தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மிதிவண்டி!

மிதிவண்டி!

மிதிவண்டி!


PUBLISHED ON : ஜூலை 08, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 08, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'அடுத்து பேச வருபவள் கவிதா, 7ம் வகுப்பு...'

ஒலிப்பெருக்கியில் ஒலித்தது அறிவிப்பு.

மேடை ஏறி, உடன் படிக்கும் மாணவர்களை பார்த்தாள் கவிதா.

பின் நிதானமாக, ''மதிப்பிற்குரிய ஆசிரியர்களுக்கும், அன்பிற்குரிய மாணவர்களுக்கும் என் வணக்கம்...'' என பேச துவங்கினாள்.

சிறிது நேரத்தில் தயார் செய்திருந்த உரை மறந்துவிட்டது; சற்றே குழம்பிப்போனாள். கூடியிருந்தோரை பார்த்து மலங்க விழித்தாள். தொண்டையில் ஏதோ அடைப்பது போல் உணர்ந்தாள்.

''நன்றி கூறி, கீழே இறங்கி வா கவிதா...''

சப்தமின்றி கிசுகிசுத்தார் மேடைக்கு அருகே நின்றிருந்த ஆசிரியை.

திக்குமுக்காடியவள், ''நன்றி வணக்கம்...'' என கூறி, சட்டென்று மேடையில் இருந்து இறங்கினாள். வீட்டிற்கு சென்றவள் வெகுநேரம் அழுதாள்.

அப்பா சந்திரு அருகில் வந்து அமர்ந்தார்.

''முகம் வாட்டமாக உள்ளதே. ஏன் அழுகிறாய்...''

அன்பாக விசாரித்தார்.

''நான் எதுக்குமே லாயக்கு இல்லை. எனக்கு ஒன்றுமே சரியா வராது; நாளைக்கு பள்ளிக்கு செல்லமாட்டேன்...''

விம்மினாள் கவிதா. நடந்ததை கூறினாள் அக்கா.

''பேச்சுப் போட்டியில் தயாரித்திருந்த உரை மறந்து போனால் என்ன; அடுத்து வரும் போட்டியில் திக்கி திணறாமல் பேச கற்று கொள்ளலாம்...''

அவளை அணைத்தபடி தேற்றினார் அப்பா.

''எனக்கு எவ்வளவு அவமானமாக இருந்தது தெரியுமா... எல்லாரும் என்னை பார்த்து சிரித்தனர்...''

''சரி... நீ மட்டும் தான் மறந்து நின்றாயா... வேறு யாரும் உன்னை போல் திக்கி திணறினரா...''

''விக்கிரமுக்கு ஒன்றுமே சொல்ல முடியல; அப்படியே நின்னுட்டான்...''

சற்று தேறி பதிலளித்தாள் கவிதா.

''நானும் தான், என் முதல் பேச்சு போட்டியில் உன்னை போல் மறந்து நின்றேன். ஆனால், தொடர்ந்து நிறைய போட்டிகளில் கலந்துகிட்டேன்; வெற்றி பெற்றதில்லை; நீயும் கண்டிப்பா கலந்துக்கோ...''

''சரிப்பா...''

சற்று நிதானமாகி, தந்தையை அணைத்து கொண்டாள் கவிதா.

சந்திரு - சித்ரா தம்பதியருக்கு இரண்டு மகள்கள். மூத்தவள் மேகலா, 9ம் வகுப்பு படிக்கிறாள். கெட்டிக்காரி. படிப்பிலும், விளையாட்டிலும் மிகவும் சுட்டி; எந்த காரியத்தை எடுத்தாலும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற குறிக்கோள் உடையவள்.

அம்மா சித்ரா தான் அவளுக்கு முன் மாதிரி. அவர் பல்கலையில் பேராசிரியராக பணிபுரிகிறார்; லட்சியங்களை உடையவர். அவரை பாரதி கண்ட புதுமைப் பெண் என்றே சொல்லலாம்.

கவிதாவும் கெட்டிகாரி தான்; ஆனால், தாழ்வு மனப்பான்மை உடையவள்; எந்த காரியத்தை எடுத்தாலும், தோல்வி பயம் சூழ்ந்து கொள்வதால் கைவிட்டு விடுவாள்.

தன்னம்பிக்கை இன்மையை போக்க அதீத அன்பையும், அக்கறையும் செலுத்தி வருகிறார் அப்பா.

கவிதாவிற்கு நண்பர்கள் அதிகம் கிடையாது; படிப்பு, விளையாட்டில் சுமாராக இருந்தாலும், புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்டுவாள். கற்பனை கதைகளில் நாயகியாக வாழ்பவள்.

இதை நன்கு அறிந்து தான், ஊக்கப்படுத்தினார் அப்பா. குழந்தைகள் வாசிப்புக்கு ஏற்ற புத்தகங்கள், பத்திரிகைகள் வாங்கி கொடுத்தார்.

