தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஹெர்குலிஸ்! (6)

ஹெர்குலிஸ்! (6)

ஹெர்குலிஸ்! (6)


PUBLISHED ON : நவ 16, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 16, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இதுவரை: ஆர்ட்டிமிசு தேவதைக்கு சொந்தமான மானை கொண்டுவரச் சொன்னாள் யுரிஸ்தியசு. இனி...

தன் அம்புக் கூட்டிலிருந்து மெல்லிய அம்பு ஒன்றை எடுத்தான். அதை வில்லில் பூட்டினான். மானின் முன்னங்கால்கள் இரண்டையும் கட்டுமாறு சொல்லி அதை விட்டான். அவன் குறி தவறவில்லை. அந்த மானின் முன்னங்கால்கள் இரண்டையும் அம்பு கட்டியது.

வேதனையால் முனகியபடி, ஆர்ட்டிமிசுவின் கோவிலுக்குள் நுழைந்து, தேவதைச் சிலையின் காலருகே படுத்தது.

அதன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. வேதனையால் துடித்தப்படியே கலைமான் கோவிலுக்குள் செல்வதைப் பார்த்தான் ஹெர்குலிஸ்.

ஆர்ட்டிமிசு தேவதையின் கோபத்திற்கு ஆளாக அவன் விரும்பவில்லை. அதனால், கோவிலுக்குள் செல்லாமல் வெளியேயே நின்றான். 'எப்படியும் அந்த மான் வெளியே வந்துதான் ஆக வேண்டும். அதுவரை பொறுமையாகக் காத்திருப்போம்' என்று நினைத்தான்.

சிறிது நேரம் சென்றது-

ஆர்ட்டிமிசு தேவதை வானத்தில் தோன்றினாள். அவள் தலையில் விண்மீன்கள் ஒளி வீசின. காலடியில் அந்த கலைமான் இருந்தது.

கோபக்கனல் வீச அவள் ஹெர்குலிசைப் பார்த்தாள்.

''வேட்டைத் தேவதை நான். என் பொருளையே வேட்டையாட உனக்குத் துணிவு வந்து விட்டதா? என் வலிமை உனக்கு தெரியாதா? உன்னை நோக்கி நான் ஒரு அம்பு விட்டால் போதும். மூவுலகிலும் யாராலும் உன்னைக் காப்பாற்ற முடியாது. இதை அறிந்துமா நீ இப்படிச் செய்தாய்?'' என்று படபடத்தாள்.

அவளைப் பணிவாக வணங்கினான் ஹெர்குலிஸ்.

''அம்மா! உங்களை நாள்தோறும் வழிபடும் அடியவன் நான். நீங்கள் கோபப்படும்படி நான் நடந்து கொள்வேனா? உங்கள் கலைமானுக்கு நான் அறிந்து துன்பம் தருவேனா? எல்லாம் அறிந்தவர் தாங்கள். என் நிலையையும் நீங்கள் அறிவீர்கள்.

''மன்னன் யுரிஸ்தியசு கொடுக்கும் பத்து வேலைகளை நான் செய்து முடிக்க வேண்டும். இது தேவாதி தேவன் ஜீயசின் கட்டளை. யுரிஸ்தியசுவின் கட்டளைகளை நிறைவேற்றும் பணியாள் நான். இவற்றை நான் விரும்பி நிறைவேற்றவில்லை. உங்களின் மானுக்கு எந்தத் துன்பமும் தரக் கூடாது என்று நினைத்தேன். அதனால்தான் நான் அதன் கால்களுக்குக் குறி வைத்தேன். இது உங்களுக்கும் தெரியும். இந்த நிலையில் நீங்கள் என் மீது கோபம் கொள்ளலாமா?'' என்று உணர்ச்சி பொங்கக் கேட்டான்.

ஹெர்குலிஸின் மீது தவறு இல்லை என்பதை அறிந்து, அவளின் கோபம் மறைந்தது.

