தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மாபெரும் சந்தோஷ செய்தி!

மாபெரும் சந்தோஷ செய்தி!

மாபெரும் சந்தோஷ செய்தி!


PUBLISHED ON : டிச 23, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 23, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிறிஸ்துமஸ் என்பது கடவுள் மனித உருவில் இயேசுகிறிஸ்துவாக இந்த உலகில் அவதரித்த திருநாள். இயேசு என்கிற சிசுவை பரிசுத்த ஆவியின் மூலமாக வயிற்றில் சுமந்திருந்த மேரியும் அவர் கணவர் ஜோசப்பும், 'வெளிதேசங்களில் குடியிருக்கிற அத்தனை பேரும் தங்கள் சொந்த மண்ணுக்கு திரும்பி, மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கு பெற வேண்டும்' என்ற ராஜ கட்டளையை ஏற்று நிறைமாத கர்ப்பிணியான மேரியை அழைத்துக் கொண்டு சொந்த ஊரான பெத்லகேம் திரும்பினார் ஜோசப். பெத்லகேமிற்கு வந்தபோது, மேரிக்கு பிரசவ வலி வந்து விட்டது. ஏதேனும் ஒரு சத்திரத்தில், தங்குவதற்கு இடம் கிடைக்குமா என்று பார்க்கிறார்கள்.

ஆனால், சத்திரங்கள் எல்லாமே நிரம்பி வழிகின்றன. ஒரு சத்திரக்காரன் மட்டும் அவர்களின் அவல நிலையை பார்த்து பரிதாபப்பட்டு, சத்திரத்தின் ஓரமாக உள்ள ஒரு மாட்டு தொழுவத்தில் இடம் தருகிறான்.

அங்குதான் இயேசு பாலன் பிறந்தார்.

இந்த செய்தி வானுலகத்தில் மாபெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியது. இந்த சந்தோஷத்தை பூவுலகிலும் பகிர்ந்து கொள்ள ஒரு தேவதூதன் பூமிக்கு வந்தான். வந்தவன் நேராக, கடுங்குளிரில் தணல்போட்டு, குளிர் காய்ந்தபடி இருந்த ஆடு மேய்க்கும் இடையர்களிடம் சென்றான்.

அவனுடைய பிரகாசமான உருவத்தை பார்த்து இடையர்கள் மண்டியிட, 'இதோ... சகல மக்களுக்கும் சந்தோஷமான செய்தியை அறிவிக்கிறேன்... கர்த்தராகிய கிறிஸ்து உங்களுக்காக, பெத்லகேமில் பிறந்திருக்கிறார்' என்று அறிவித்தான்.

இந்த சம்பவத்தில் புதைந்து கிடக்கிற இரு முக்கிய செய்திகள்.

ஒன்று அந்த கடவுளின் அன்பு...

இரண்டாவது எளிமை!

இந்த உலகில் வாழ்கிற மனிதர்களாகிய நாம் நல்லவர்களாக வாழதான் முயற்சிக்கிறோம். ஆனால், தினம்தினம் நம் முயற்சி தோல்வி அடைகிறது. சின்னதாகவாவது ஒரு பொய் சொல்லி விடுகிறோம். யாரை பார்த்தாவது பொறாமைப்பட்டு விடுகிறோம். எவரை பற்றியாவது தவறாக பேசி விடுகிறோம். இவை உள்ளிட்ட பல செயல்களும்தான் பாவம் என்கிற வரையறைக்குள் வருகின்றன.

எல்லா மனிதர்களின் பாவத்திற்கான பரிகாரம் செலுத்தப்பட வேண்டியிருந்தது. மனிதர்கள் தங்கள் பாவங்களுக்கு பரிகாரம் செலுத்த மிருகங்களை பலியாக கொடுத்தனர். அதற்கு பதிலாக தன்னையே பலியாக கொடுக்கவே, கடவுள், மனிதனாக அவதரித்தார்.

அதற்காகத்தான் தன் சொந்த மகனையே பூமிக்கு அனுப்பினார். மனிதர்கள் மீது கடவுள் கொண்டிருக்கும் பேரன்புக்கு இதை காட்டிலும் வேறென்ன சாட்சி வேண்டும்.

இரண்டாவது கடவுளின் எளிமை. அந்த காட்சியை பாருங்கள். இறை மைந்தனின் இவ்வுலக தாய்க்கும், தந்தைக்கும், தங்கள் சொந்த ஊரில், சிறிய நிலம் கூட சொந்தமாக இல்லை. தங்குவதற்கு அவர்கள் தேடிய இடம் சத்திரம்!

ஆம்! வறுமையில் வாடிய ஒரு தாயின் வயிற்றில்தான் அவதரித்தார் இயேசுபிரான்.

அவர் பிறந்தது மாட்டு கொட்டிலில், அவர் பிறந்த செய்தி முதலில் ராஜாக்களுக்கோ, மேன்மைமிகு பிரபுகளுக்கோ அறிவிக்கப்படவில்லை. அன்றாடம் காய்ச்சிகளான ஆட்டு இடையர்களுக்கே அறிவிக்கப்பட்டது.

இயேசு வாழ்ந்த காலத்தில் 'உன் அண்டை வீட்டுக்காரனையும் உனக்கு யாரென்றே தெரியாத அயலானையும் நேசி... உனக்குள்ள எல்லாவற்றையும் ஏழைகளுக்கு கொடு...

'உன்னை ஒருவன் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் அவனுக்கு திருப்பி காட்டு' போன்ற உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெளிப்பட வேண்டிய நேசமே அவரின் முக்கிய பிரசங்கமாக இருந்தது. இயேசுபிரான் வாழ்ந்து காட்டிய நேசத்துடனும் எளிமையுடனும் இந்த உலகிலுள்ள அனைத்து மக்களும் வாழ வேண்டும்' என்கிற இறைவனின் நோக்கத்தை நிறைவேற்றுவதே கிறிஸ்துமஸ் காலத்தின் நோக்கம்!

பிறக்க இருக்கும் புது வருடம் நம் அனைவருக்கும் சந்தோஷம், சமாதானம், செல்வம் தரும் வருடமாக அமைய வாழ்த்துக்கள்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us