PUBLISHED ON : டிச 23, 2011

ஒரு சமயம் நடந்த எழுத்தாளர் மாநாடு ஒன்றில் வங்காளத்தில் பிரபல எழுத்தாளரான சரத் சந்திரர் கலந்து கொண்டார். மாநாட்டுப் பந்தலில் செருப்புகள் அதிகமாகத் திருட்டுப் போவதால், சரத் சந்திரர், தன் செருப்புகளை ஒரு காகிதத்தில் சுற்றி அக்குளில் வைத்துக் கொண்டு மாநாட்டுக் கூட்டத்திற்கு வந்தார்.
அந்தக் கூட்டத்தில் இருந்த ரவீந்திரநாத் தாகூர், அதைப் பார்த்து விட்டு, ''சரத் சந்திரரே! அக்குளில் எதை அவ்வளவு பாதுகாப்பாக சுருட்டி வைத்து இருக்கிறீர்கள்?'' என்று கேட்டார்.
செருப்பு என்று சொல்ல வெட்கப்பட்ட சரத் தந்திரர், ''அது ஒரு பொருள்!'' என்றார்.
''பொருள் என்றால் என்ன? புத்தகமா? அதை இப்படிக் கொடுங்கள் பார்க்கலாம்!'' என்றார் தாகூர்.
''ஆமாம்...'' என்று நெளிந்தார் சரத் சந்திரர்.
''அப்படியானால் அது சிறந்த புராணப் புத்தகமாக இருக்க வேண்டும், நான் அதை அவசியம் பார்க்க வேண்டும், கொடுங்கள்,'' என்றார்.
சரத் சந்திரர் வெட்கத்துடன் சிரித்தார்.
''இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது. 'பாதுகா புராணம் என்று சொல்லுங்களேன்!'' என்று தாகூர் வேடிக்கையாகக் கூற, எல்லாரும் சிரித்தனர்.
பாதுகை என்றால் 'செருப்பு' என்று பொருள்.
***
