தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தங்க ஆப்பிளும் அதிசய கிளியும்! (3)

தங்க ஆப்பிளும் அதிசய கிளியும்! (3)

தங்க ஆப்பிளும் அதிசய கிளியும்! (3)


PUBLISHED ON : ஆக 17, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 17, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்றவாரம்: தங்கள் தோட்டத்தில் தோன்றிய தங்க ஆப்பிளை திருடிய தங்கக்கிளியை பிடிக்கப்போய் மாட்டிக்கொண்டான் விக்ரம். இனி -

''கிளியை ஏன் பிடிக்க வந்தாய்...'' என்று, விக்ரமை பார்த்து கேட்டான் அரசன்.

''எங்கள் தோட்டத்தில் இருந்த தங்க ஆப்பிளை திருடிய கிளியை பிடிப்பதில் என்ன தவறு...'' என்று கேட்டான்.

''திருடுபவர்களை பிடிப்பது தவறல்ல; ஆனால், அரண்மனைக்குள் என் அனுமதியின்றி, திருடன் போல் நுழைந்தது தவறு...'' என்று கூறிய அரசன், சிறையில் அடைக்கும்படி உத்திரவிட்டான்.

விக்ரம் வருவான் என்று வெகுநேரம் காத்திருந்த நரி, அவன் வராததைக் கண்டு, ஏதோ நடந்து விட்டது என்பதை அறிந்து, அரண்மனைக்கு சென்று அங்கும், மிங்கும் தன் பார்வையைச் செலுத்தியது.

அரண்மனை தோட்டத்தில், இளவரசி, அதிசயக் கிளியுடன் விளையாடுவதைப் பார்த்தது நரி.

''இளவரசியே... உலகிலேயே மிகச் சிறந்த ஒரு அழகன் இங்கு வந்திருக்கிறான்; அவனை பார்த்தாயா...'' என்றது.

அவள் அதிசயத்தோடு, ''அப்படியா... எங்கே அவன்...'' என்று கேட்டாள்.

இளவரசியை, சிறைச்சாலைக்கு அழைத்து சென்றது நரி. சிறையில் இருந்த விக்ரமை கண்ட இளவரசி, அவன், அழகில் மயங்கினாள். இளவரசியிடம், அதிசயக் கிளியைப் பிடிக்க வந்த காரணத்தைக் கூறி, வேண்டுமென்றே சிறையில் அடைத்து விட்டனர் என்ற விபரத்தையும் கூறினான்.

அரசகுமாரி, தன் தந்தையிடம் சென்று, ''அதிசயக் கிளியை திருட வந்தவனுக்கு, என்ன தண்டனை கொடுக்கப் போகிறீர்...'' என்று கேட்டாள்.

''நீயே சொல்...'' என்று, மகளிடம் கேட்டார், அரசர்.

''மின்னல் குதிரையைக் கொண்டு வரும்படி கட்டளை இடுங்கள். வீரனாக இருந்தால், குதிரையோடு வரட்டும்; கோழையாக இருந்தால் குழி தோண்டிப் புதைத்து விடுங்கள்...'' என்று கூறினாள், இளவரசி.

இளவரசிக்கு நன்றி கூறி விட்டு, ''மின்னல் குதிரையை அழைத்து வருவது எப்படி...'' என்று, அவளிடமே ஆலோசனை கேட்டான், விக்ரம்.

இளவரசி, தன் மோதிரத்தை அவனிடம் கொடுத்து, ''பள பளக்கும் இந்த மோதிரத்தை, அந்த குதிரையின் எதிரில் காட்டினால் அதன் கண்கள் கூசி மிரளும். உடனே, அதன் தலையை உயர துாக்கிப் பிடித்தால், வானத்தில் உள்ள சூரியனை பார்க்கும் போது, மேலும், அதன் கண்கள் கூசும். அப்போது, செய்வதறியாது திகைத்து நிற்கும். உடனே, அதன் மீது பாய்ந்து, ஏறுங்கள்; விரைந்து, இங்கே வாருங்கள்; நான், உங்களுக்காக காத்திருக்கிறேன்...'' என்று கூறினாள்.

மோதிரத்தை வாங்கிய விக்ரம், நரியின் முதுகில் ஏறிக்கொண்டான்; வேகமாக ஓடியது; இருவரும் மின்னல் குதிரை இருக்கும் இடத்தை கண்டு பிடித்தனர். மோதிரத்தை காட்டி, குதிரையின் கண்களை கூச செய்து, அதன் தலையை உயர்த்தினான், விக்ரம். குதிரை திகைக்கவே, அதன் மீது பாய்ந்து ஏறினான்; நரியும் அவனுடன் குதிரை மீது ஏறியது.

மின்னல் குதிரையுடன் வந்த விக்ரமை பார்த்ததும், அரசன் மகிழ்ந்து, அவன் வீரத்தைப் பாராட்டினான்.

