PUBLISHED ON : பிப் 15, 2013

களைப்புற்று தன் குதிரையை மேலும் விரட்டிய படி, வியன்னாவை நோக்கி விரைந்து கொண்டிருந்தான் அந்தத் தூதுவன். ஸ்கான்பரன் அரண்மனையை அடைந்தாக வேண்டும் என்ற வேகவெறி அவனிடம். அரண்மனையின் பெரிய நுழைவாயிலிலிருந்த காவலர்கள் அத்தூதுவனைத் தடுத்து நிறுத்தினர்.
தூதுவன் தன் சான்றுக் கடிதங்களைக் காட்டவே, உடனே அவனை உள்ளே அனுமதித்தனர். பிறகு அரண்மனை அதிகாரி ஒருவர் அவனை அரண்மனையினுள் அழைத்து சென்றார். சில நிமிடங்களில், தூதுவன் ஆஸ்திரியச் சக்கரவர்த்தி பிரான்ஸிசின் முன் நிறுத்தப் பட்டான்.
''என்ன விஷயம்?'' என்று வினவினார் சக்கரவர்த்தி.
''எல்பா தீவிலிருந்து நெப்போலியன் தப்பி விட்டார்,'' என்று கூறிய தூதுவன், பெரும் படையுடன் பாரிஸை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் கூறினான்.
சக்கரவர்த்தியின் முகம் வெளுத்தது. நெப்போலியன் மீண்டும் தப்பி விட்டதினால், ஐரோப்பா மோசமான விளைவுகளைச் சந்திக்கப் போகிறது என்பதை உணர்ந்தவர், தன் அயல் நாட்டு மந்திரியான கவுண்ட் மெட்டர்னிச்சை அழைத்து நிலைமையைக் கூறினார்.
கவலையுடன் அதைக் கேட்ட மந்திரி, ''இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் பிரஷ்யாவின் உதவியுடன் நெப்போலியனைத் தோற்கடிக்கலாம். ஆனால், இம்முறை இவ்வெற்றி பூரணமானதாக இருக்க வேண்டும். நெப்போலியனின் குடும்பத்தினர் எவரும் அவர் இடத்தில் அமரக்கூடாது. இனி நெப்போலியனே கிடையாது!'' என்றார்.
ஆஸ்திரிய நாட்டுச் சக்கரவர்த்தி, மந்திரி தன் விருப்பப்படி செயல்பட அனுமதித்தார். நெப்போலியனின் ஒரே மகன் அப்போது ஸ்கான்பரன் அரண்மனையில் தான் இருந்தான். உடனே, அவன் அச்சமூட்டும் ஹாப்பர்க் கட்டடத்துக்கு மாற்றப்பட்டான். அக்கட்டடத்தின் காவல் இரட்டிப்பாக்கப்பட்டது. நெப்போலியனின் மகனை இருபத்து நான்கு மணிநேரமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. நெப்போலியனின் மகனுக்கு அப்போது (1815-ல்) வயது நான்கு!
நெப்போலியன் தன் மகனுக்கு இட்ட பெயர் நெப்போலியன் பிரான்ஸிஸ் ஜோசப் சார்லஸ். நெப்போலியனின் இரண்டாம் மனைவியான மேரி லூசியே அவன் தாய். ஆஸ்திரிய சக்கரவர்த்தி பிரான்ஸிசின் மகள்.
நெப்போலியனின் மகன் பிறந்தபோது நூற்றியோரு பீரங்கிகள் முழங்கி, மரியாதை செலுத்தப்பட்டது. நெப்போலியன் அப்போது புகழின் உச்சியிலிருந்தார். தன் மகனின் வருங்காலம் ஐரோப்பாவில் மகத்தானதாக இருக்கும் என்று கருதினார். இந்த நினைப்புக்கு நேர்மாறாக, அவருடைய ஒரே மகன் ஐரோப்பாவின், தனிமைமிக்க பரிதாபமான அரச குடும்பத்து நபராக வாழ்ந்தான் என்பது சோகமான வரலாறு.
மகன் பிறந்து ஒரு வருடத்துக்குள் நெப்போலியன், ரஷ்யா மீது படையெடுத்துச் சென்றார். அது மகத்தான தோல்வியில் முடிந்தது. தோல்வியினால் துவண்டுபோன நெப்போலியன் பாரிஸ் திரும்பினான். தன் நாட்டுக்குள்ளேயே சோர்ந்து போய் முடங்கிக் கிடந்தான் நெப்போலியன். ஆனால், அதுவே முடிவாகிவிடவில்லை. ஆஸ்திரியாவும் பிரஷ்யாவும், ரஷ்யாவும் சேர்ந்து கொண்டு பிரான்ஸை எதிர்க்க தயாராகி பாரிஸை நோக்கி வந்து கொண்டிருந்தன.
