தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பீம்ஸ்!

பீம்ஸ்!

பீம்ஸ்!


PUBLISHED ON : பிப் 26, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 26, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குழந்தைகளே! பீமனைப் பற்றி உங்களுக்கு ருசிகரமான கதையை சொல்லப் போகிறேன். உங்களில் யாராவது மிகுந்த பலவானாகவும், துணிவுள்ளவனாகவுமிருந்தால் அவனை பீமனைப் போல் இருக்கிறான் என்று கூறுகிறீர்கள் அல்லவா? அந்த பீமன் சிறு குழந்தையாக இருந்த போது என்ன நடந்தது தெரியுமா?

பாண்டு ராஜா, தன் மனைவிகளான, குந்தி, மாத்திரி இருவருடன் வனத்தில் வாசம் செய்து கொண்டிருந்தார். அச்சமயம்தான் பீமன் பிறந்தான்.

ஒருநாள்- குந்திதேவி பாலகனை மடியில் வைத்துக் கொண்டிருந்தாள். குடிலின் வாயிலருகே அமர்ந்து இயற்கையின் அழகைக் கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தாள். திடீரென எதிரேயிருந்த புதரிலிருந்து ஒரு புலியின் உருமல் கேட்கவே, குந்திதேவி பயந்து போனாள்.

திகிலுடன் எழுந்து ஓட யத்தனிக்கையில் மடியிலிருந்த குழந்தை நழுவி கீழேயிருந்த பெரும்பாறையில் வீழ்ந்தது.

குந்திதேவி பயத்தினால் கிறீச்சிட்டவாறு மூர்ச்சையுற்றாள்.

என்ன ஆச்சரியம்? அவள் மீண்டும் கண் விழித்த போது குழந்தை சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது. ஆனால், அந்தப் பாறை துண்டு துண்டாகியது. அதைக் கண்ட பாண்டு அரசன், தன் மகனின் பலத்தை நினைத்து வியந்தார். குந்தி தேவியோ மிகப் பெருமை கொண்டாள். இப்படிக் குழந்தையாக இருக்கையிலேயே பீமன் எவ்வளவு பலவானாக இருந்தான் பார்த்தீர்களா?

இதன் பிறகு மகாராஜா பாண்டு இறந்து போனார். குந்திதேவி தன் புதல்வர்களுடன் அத்தினாபுரத்திற்கு வந்து சேர்ந்தாள். மகாராஜா பாண்டு இறக்கும்போது பாண்டவர்கள் சிறுவர்களாக இருந்தனர். குந்திதேவி என்ன செய்வாள்? கவுரவ புத்திரர்களுடன் பாண்டவர்களும் அஸ்தினாபுரத்தில் ஒன்றாக வளர்ந்து வரலானார்கள்.

சிறுபிராயத்திலேயே பாண்டவர்கள் கவுரவர்களை விட அறிவிலும், ஆற்றலிலும், திறமையிலும் சிறந்து விளங்கினர். ஓடியாடி விளையாடுவதிலும், குறிபார்த்து அம்பெய்வதிலும் மற்றும் உடல் வலிமையிலும் தங்களை விடச் சிறந்தவர்களான பாண்டவர்களைத் துரியோதனன், மனதிற்குள் நிந்தித்தான்.

அதிலும் பீமன் இயற்கையிலேயே துடுக்கான சுபாவம் கொண்டவன். தன் வலிமையைப் பற்றி அவனுக்கு மிகுந்த கர்வமும் இருந்தது.

சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் அவன் கவுரவ புத்திரர்களை அவமானப்படுத்தி வந்தான். சிரித்தபடியே அவர்களைப் பந்துபோல ஆகாயத்தில் வீசி எறிந்து பிடிப்பான்.

ஒருவர் தலையோடு மற்றவர் தலையை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பான். அவர்கள் நூறுபேரும் பீமனைக் கண்டாலே பயந்து நடுங்கினர். பீமன் வந்ததிலிருந்து அவர்களால் நிம்மதியாக இருக்கவே முடியவில்லை. ஆற்றில் சென்று குளிக்கும்போதும், பீமன் அவர்களை இம்சித்தான். ஒவ்வொரு கரத்திலும் பத்துப் பாலர்களைப் பிடித்து தண்ணீருக்குள் அமிழ்த்தி விட்டு, அவர்கள் மூச்சுத்

திணறும்போது தரையில் வீசியெறிவது பீமனுக்கு ஒரு விளையாட்டாகவே இருந்தது.

