PUBLISHED ON : பிப் 15, 2013

ஸ்காட்லாந்தில்தான் இந்தக் கல் சிலுவை உள்ளது. இதில், பைபிளின் காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. லண்டனிலுள்ள விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகத்திலுள்ள பல அபூர்வப் பொருள்களில் ஒன்றாக இக்கல் சிலுவையின் மாதிரி வடிவ வார்ப்பு உள்ளது. கல்லினால் ஆன இச்சிலுவை எட்டடி உயரம் உள்ளது. நிஜமான சிலுவை தென் ஸ்காட்லாந்திலுள்ள ருத்வெல் என்னுமிடத்தில் உள்ளது. கல் பைபிள் எனப்படும் இச்சிலுவையில், ஏசு பிரானின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் செதுக்கப்பட்டுள்ளன.
பண்டைக் காலத்தில் வாழ்ந்த செல்டிக் இன மக்களின் எழுத்துக்களும் இந்தக் கல் சிலுவையில் பொறிக்கப்பட்டுள்ளன. இச்சிலுவையைப் பார்ப்பவர்களின் துன்பங்கள் அகலும் என்று இதில் எழுதப் பட்டிருக்கிறது. இக்கல் சிலுவை ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் வடிக்கப்பட்டதாகக் கருதுகின்றனர். அக்காலகட்டத்து தேவாலயச் சின்னங்களில் ஒன்று இது. சாக்சானியர்களின் காலத்து தேவாலயங்கள் வெகு சிலவே இன்று உள்ளன. பத்தாம் நூற்றாண்டு வரை சர்ச்சுகள் மரத்தினால் எழுப்பப்பட்டன. அவை காலத்தினால் மக்கி மடிந்து பாழாயின. இந்தக் கல் சிலுவையை கல் பைபிள் புராதனச் சின்னங்களில் பொக்கிஷமாகக் கருதுகின்றனர்.
