PUBLISHED ON : பிப் 15, 2013

மத்தூர் என்ற ஊரில் ஒரு பணக்காரன் இருந்தான். அவனிடம் பணத்திற்குக் குறைவில்லை. நிலபுலன்கள், பசு மாடுகள் ஏராளமாக இருந்தன. ஆனால், அவன் ஒரு கஞ்சன். யாருக்கும் ஒன்றும் கொடுக்க மாட்டான். அவனுக்கு வாய்த்த மனைவியும் அவனைப் போலவே குணமுடையவள்.
ஒரு தடவை அவனுடைய பசுக்களில் ஒன்று திடீரென ஏதோ வியாதிக்குள்ளாகியது. அதன் வயிறு வீங்கவே, மூச்சு விடக்கூடத் திணறிக் கொண்டிருந்தது.
இதைக்கண்ட அப்பணக்காரன், 'அடடா, இப்பசு இன்னும் கொஞ்ச நேரத்தில் இறந்து விடுவது நிச்சயம். இறந்த பிறகு, இதை ஊருக்கு வெளியே கொண்டு போய் புதைக்க செலவு செய்ய வேண்டும்' என்று தன் மனைவியிடம் கூறி, ''இதற்கு வழியென்ன?'' என்று கேட்டான்.
அவன் மனைவியும், ''என்ன செய்வீர்களோ எனக்குத் தெரியாது. பணம் செலவாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்,'' என்று கூறிவிட்டாள்.
என்ன செய்வது என்று யோசித்தவாறே, அந்தப் பணக்காரன் தன்னுடைய வீட்டுத் திண்ணையில் வந்து உட்கார்ந்தான்.
அப்போது தினமும் பிச்சை எடுத்துப் பிழைக்கும் பிராமணர் அவ்வழியாகச் சென்று கொண்டு இருந்தார். அவரைக் கண்டதும் அப்பணக்காரனுக்கு சட்டென ஒரு யோசனை தோன்றியது. அந்தப் பசுவை தானம் செய்து கொடுத்துவிட்டால் அவர் உடனே ஓட்டிக்கொண்டு போய் விடுவார். பிறகு, கவலையில்லை என நினைத்தான்.
அப்பிராமணரைக் கூப்பிட்டு ''ஐயா வெகுநாட்களாக நான் ஒரு வியாதியில் கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தேன். அவ்வியாதி தீர்ந்து விட்டால், ஒரு பசுவை, ஒரு பிராமணருக்கு தானம் செய்வதாக வேண்டிக் கொண்டேன். இப்போது நான் குணமடைந்து விட்டேன். உங்களுக்கு நான் ஒரு பசுவை தானம் செய்யலாமென நினைக்கிறேன். நீங்களும் பெரிய குடும்பஸ்தர். உங்களுக்கும் அது உதவியாக இருக்கும்,'' என்றான்.
அப்பிராமணருக்கு ஒரே சந்தோஷமாய்ப் போய்விட்டது. 'இப்பேர்ப்பட்ட மனிதனை ஊரார் கருமி என்கின்றனரே' என்ன வேடிக்கை என்று நினைத்தார்.
'இன்று அஷ்டமி, நாளை நவமி, நாளை மறுநாள் நல்ல நாள். அன்று எனக்கு நீங்கள் பசுவை தானம் செய்யுங்கள்,'' என்றார்.
''அதெல்லாம் இல்லை. கோதானத்திற்கு நல்ல வேளை பார்ப்பதா! இப்போதே ஏற்றுக் கொள்ளுங்கள்,'' என்று பிராமணரை அழைத்துக்கொண்டு வீட்டின் பின்புறமுள்ள தொழுவத்திற்குச் சென்றான் அப்பணக்காரன்.
பணக்காரன் நோயுற்ற பசுவைக் காட்டி, ''இந்தப் பசுவைத்தான் உங்களுக்கு தானம் செய்கிறேன்,'' என்று கூறினார்.
அப்பிராமணருக்கு அவனது தீய எண்ணம் புரிந்துவிட்டது. ஆயினும், வெளியே அதைக்காட்டிக் கொள்ளாமல், ''எந்தப் பசுவானாலும் அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்,'' என்றார்.
உடனே அந்தப் பணக்காரன், ''இந்தப் பசுவை உடனே நீங்கள் உங்கள் வீட்டிற்கு ஓட்டிக் கொண்டு போங்கள். இனி இதற்குப் பொறுப்பாளி நானல்ல,'' என்று கூறினான்.
''இதோ, இரண்டே நிமிஷத்தில் கொண்டு போய் விடுகிறேன்,'' என கூறி அந்த வீட்டுக் கொல்லைப்புறத்தைப் பார்த்தார்.
அவருக்கு மிருக வைத்தியம் தெரியும். ஏதோ ஒரு பச்சிலையை ஒரு மூலையில் கண்டு, அவர் கை நிறைய அந்த இலைகளைப் பறித்து வந்தார். அதை நன்றாகக் கசக்கி, அதனை அப்பசுவின் மூக்கில் பிழிந்தார்.
சற்று நேரத்திற்கெல்லாம் அப்பசு பெரிய தும்மலுடன் பனங்காய் அளவு கோழை உருண்டையை வெளியே கக்கியது. உடனே, அதன் வயிறு வீக்கம் தணிந்து குணமடைந்து விட்டது.
அந்த பிராமணர் பசுவின் மூக்கணாங் கயிறைப் பிடித்துக் கொண்டு, அப்பணக்காரனிடம், ''ரொம்ப நன்றி... இதோ பசுவை நான் அழைத்துச் செல்கிறேன்,'' என்று கூறிவிட்டு வேகமாக நடந்தார்.
அவர் போனபிறகு பணக்காரன், தன் மனைவியிடம், ''அடிப்பாவி, எனக்குத்தான் அறிவு இல்லை. நீயாவது மாட்டு வைத்தியரிடம் அழைத்துப் போங்கள் என்று சொல்லக்கூடாதா? மாட்டு வைத்தியருக்கு கொஞ்ச ரூபாய் கொடுத்திருந்தால் போதுமே... இப்படிப் பசுவை இழந்திருக்க வேண்டாமே,'' என்று அழுது புலம்பினான்.
***