மகா பலிஷ்டனான பீமன் விளையாட்டாக இவ்வித உபத்திரவம் செய்தபோது துரியோதனனின் மனத்தில் துவேஷம்தான் வளர்ந்து வந்தது. பீமனின்பால் ஏற்பட்ட வெறுப்பு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வந்தது.

பீமனை எப்படியாவது தந்திரமாகக் கொன்று விட வேண்டும் என்ற எண்ணம் துரியோதனனுக்கு ஏற்பட்டது. ஏன் ஏனில் சிறு வயதிலேயே இவ்வளவு பலவானாக விளங்கும் பீமன், பிற்காலத்தில் நூற்றுவரான தங்களை விடப் பலசாலியாக விளங்குவான் என்று பயந்த துரியோதனன் பீமனைக் கொல்ல சூழ்ச்சி செய்ய ஆரம்பித்தான். சூழ்ச்சியை உருவாக்கிய துரியோதனன், தக்க தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

வசந்த காலம் வந்தது. மரம் செடி கொடிகள் புதிய தோற்றத்துடன் விளங்கின.

மகரந்தத் தூளின் நறுமணம் காற்றில் கலந்து வீசியது. பற்பல வண்ணங்களிலே மலர்கள் மலர்ந்திருந்தன.

வசந்த காலத்திலே மக்கள் மிக்க குதூகலத்துடன் இருந்தனர். இதுவே தக்க தருணமென நினைத்த துரியோதனன் ஒரு பவுர்ணமி தினத்தன்று வனபோஜனத்திற்கும், ஜலக்கீரிடை செய்யவும் அழைத்தான். பாண்டவர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் இசைந்தனர்.

கங்கா நதிக்கரையில் வனப்பான பிரதேசம் இதற்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இயற்கையாகவே மிக்க அழகுடன் மண்டபம்போல் அமைந்திருந்த அவ்விடத்தில், பெரும் கூடாரங்கள் அமைக்கப்பட்டன. அடர்ந்த மரங்களும், அதைப் பின்னியிருந்த கொடிகளும், கொடிகளிலே மலர்ந்திருந்த பூக்களும், அவற்றின் இனிய மணமும், அவ்விடத்தை இன்பலோகமாகச் செய்தன.

விதவிதமான உணவு வகைகளும், தின்பண்டங்களும் சமைக்க கைதேர்ந்த வேலையாட்கள் உடன் வந்தனர். இரத்தினக் கம்பளங்கள் விரிக்கப்பட்டன. மென்மையான திண்டுகளும், விரிப்புகளும், மற்றும் அரச குமாரர்களின் தேவைக்கான சகல பொருள்களும் அங்கிருந்தன.

கூடாரங்களின் மீது குருவம்சத்தினரின் கொடி பறந்தது. அலங்கரிக்கப்பட்ட கூடாரங்களில் பற்பல கேளிக்கைகள் நடைபெற்றன. அழகிய புரவிகளிலும், ரதங்களிலும் அமர்ந்து வந்த அரசகுமாரர்கள் வனத்தின் சோபையைக் கண்டு மிக்க குதூகலம் அடைந்தனர். கூட்டம் கூட்டமாகத் திரியும் மான்களையும், தோகை விரித்தாடும் மயில்களையும், கூ கூவெனக் கூவ அழைக்கும் குயிலோசையையும் கேட்டுக் கண்டு மகிழ்ந்த அரசகுமாரர்கள், தங்கள் பூசலைக் கூட மறந்து விட்டது போல் தோன்றினர்.

இரண்டொரு நாட்களுக்குப் பிறகு ஜலக் கிரீடைக்குப் புறப்பட்டனர்.

அடர்ந்த காட்டுப் பாதையின் வழியே அவர்கள் சென்றனர். ஆங்காங்கே தடாகங்களிலே தாமரைகள் மலர்ந்திருந்தன. ஆம்பலும், நீலோற்பமும் அழகைச் சொறிந்தன.

