PUBLISHED ON : ஏப் 22, 2016

மதுரை நாகமலையில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறேன். பொதுவாக, பள்ளி மாணவர்களை அறிவியல் சம்பந்தப் பட்ட பொருட்காட்சிகளுக்கோ, நகரில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா, மிருககாட்சி சாலை போன்றவற்றிற்கு அழைத்து செல்வர்.
ஆனால், அண்மையில் எங்கள் பள்ளி மாணவர்களை, ஆசிரியர்கள் களப்பயணமாக அருகே உள்ள கிராமத்து வயலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எங்களால் வயலில் கால் வைத்து நடக்கவே முடியவில்லை.
நாங்கள் செருப்பு பிஞ்சிடுமே என்று செருப்பை கைகளில் தூக்கிக்கொண்டு நடந்ததால், வரப்பில் உள்ள, புற்கள் குத்தியதால் பாதங்களை கீழே வைக்க முடியவில்லை.
சிலர், காலில் அணிந்த காலணிகளை சேற்றில் தவறவிட்டனர். அப்போதுதான் விவசாயிகளின் கடினமான உழைப்பையும், அவர்களின் ஈடுபாடுகளையும் எளிமையான வாழ்கையையும் எங்கள் ஆசிரியர்கள் விளக்கி கூறினர்.
'இவர்கள், சேற்றில் கால் வைக்கவில்லை என்றால், நாம் சோற்றில் கை வைக்க முடியாது என்பதையும் விளக்கினர். நகர் புறத்தை ஒட்டிய கிராமப்புற விளைநிலங்கள் சிறிது சிறிதாக வீட்டுமனைகளாக மாறிவரும் இன்றைய அபாயகரமான சூழ்நிலையிலும், விவசாயத்தின் முக்கியத்துவத்தை எங்கள் ஆசிரியர்கள் கூறிய விதம் எங்கள் மனதில் ஆழமாகப் பதிந்தது. இது என் வாழ்வின் மறக்க முடியாத நிகழ்ச்சியாகவும் அமைந்தது.
- பி.சிந்து, நாகமலை.