'தன் மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டும்...' என்று கேட்டான்.

'தனக்கு, இரண்டு அண்ணன்கள் இருப்பதாகவும், அவர்களின் ஆலோசனையைக் கேட்ட பின், திருமணம் செய்வது பற்றி முடிவெடுக்க முடியும்...' என்று கூறினான் விக்ரம்; அரசனும் ஒப்புக்கொண்டான்.

பின், அரசரின் அனுமதியுடன், இளவரசியையும், அதிசயக் கிளியையும், மின்னல் குதிரை மீது ஏற்றி, அண்ணன்களை தேடி புறப்பட்டான், நரியும் அவர்களுடன் சென்றது.

பெரிய அண்ணன், ஒரு சத்திரத்தில் சிலருடன், சீட்டாடிக் கொண்டிருப்பதை கண்டான் விக்ரம். இன்னொரு அண்ணன் திராட்சை தோட்டமொன்றில், திராட்சை ரசத்தை குடித்து, பிதற்றி கொண்டிருந்ததைக் கண்டான்.

இப்போது, மூவரும் ஒன்று சேர்ந்து, ஒரு சத்திரத்தில் தங்கினர். இளவரசி, மூவருக்கும் பல்சுவை விருந்து தயார் செய்து பரிமாறினாள்; இப்படி, அவர்கள் சத்திரத்தில் தங்கியிருந்த வேளையில்...

அண்ணன்மார்கள் இருவரும், 'தம்பி விக்ரமை கொன்று விட்டால், அதிசயக் கிளியை நம்மில் ஒருவன் எடுத்துக்கொள்ளலாம்; அரசகுமாரியை மற்றொருவன் மணந்து கொள்ளலாம்' என்று திட்டமிட்டனர்.

அந்த வழியே நரி வந்தது;அதனிடமே இருவரும், ஆலோசனை கேட்டனர்; நரியும், அவர்களது காதில் ஏதோ ரகசியம் சொல்லியது.

அவர்கள் தங்கியிருந்த சத்திரத்துக்குப் பின்புறம், ஒரு தோட்டம் இருந்தது. 'ஜில்'லென்ற காற்று பூக்களின் வாசனை! தோட்டத்தின் நடுவே, ஒரு பெரிய கிணறு இருந்தது; அனைவரும் அங்கே படுத்தனர்.

நடு இரவில், திராட்சை ரசம்பருகிய, இரண்டாவது அண்ணன் போதையுடன் எழுந்தான்; அவனால், நிற்க முடியவில்லை; தள்ளாடித் தள்ளாடி தன் தம்பி இருக்குமிடத்தை நோக்கி நடந்தான்.

செடிகளின், மறைவில் கால்களை மடக்கிப் படுத்திருந்தது நரி. தள்ளாடியபடி சென்றவன், நரியால், தடுக்கப்பட்டு, கீழே விழுந்தான்.

அவனால், சரியான வழியில் சென்று விக்ரம் இருந்த இடத்தை அடைய முடியவில்லை. போதை அதிகமாகியது; தம்பி என நினைத்து, அண்ணனையே கிணற்றில் தள்ளி விட்டான். அவன் விழும் போது, தள்ளியவன் காலை பிடித்துக் கொண்டான். அதனால், இருவரும் சண்டையிட்டபடியே, கிணற்றில் விழுந்தனர்.

விக்ரமும், இளரவசியும் சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினர். அண்ணன்மார்கள் இருவரும் கிணற்றில் விழுந்து கிடப்பதைக் கண்டனர்; ஒன்றும் புரியாமல் திகைத்தனர் இருவரும்.

அப்போது நரி அங்கே வந்தது. அந்த இருவரும் செய்யவிருந்த சதியைப் பற்றி விபரமாக, விக்ரமிடம் கூறியது.

பின், விக்ரம் தன் வீட்டுக்குச் சென்று, தந்தையிடம் நடந்த விபரங்கள் அனைத்தையும் கூறினான். விக்ரமுக்கும், இளவரசிக்கும் திருமணம் நடைபெற்றது; இருவரும் இளவரசியின் நாட்டுக்கு சென்றனர். அரசனாக முடிசூட்டப்பட்டான் விக்ரம். இன்பமாக வாழ்ந்தனர்.

குட்டீஸ்... கெட்ட பழக்கங்களுக்கு அடிமையான அண்ணன்கள், புத்திகெட்டு, தம்பிக்கு கெடுதல் நினைத்து, பின், தாங்களே அந்தப் பழக்கத்தால் அழிந்து போனதை பார்த்தீங்களா... நீங்கள் எல்லாரும் விக்கிரமை போல் நல்லவர்களாக இருக்கணும். அப்போதுதான் நல்லது நடக்கும். சரியா...

- முற்றும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us