை நடந்தது; குதிரையோ, கம்பீர நடை போட்டது.
''குதிரையே... எனக்கு மயக்கம் வரும் போல் இருக்கிறது; என் மீது கருணை காட்டி, சுமையில் பாதியை எடுத்துக் கொள்; உனக்கு காலமெல்லாம் நன்றிக் கடன் பட்டிருப்பேன்...'' என்று மன்றாடியது.
''மயக்கம் வந்தால் செத்துத் தொலைய வேண்டியது தானே...'' என்று எக்காளமா கூறியது. குதிரையின் பேச்சு, வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவது போல் இருந்தது கழுதைக்கு.
''என் பாடு வேதனையானதுதான். ஆனால், உன்னோட கம்பீரம் ரொம்ப நாளைக்கு நீடிக்காது...'' என்று, சாபம் கொடுத்தது கழுதை.
இப்படி பயணம் செய்த போது, அதிக பாரத்தால் இறந்து விட்டது கழுதை. அதனால், கழுதை மீதியிருந்த சுமைகளை எல்லாம், குதிரையின் மீது ஏற்றினார், விவசாயி.
செத்துப்போன கழுதையை, அந்த இடத்திலேயே விட்டு செல்ல விவசாயிக்கு மனம் வரவில்லை. 'கழுதையின் தோலை தேவைக்குப் பயன்படுத்தலாம்' என்று எண்ணி, கழுதையின் உடலையும் குதிரையின் முதுகில் வைத்து, தானும் ஏறி அமர்ந்து கொண்டார்.
'கழுதைக்கு உதவியிருந்தால், இந்த நிலை வந்திருக்காதே' என்று வருந்திய குதிரை, தலையை தொங்க போட்டப்படி, சுமையுடன் மெதுவாக சென்றது.
குட்டீஸ்... உதவி செய்ய சந்தர்ப்பம் கிடைத்தும், உதவி செய்யாமல் இருந்தால் இப்படித்தான் கஷ்டப்படணும். எனவே, நீங்க எல்லாரும் குதிரை மாதிரி இருக்காதீங்க... சரியா...
