தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/எனக்கே சொந்தம்! (2)

எனக்கே சொந்தம்! (2)

எனக்கே சொந்தம்! (2)


PUBLISHED ON : நவ 16, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 16, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''குரங்கே! என்னிடம் விளையாடு கிறாயா? முதலில் என்னைக் கடித்தாய். பிறகு மீன் பிடிப்பதாகச் சொல்லி ஏமாற்றினாய். அடுத்ததாக, பழங்கள் பழுக்கும் என்றாய். என்னைப் பசியால் தவிக்கவிட்டாய். இனியும் என்னை ஏமாற்ற முடியாது. உன்னைக் கொன்று தின்னப் போகிறேன்,'' என்று உறுமியது.

''புலி அரசே! நீங்கள் சொல்வது ஒன்றும் விளங்கவில்லையே... என் முகத்தை நன்றாகப் பாருங்கள். நானா உங்களை ஏமாற்றினேன்? உங்களுக்குத் தெரியாதது ஏதாவது உண்டா?

''இந்த காட்டில் பல வகையான குரங்குகள் உள்ளன. சில குரங்குகள் புலியைக் கடிக்கும்; சில குரங்குகள் மீன்களை பிடித்து உண்ணும்; சில குரங்குகள் பழங்களை உண்ணும்; சில குரங்குகள் மத்தளத்தைத் தட்டி இனிய இசை எழுப்பும்.

''நான் இசை எழுப்பும் வகையைச் சேர்ந்த குரங்கு. எங்களைப் போன்ற குரங்குகள் யாருக்கும் தொல்லை தர மாட்டார்கள்,'' என்று இனிமையாகப் பேசியது குரங்கு.

''நீ இசை எழுப்பும் குரங்கா?'' என்று வியப்புடன் கேட்டது புலி.

குரங்கு தன் விரல்களால், குளவிக் கூட்டை மென்மையாகத் தட்டியது. அதன் தாளம் உள்ளே யிருந்த குளவிகளுக்கு இதமாக இருந்தது. தாளத்திற்கு ஏற்ப அவை இனிய இசையை எழுப்பின.

அந்த இசையைக் கேட்டது புலி. 'இந்தக் குரங்கை விட நான் வலிமை வாய்ந்தவன். இந்த மத்தளத்தில் என்னால் இன்னும் நன்றாக இசை எழுப்ப முடியும்' என்று நினைத்தது.

''குரங்கே! மரத்தை விட்டு உடனே இறங்கு. மரத்தில் உள்ள மத்தளம் எனக்கே சொந்தம். நான்தான் அதில் இசை எழுப்புவேன்,'' என்று உறுமியது.

தன் சிரிப்பை அடக்கிக் கொண்டது குரங்கு. மரத்திலிருந்து இறங்கிய அது ஒரே ஓட்டமாக ஓடியது.

அந்த மரத்தில் ஏற முயற்சி செய்தது புலி. அதனால் முடியவில்லை. என்ன செய்வது என்று சிந்தித்தது.

மண் மேடு ஒன்றை அந்த மரத்தின் அடியில் அமைத்தது. அந்த மேட்டிலிருந்து மரத்தின் கிளைக்குத் தாவி அதில் அமர்ந்தது.

பெரிய குளவிக் கூட்டை மத்தளம் என்று நினைத்தது.

தன் முன்னங்காலால் அதை வேகமாக அடித்தது. குளவிக் கூடு உடைந்து நொறுங்கியது.

உள்ளே இருந்த குளவிகள் கோபத்துடன் வெளியே பறந்து வந்தன. புலியின் உடலிலும், முகத்திலும் கொட்டின. குளவிகளின் கடியால் புலியின் முகமே வீங்கி விட்டது. வலி தாங்க முடியாமல் துடித்த அது மரத்திலிருந்து கீழே குதித்தது.

குரங்கைத் தேடிக் கோபத்துடன் அங்கும், இங்கும் அலைந்தது.

புலி வருவதைப் பார்த்து விட்டு வேகமாக ஓடியது அந்தக் குரங்கு. பாம்புப் புற்று ஒன்றைக் கண்டது. புற்றிற்குள் தன் வாலை மெல்ல நுழைத்தது. வாலின் பெரும்பகுதி வெளியே இருந்தது. கண்களை மூடிக்கொண்டு தியானத்தில் இருப்பது போல நடித்தது.

