PUBLISHED ON : ஆக 17, 2018

நான், 1972ல், கரூர் மாவட்டம், கரூர் தெரசா மேல்நிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு படித்த போது, மாறுவேடப் போட்டி அறிவிக்கப்பட்டது.
என் தோழி மாலதி பேச்சாற்றல் மிகுந்தவள்; அவளை கேட்காமலே, அவள் பெயரை கொடுத்து விட்டேன்.
'என்ன வேஷம் போடுவது...' என்றவளுக்கு, 'கண்ணகி வேஷம் போடு... சூப்பராக பேசி, பரிசை வெல்வாய்...' என்றேன்.
அவள் மேல் நான் வைத்திருந்த நம்பிக்கையைப் பார்த்து, அவள் வியந்து நின்றாள்.
சிலப்பதிகாரத்தில், கண்ணகி - பாண்டியனின் அவையில், நியாயம் கேட்கும் காட்சியாக, 'தேரா மன்னா செப்புவதுடையன்' என்ற செய்யுளை எழுதியுள்ளார், இளங்கோவடிகள்.
நீண்ட அந்த செய்யுளை முழுவதும் எழுதி கொடுத்து, மாலதியை போட்டிக்கு தயார் செய்தேன். 'எனக்காக இல்லன்னா கூட, பரவாயில்லடி... உனக்காகவாவது நான் ஏதாவது ஒரு பரிசு வாங்கணும்...' என்றாள் மாலதி.
போட்டி நாளும் வந்தது... மாலதியின் பெயர் அறிவிக்கப்பட்டது. தலைவிரி கோலமாக, ஒற்றை சிலம்பை கையில் ஏந்தியபடி, கண்களில் கோபம் கொப்பளிக்க, அரங்கினுள் நுழைந்த மாலதி, கண்ணகியாகவே மாறி விட்டாள்.
'தேரா மன்னா செப்புவதுடையே எள்ளாறு சிறப்பின் இமையவர் வியப்ப...' என, செய்யுளை ஏற்ற, இறக்கங்களுடன் அழுத்தம் திருத்தமாக சொல்ல, பலத்த கர கோஷம் கிடைத்தது.
மாலதிக்கு தான், முதல் பரிசு என சொல்லவும், என்னைக் கட்டித் தழுவி கொண்டாள் மாலதி. நான் பரிசு பெற்றிருந்தால் கூட, அவ்வளவு சந்தோஷம் ஏற்பட்டிருக்காது; என் தோழிக்கு கிடைத்ததில், அத்தனை சந்தோஷம்.
இன்றும் எங்காவது கண்ணகியை பற்றி படித்தால், பார்த்தால் என் பள்ளிப் பருவத் தோழி மாலதியே, கண்ணகியாக, என் மனக்கண்ணில் பவனி வருவாள். தற்போது என் வயது; 58.
- ஆர்.ருக்மணி, சென்னை.