''ஹெர்குலிஸ்! இந்த மானை யுரிஸ்தியசு மன்னனிடம் காட்டி விட்டு, மீண்டும் இங்கேயே கொண்டு வந்து விட்டுவிடு,'' என்றாள் தேவதை.

''நன்றி தாயே!'' என்றான் ஹெர்குலிஸ்.

அதன்பிறகு அந்தக் கலைமான் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. அவன் பின்னால் அமைதியாக வந்தது.

கலைமானுடன் ஹெர்குலிஸ், அரசன் யுரிஸ்தியசுவின் அவைக்கு வந்தான். ஒளி வீசும் அந்த மானின் அழகில் எல்லாரும் தங்களை மறந்தனர்.

''ஹெர்குலிஸ்! இந்த கலைமான் இங்கேயே இருக்கட்டும்,'' என்றான் யுரிஸ்தியசு.

ஆர்ட்டிமிசு தேவதையின் கட்டளையைச் சொன்னான் ஹெர்குலிஸ்.

யுரிஸ்தியசு ஏதும் பேசவில்லை.

அங்கிருந்து அந்த மானை அழைத்துச் சென்ற ஹெர்குலிஸ், தேவதையின் கோவிலில் விட்டு விட்டுத் திரும்பினான்.

மீண்டும் யுரிஸ்தியசுவை சந்தித்தான் ஹெர்குலிஸ், ''எனக்கு நீ வைக்கப் போகும் நான்காவது சோதனை என்ன?'' என்று கேட்டான்.

ஏற்கனவே, என்ன சோதனை வைப்பது என்று சிந்தித்து வைத்திருந்தான் யுரிஸ்தியசு.

''ஹெர்குலிஸ்! எரிமாந்தசு மலைப்பன்றியை உயிருடன் பிடித்து வர வேண்டும்,'' என்றான்.

இதைக் கேட்ட ஹெர்குலிஸ், ''மலைப் பன்றியைக் கொல்வதே கடினம். அதை உயிருடன் பிடித்துத்தூக்கி வருவது அதைவிடக் கடினம். எப்படி இருந்தால் என்ன? நம்மால் இயலாத செயலா?'' என்ற எண்ணத்தில் அங்கிருந்து புறப்பட்டான்.

பல நாட்கள் பயணத்திற்குப் பின் எரிமாந்தசு மலையை அடைந்தான்.

அங்கே இருந்தவர்களிடம், ''அந்த மலைப் பன்றியைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் தெரியுமா? அது எங்கே இருக்கும்?'' என்று விசாரித்தான்.

''அந்த மலைப் பன்றி மிகுந்த வலிமை உடையது. ஏதேனும் பெரிய மரத்தில் அது மோதினால், அந்த மரம் நிலைகுலைந்து கீழே சாயும். அது தோற்றத்தில் யானைக் குட்டியை விடப் பெரிதாக இருக்கும். குதிரையை விட வேகமாக ஓடும். அதன் பற்கள் யானைத் தந்தங்களை விடப் பெரிதாக இருக்கும்.

அதன் தோல் இரும்பை விட உறுதியானது. அம்புகளோ, ஈட்டியோ அதைத் துளைக்க முடியாது. வாளால் வெட்டினால் வாலின் முனைதான் மழுங்கும். அதைப் பிடிக்கக் குதிரை வீரர்கள் பலர் முயற்சி செய்தனர். யாருமே உயிருடன் திரும்பவில்லை. அதன் கூர்மையான பற்களால் தாக்கப்பட்டுக் குதிரையுடன் இறந்து போயினர்.

அந்தப் பன்றி மலை அடிவாரத்தில் திரிந்து கொண்டிருக்கும். அது எங்கே இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அதற்கு அஞ்சி நாங்கள் யாரும் அந்த மலைப்பக்கமே போவது இல்லை,'' என்றனர். 'கொடிய அந்தப் பன்றியை எப்படி உயிருடன் பிடிப்பது' என்று சிந்தித்தான் ஹெர்குலிஸ்.