ஆடிப்பாடிக் களித்து, உண்டு மகிழ்ந்த அரசகுமாரர்கள் துரியோதனனின் மனதிலுள்ள தீய எண்ணத்தை சற்றும் அறியவில்லை. உதட்டிலே சிரிப்பும், உள்ளத்திலே விஷமும் கொண்ட துரியோதனன், பீமனுக்காக விஷம் கலந்த உணவைத் தயாராக வைத்திருந்தான். அவ்விஷத்தில் மயக்கமுட்டக் கூடிய போதை அதிகம் கலந்திருந்தது. யாவரும் உணவருந்துகையில் பீமனுக்கு அருகில் அமர்ந்து, உபசரித்து உணவளித்தான் துரியோதனன். சுவையான பண்டங்கள் கலந்து பரிமாறப்பட்டதால் மிக்க விருப்பத்துடன் வயிறார உண்டான் பீமன்.

அன்று ஜலக்கிரீடை செய்யும்போது, பீமன் மித மிஞ்சிய உற்சாகத்துடன் நீரில் நீந்தி விளையாடியிருந்தான். களைத்துத் திரும்பியதும் சுவையான உணவும் கிடைக்கவே பீமனுக்கு அயர்ச்சி மேலிட்டது. மேலும், விஷமும் தன் குணத்தைக் காட்ட ஆரம்பித்தது.

பீமன் மட்டுமன்றி, மற்ற அரசகுமாரர்களும் களைப்பினால் அயர்ந்து நித்திரையிலாழ்ந்தனர். குளிர்ந்த காற்றும், சுகமான பஞ்சனையும் கிட்டவே பீமன் மயங்கிக் கிடந்தான்.

நடு இரவாகியதும் யாவரும் அயர்ந்திருக்கும் தருணம், துஷ்ட துரியோதனன் வலுவான கொடிகளால் பீமனின் கால்களையும், கரங்களையும் இறுகப்பிணைத்து ஆட்களின் உதவியுடன் அவனுடலை கங்கை நதியின் பிரவாகத்தில் தள்ளிவிட்டான். பின்னர் நிம்மதியாகத் தன் கூடாரத்திற்கு திரும்பினான்.

மூர்ச்சை அடைந்திருந்த பீமன் நீரில் மூழ்கி நேரே நாகலோகத்தை அடைந்தான். அங்கு விளையாடிக் கொண்டிருந்த நாகராஜ

குமாரர்கள் மீது பீமன் வீழ்ந்ததும், சுற்றியிருந்த விஷ சர்ப்பங்கள் சீறிப் பாய்ந்து பீமனைத் தாக்கின. நினைவிழந்திருந்த பீமனை அவைகள் கடித்தன. ஏற்கனவே விஷத்தினால் மயங்கிக் கிடந்த பீமனின் மூர்ச்சை இச்சர்ப்பங்களின் விஷம் ஏறியதால் அகன்றுவிடவே பீமன் மெல்லக் கண் விழித்தான்.

பீமனுடைய தோல் கடினமாக இருந்ததால், பாம்புகளின் கூறிய பற்கள் கூட சக்தியற்றுப் போயின. நினைவு வந்ததும் பீமனின் கட்டுகள் தளர்ந்தன. தன்னை சுற்றித் தாக்கிய சர்ப்பங்களை பீமன் எதிர்த்தான். அவனுடைய வலிய கரங்கள் கொடிய விஷ நாகங்களை நசுக்கியெறிந்தன. சர்ப்பங்களைப் பிடித்து ஓங்கிச் சுழற்றி வீசி எறிந்தான்.

இதைக் கண்ட மற்ற சர்ப்பங்கள் ஓடி ஒளிந்தன. சில நாகராஜனைத் தேடி விரைந்து சென்றன.

மகாராஜா... மூர்ச்சையடைந்த நிலையில் மலைபோல ஒரு மானிடன் எங்கள் மீது வீழ்ந்தான். நாங்கள் அவனைத் தாக்கினோம். உடனே சுயநினைவிற்கு வந்து விட்ட அவன் எங்களை வதம் செய்ய ஆரம்பித்து விட்டான். மகாராஜா! எங்களைக் காப்பாற்றுங்கள்,' என முறையிட்டன.

தொடரும்...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us