கவிதாவின் எதிர்காலத்தை எண்ணி மிகவும் கவலை கொள்வாள் சித்ரா.

அதேசமயம், கவிதா மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார் சந்திரு.

மிதிவண்டி ஓட்ட தெரியாததால் பள்ளிக்கு வேனில் தான் செல்வாள். இதற்கு முன், மிதிவண்டி ஓட்ட கற்றுக் கொடுத்தும் தடுமாற்றம் ஏற்பட்டு, மனதளவில் சோர்வுற்று, பயிற்சியை நிறுத்தினாள் கவிதா. ஆனால், தந்தை விடா முயற்சியுடன் நம்பிக்கை ஊட்டி வந்தார்.

''மிதிவண்டி ஓட்டுவது ஒரு வாழ்க்கை பாடம். சமையல், நீச்சல் போல் கற்கவேண்டிய ஒரு விஷயம். கால தாமதம் ஆகும்; ஆனால், கவிதா கண்டிப்பா கத்துப்பா...'' என்று தட்டிக்கொடுத்து பயிற்சி அளித்துவிட்டார்.

அன்று, கவிதாவின், 12ம் பிறந்த நாள். புதிய மிதிவண்டி வாங்கிக் கொடுத்து ஊக்கப்படுத்தினார் அப்பா.

மிதிவண்டியில் பள்ளிக்கு செல்ல துவங்கினாள்.

ஒரு நாள் -

''முதலில் வீட்டுக்கு யார் செல்வது என போட்டி வெச்சுக்கலாமா...''

அக்கா மேகலாவிடம் கேட்டாள் கவிதா.

''சரி... தோற்றால் அழக்கூடாது...'' என்றபடி போட்டிக்கு தயாரானாள் மேகலா.

'எப்படியாவது ஜெயிக்க வேண்டும்' என எண்ணி, அதிவேகத்தில் சென்றதால், மிதிவண்டி கட்டுப்பாட்டை இழந்து விழுந்தாள் கவிதா.

விபத்தில் நெளிந்தது மிதிவண்டி. கவிதாவிற்கும் நல்ல காயம்.

''புது மிதிவண்டிய உடைச்சுட்டியே... அப்பா திட்டப் போறாரு...''

பதறினாள் மேகலா.

கவிதாவிற்கு துக்கம் தொண்டையை அடைத்தது. இருவரும் மிதிவண்டிகளை தள்ளியவாறு அருகிலிருந்த கடைக்கு சென்றனர். கடைக்காரரின் அலைபேசியில் அப்பாவை அழைத்து அழுதபடியே தகவல் தெரிவித்தாள் கவிதா.

நிதானமாக, ''அழாதே... உனக்கு அடி ஏதும் பலமாக பட்டு இருக்கா... மிதிவண்டி உடைந்தால் பரவாயில்லை; சரி செய்துவிடலாம்; நீ தான் எனக்கு முக்கியம்...'' என ஆறுதல் கூறினார் அப்பா.

அந்த அன்பும், அக்கறையும் கவிதாவை வெகுவாக தேற்றியது. சில நாட்களில், காயங்கள் ஆறிய நிலையில் மீண்டும் பள்ளிக்கு புறப்பட்டாள்.

'பேருந்தில் சென்றுவிடலாம்' என்று எண்ணி வாசலுக்கு வந்தாள் கவிதா.

அங்கு ஆச்சரியம் காத்திருந்தது.

அவளுக்காக மிதிவண்டியுடன் நின்றிருந்தார் அப்பா.

''மிதிவண்டி பழுது நீக்கிட்டேன். இதுலயே போம்மா...''

''இல்லப்பா... மறுபடியும் விழுந்துடுவேன்...''

தயங்கினாள் கவிதா.

''விழுந்தா எழுந்துக்கலாம். ஆனால், இப்போ பயந்தால் மிதிவண்டி ஓட்ட முடியாமல் போகும்; தைரியமாக ஓட்டு...''

நம்பிக்கை அளித்தார் அப்பா.

மனபலம் அதிகரிக்க மிதிவண்டியில் பள்ளிக்கு சென்றாள் கவிதா. பின், வாழ்க்கையில் எப்போது விழுந்தாலும் எழுந்து துணிச்சலுடன் போராடினாள்.

எந்நிலையிலும் அப்பா கற்றுத்தந்த வாழ்க்கை பாடத்தை மறக்காமல் இடர்களை சந்தித்தாள். வெற்றிகளை குவித்தாள் கவிதா.

குழந்தைகளே.. வாழ்க்கை கற்று தரும் பாடத்தை கண்டு, பயம் கொள்ளாமல், நம்பிக்கையுடன் எழுந்து நடக்க பழகி கொள்வோம்!

மஞ்சுளா சுவாமிநாதன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us