''மீண்டும் ஒருமுறை நான், நம் நாட்டைக் காப்பாற்றப் போயாக வேண்டும். நம் விரோதிகளில் ஒருவர் யார் தெரியுமா மகனே? உன் தாத்தா ஆஸ்திரிய சக்கரவர்த்தி!'' என்றார்.
மூன்றே வயதான அவர் மகனுக்குத் தந்தை கூறியது புரிந்திருக்குமோ என்னவோ! தன் பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த நெப்போலியனின் குழந்தை மகன் தன் தந்தையின் கண்ணீர் வழிந்த கன்னங்களில் முத்தமிட்டு வழியனுப்பினான்.
மனைவி மேரி லூசியிடம், மகனுக்குப் பாதுகாப்பாகப் பாரிசிலேயே இருக்கும்படி கூறிச்சென்றான் நெப்போலியன். ஆனால், நெப்போலியன் போர்க்களம் சென்றதும், தன் உடைமைகள் அனைத்தையும் மூட்டை கட்டிக் கொண்டு, மேரி லூசி பிரான்சிலிருந்து பயணித்து ஆஸ்திரியாவுக்கு தன் தகப்பனாரிடம் போய் விட்டாள். நெப்போலியனின் மகனும் ஸ்டான்கிரன் அரண்மனையில் வாழ வியன்னாவுக்குக் கொண்டு போகப்பட்டான். அவன் பாதுகாப்புக்காக, பிரெஞ்சு ஆயாவும் குழந்தையுடன் சென்றாள். மேரி லூசி ஒரு தாயின் பொறுப்புகளை, கடமைகளை மேற்கொள்ளவில்லை. வியன்னாவை விட்டு ஸ்விட்ஸர்லாந்துக்கும், இத்தாலிக்கும் உல்லாசப் பயணம் மேற்கொண்டாள். நெப்போலியனின் மகன் குழந்தை.ஆயாவின் பொறுப்பில் வளர்ந்தான்.
இதனிடையே நெப்போலியன் மற்றொரு தோல்வியினால் மிகவும் பாதிக்கப்பட்டு, பதவி விலகும்படி கட்டாயப்படுத்தப்பட்டு, மத்திய தரைக் கடலிலுள்ள எல்பா தீவுக்குக் கைதியாக அனுப்பப்பட்டார்.
'ஒருநாள் என் மகன் என் அருகில் பாரிஸில் இருப்பான்!' என்று சபதமேற்றார் நெப்போலியன். அது தவறு. நெப்போலியன் தன் மகனிடம் கடைசியாக விடைபெற்றுக் கொண்டுவிட்டான். அவனை மீண்டும் பார்க்கவே இல்லை என்பதுதான் உண்மை.
மாதங்கள் உருண்டன.
நெப்போலியன் எல்பா தீவிலிருந்து தப்பி, புதிய படையோடு பாரிஸை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார். மக்கள் ஆர வாரத்தோடு வரவேற்றனர். ஆட்சி அதிகாரம் திருப்பித்தரப்பட்டது. இச்செய்தியினால் ஆஸ்திரிய சக்கரவர்த்தி ஆடிப்போனார்.
வியன்னாவின் உள்பகுதியில் ஒரு பண்டைய அரசமாளிகை உண்டு. அதற்கு ஹாபர்க் அரண்மனை என்று பெயர். அதை அரண்மனை என்பதை விட கோட்டை என்றழைப்பதே பொருத்தம். ஆகவே, அதன் பாதுகாப்பும் எளிது. ஆஸ்திரிய சக்கரவர்த்தி நெப்போலியன் தன் மகனை மீட்க முயற்சி மேற்கொள்வார் என்று கவலைப்பட்டார். அதனால் குழந்தை இளவரசனைக் கண் காணிக்க பலத்த காவல் ஏற்பாடுகளைச் செய்தார். இதுமட்டும் போதாது என்று கருதிய ஆஸ்திரிய சக்கரவர்த்தி, குழந்தையினுடைய பிரெஞ்சு தொடர்பு, விசுவாசிகள் அனைத்தையும் துண்டித்தார்.
நெப்போலியனுடைய மகனை ஒரு ஆஸ்திரியப் பிரஜையாக மாற்றலானார். ஆஸ்திரியனாகவே அவன் சிந்திக்க வேண்டும். ஆஸ்திரியனாகவே, அவன் செயல்பட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். தான் நெப்போலியனின் மகன் என்பதை அவன் மறந்து விடவேண்டும் என்று விரும்பினார். ஆனால், நடந்தது-
- தொடரும்