அங்கே வந்த புலி, ''குரங்கே! நீ எனக்குக் கொடுத்த தொல்லைகள் ஒன்றா? இரண்டா? என் முதுகைக் கடித்தாய். மீன் பிடிப்பதாகச் சொல்லி ஏமாற்றினாய். பழம் பழுக்கும் என்று காத்திருக்க வைத்தாய். குளவிக் கூட்டை மத்தளம் என்று தட்டச் சொன்னாய்.

அதைத் தட்டிவிட்டு, நான் படாத பாடு பட்டேன். குளவிகள் என்னைக் கொட்டித் தீர்த்துவிட்டன. என் முகமே வீங்கி விட்டது. இத்தனை கொடுமைகள் செய்த உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன்,'' என்று உறுமியது.

கண்களை மெல்லத் திறந்தது குரங்கு.

''அறிவும், வலிமையும் நிரம்பிய அரசே! நீங்கள் சொல்வது ஒன்றும் எனக்கு விளங்கவில்லை.

இந்தக் காட்டில் பல வகையான குரங்குகள் உள்ளன. சில புலியைக் கடிக்கும்; சில மீன் பிடிக்கும்; சில பழங்களைத் தின்னும்; சில மத்தளத்தைத் தட்டி இசை எழுப்பும்; சில மந்திர ஆற்றலைப் பெறுவதற்காகத் தியானம் செய்யும்.

''நான் தியானம் செய்யும் வகையைச் சேர்ந்த குரங்கு. இந்தப் புற்று மந்திர ஆற்றல் வாய்ந்தது. என் வாலை இதற்குள் நுழைத்துப் பல ஆண்டுகளாகத் தவம் செய்து வருகிறேன்.

இந்தப் புற்றின் ஆற்றலால் நான் முதுமை அடையவில்லை. எப்போதும் இளமையாக இருக்கிறேன். தியானம் கலைந்தால் இந்தப் புற்றை என் வாலால் தட்டுவேன்,'' என்ற அது புற்றை மெல்லத் தட்டியது.

அதன் பேச்சை உண்மை என்று நம்பியது புலி. தானும் இளமையோடு நீண்ட காலம் வாழ நினைத்தது.

''ஏ! குரங்கே! இந்தப் புற்றுகள் அனைத்தும் எனக்கே சொந்தம். நீ தவம் செய்தது போதும். இங்கிருந்து ஓடிவிடு. நான் தவம் செய்யப் போகிறேன்,'' என்றது.

'தன் திட்டம் வெற்றி பெறப் போகிறது. புலி சாகப் போகிறது' என்று உள்ளுக்குள் மகிழ்ந்தது குரங்கு.

அங்கிருந்து சென்ற அது ஒரு மரத்தில் ஏறி அமர்ந்தது. என்ன நடக்கிறது என்று கவனித்தது.

குரங்கைப் போலவே, பாம்புப் புற்றின் அருகே அமர்ந்தது புலி. தன் வால் முழுமையும் புற்றுக்குள் விட்டது. வாலால் வலிமையாக அடிக்கத் தொடங்கியது.

தடதடவென்று ஓசை கேட்டுப் புற்றுக்குள் இருந்த பாம்பு விழித்தது. கோபத்துடன் வெளியே வர முயற்சி செய்தது. அதனால் முடியவில்லை. புற்றிற்குள் இருந்த புலியின் வாலில் பலமுறை கொத்தியது.

நஞ்சு தலைக்கு ஏறிய புலி அங்கேயே துடிதுடித்து இறந்தது.

கொடிய புலி இறந்ததைப் பார்த்துக் குரங்கு மகிழ்ந்தது. புலி இறந்ததை அறிந்த காட்டு விலங்குகள் அனைத்தும் அங்கு வந்து, குரங்கைப் பாராட்டின.

புலியின் கொடுமை இல்லாததால், எல்லா விலங்குகளும் அங்கே மகிழ்ச்சியாக வாழ்ந்தன.

முற்றும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us