நன்கு முறுக்கப்பட்ட வலிமையான கயிற்றைக் கொண்டு வலை ஒன்று பின்னினான். அந்த வலையை யாராலும் அறுக்க முடியாது.

அந்த வலையை ஒரு தோளில் போட்டுக் கொண்டான். இன்னொரு தோளில் வில்லை மாட்டிக் கொண்டான். கையில் கதையைத் தூக்கிக் கொண்டான். எரிமாந்தசு பன்றியைத் தேடிப் புறப்பட்டான்.

'மலைப் பன்றியை வேட்டையாட மாவீரன் ஹெர்குலிஸ் வந்திருக்கிறார். மிகுந்த வலிமை வாய்ந்த அவர் எதற்கும் அஞ்சாதவர். எத்தனையோ கொடிய விலங்குகளைக் கொன்று இருக்கிறார்' என்று கேள்விப்பட்டனர் வேடர்கள்.

மலைப் பகுதியில் வாழ்ந்த அவர்கள் ஹெர்குலிசை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

''எங்களால் ஏதேனும் உதவி தேவையானால் தயங்காமல் கேளுங்கள். செய்கிறோம்,'' என்றனர்.

''பன்றி இருக்கும் இடத்தைக் கண்டு பிடிக்க வேண்டும். அதற்கு உங்கள் வேட்டை நாய்களில் இரண்டினைத் தாருங்கள்,'' என்றான் ஹெர்குலிஸ்.

அதன்படியே இரண்டு வேட்டை நாய்களை தந்தனர். அந்த இரண்டு நாய்களும் மோப்பம் பிடித்துக் கொண்டே ஓடத் தொடங்கின. ஹெர்குலிசும் அவற்றைத் தொடர்ந்து ஓடினான்.

மதிய உணவிற்காக அலைந்து கொண்டிருந்த பன்றியை வேட்டை நாய்கள் பார்த்து விட்டன. பயங்கர மாகக் குரைத்தபடி பன்றியை நோக்கிப் பாய்ந்தன.

அஞ்சிய பன்றி அங்கிருந்து வேகமாக ஓடத் தொடங்கியது. வேட்டை நாய்கள் அதைத் துரத்தின. நாய்களுக்குப் பின்னால் ஹெர்குலிசும் ஓடிக் கொண்டிருந்தான்.

மாலை வந்து, இரவும் வந்து, பொழுதும் விடிந்தது. எல்லாரும் ஓடிக் கொண்டே இருந்தனர்.

ஓர் ஓடைக் கரையை அடைந்த பன்றி அங்கே நின்றது. அந்த ஓடையில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. வலது பக்கம் பார்த்தது. அங்கே பள்ளத்தாக்கு இருந்தது. இடது பக்கம் பார்த்தது. அங்கே செங்குத்தாக உயர்ந்த மலை இருந்தது.

தப்பிக்க வழியில்லை என்பதை அறிந்த பன்றி திரும்பியது. தன்னைத் துரத்தி வந்த வேட்டை நாய்களைக் கோபத்துடன் முறைத்துப் பார்த்தது.

கண்கள் சிவக்க சீற்றத்துடன் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தது. மூர்க்கத்துடன் நின்ற அதைப் பார்க்கவே பயங்கரமாக இருந்தது.

அதைப் பார்த்து அஞ்சிய நாய்கள் அப்படியே திகைத்து நின்றன. தாக்கத் துணிவு வராமல் பின்வாங்கத் தொடங்கின.

தொடர்ந்து வந்த ஹெர்குலிஸ் நாய்களின் நிலையைப் பார்த்தான். அவற்றை உற்சாகப்படுத்த நினைத்த ஹெர்குலிஸ் ஆரவாரமாக குரல் எழுப்பினான்.

- தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us