
முன்னொரு காலத்தில் கடலோர கிராமம் ஒன்றில் வேணு என்பவரும் அவரது மனைவியும் வசித்து வந்தனர். அத்தம்பதியினருக்கு திருமணமாகி வெகுநாட்கள் ஆகியும் குழந்தையில்லை. ஒரு குழந்தைக்காக அவர்கள் வெகுநாட்கள் ஏங்கினர்.
வேணுவுக்கும் அவரது மனைவிக்கும் நடுத்தர வயதான போது ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தத் தம்பதியினர் மிகவும் மகிழ்ந்தனர். குழந்தைக்கு நித்யா என்று பெயரிட்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு பிறந்த குழந்தை என்பதால் வேணுவும், அவரது மனைவியும் குழந்தையின் மீது மிகுந்த அன்பும், பாசமும் காட்டினர்.
நித்யா எந்தப் பொருளைக் கேட்டாலும், குழந்தையின் ஆசையை உடனே நிறைவேற்றி வைத்தனர். நாளாக, நாளாக நித்யாவுக்கு பிடிவாதக் குணம் வந்து சேர்ந்தது. நித்யாவுக்கு ஆறு வயதானது. அவள் வசித்தது கடலோரக் கிராமம் என்பதால், கடலில் அடிக்கடி பயணம் செல்லும் கப்பல்களை நித்யா பார்த்தாள்.
அவள் ஒருநாள் தந்தையிடம், ''அப்பா! எனக்குக் கப்பலில் பயணம் செல்ல வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. என்னைக் கப்பலில் எங்கேனும் அழைத்துச் செல்லுங்கள்!'' என்று கேட்டாள்.
ஆனால், அப்போது கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. வேணுவும் நித்யாவிடம், கடல் கொந்தளிப்பு அடங்கியதும் கப்பலில் அழைத்துச் செல்வதாகக் கூறினார். ஆனால், நித்யாவோ இப்போதே போக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள்.
நித்யாவின் பிடிவாதத்தை அறிந்த அவளது பெற்றோர், அவளைக் கப்பலில் அழைத்துச் செல்ல சம்மதித்தனர்.
அதன்படி மூவரும் கப்பலில் ஏறி அடுத்துள்ள நாட்டிற்குப் பயணம் புறப்பட்டனர். கப்பல் புறப்பட்டு சிறிது நேரம் சென்றது.
நித்யா தன் தந்தையிடம், ''அப்பா! கப்பலின் மேல்தட்டிற்குச் சென்று கடலைக் கண்டு ரசிக்க வேண்டும்!'' என்று பிடிவாதம் பிடிக்கத் தொடங்கினாள்.
தந்தை வேணு, ''கடலில் கொந்தளிப்பு அடங்கியதும் செல்லலாம்,'' என்று அறிவுறுத்தினார்.
ஆனால், நித்யா எதையும் கேட்கத் தயாராயில்லை. அவள், கப்பலின் மேல்தட்டிற்குச் சென்றே தீர வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து அழுதாள். மகளின் பிடிவாதத்தை அறிந்த தந்தை, கப்பலின் மாலுமியிடம் சென்று மகளின் விருப்பத்தைக் கூறினார்.
மாலுமியோ, ''கடல் கொந்தளிப்பாக இருக்கிறது... இந்நேரத்தில் கப்பலின் மேல்தட்டிற்குச் செல்லக்கூடாது,'' என்றார்.
பின்னர் நித்யாவின் பிடிவாதத்தைக் கண்டு, கப்பல் மாலுமியும் ஒருவழியாகச் சம்மதித்தார். இறுதியில் நித்யாவின் பிடிவாதமே வெற்றி பெற்றது.
நித்யாவின் பெற்றோர் அவளை அழைத்துக் கொண்டு, கப்பலின் மேல்தளத்திற்கு வந்தனர். கப்பலின் மேல் தளத்திற்கு வந்த நித்யா, அங்கிருந்து கடலைக் கண்டு ரசித்தப்படியே வந்தாள். திடீரென்று அவள் கப்பலின் விளிம்பிற்கு வந்து கடலினுள் எட்டிப் பார்த்தாள். அந்த நேரத்தில் யாருமே எதிர்பார்க்கவில்லை!
திடீரென்று, ஒரு பெரிய அலை எழும்பி கப்பலை அப்படியே சாய்த்தது. கடலைப் பார்க்கும் ஆர்வத்தில் கவனக் குறைவாக நின்றிருந்த நித்யா, கப்பலிலிருந்து தவறி கடலுக்குள் விழுந்தாள். அதைக் கண்ட பெற்றோர் அழுது புரண்டனர்.
நித்யா கடலுக்குள் எவ்வளவு தூரம் சென்றாள் என்பது அவளுக்கே நினைவில்லை. அப்படியே மயக்கமுற்றாள்.
சிறிது நேரத்திற்குப்பிறகு, கண் திறந்த நித்யா, தான் கடலின் அடிப்பகுதிக்கு வந்துவிட்டதை உணர்ந்தாள். அவள் சுற்றுமுற்றும் பார்த்தாள். அங்கே அவளைச் சுற்றி பவளப் பாறைகள் இருந்தன. கூடவே, பல நிறங்களுடன் கூடிய அழகழகான மீன்களும் அவளைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன.
அந்த வண்ண மீன்கள் நித்யாவை, கடலினுள் இருந்த கடல்ராஜனின் அழகான மாளிகைக்குள் அழைத்துச் சென்றன.
கடல் ராஜா நித்யாவை வரவேற்று உபசரித்தான். அவள் உண்பதற்கு விதவிதமான உணவுப் பண்டங்களும் தந்தான். நித்யா தங்குவதற்கு அழகான அறை ஒன்றை உருவாக்கித் தந்தான். கடல்ராஜனின் மாளிகையில் நித்யா மகிழ்ச்சியாக நாட்களைக் கடந்தாள். இவ்வாறாக ஆண்டுகள் பல சென்றன.
இருப்பினும், நித்யாவிற்கு அவ்வப்போது தன் தாய், தந்தையரின் நினைவு வந்தது. அவள் தன் பெற்றோரை நினைத்து வருந்தினாள்.
நித்யாவின் வருத்தத்தைக் கண்ட கடல் ராஜனுக்கும், அவள் மீது இரக்கம் வந்தது. அவன் எப்படியேனும் அவளை மகிழ்விக்க நினைத்தான்.
எனவே, கடல்ராஜன் பெரிய தாமரைப் பூவொன்றில் நித்யாவை மறைத்து வைத்து, அந்தத் தாமரைப் பூவை நிலப்பகுதிக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டான். மீன்கள் அப்பூவை கடல்வழியாக நதியொன்றில் கொண்டு வந்து சேர்த்து விட்டது.
மறுநாள் பொழுது விடிந்தது! மீனவன் ஒருவன் வழக்கம்போல அந்த நதியில் மீன்பிடிக்க வந்தான். அவன் அந்தத் தாமரைப் பூவைக் கண்டான்.
'இவ்வளவு பெரியதும், அழகு வாய்ந்ததுமான தாமரைப்பூவா? இதுவரை நான் இம்மாதிரியான தாமரைப் பூவைக் கண்டதேயில்லையே?' என்று அம்மீனவன் வியந்தான்.
தொடரும்...