தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பிறந்தநாள் பரிசு!

பிறந்தநாள் பரிசு!

பிறந்தநாள் பரிசு!


PUBLISHED ON : ஜூன் 03, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 03, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடிட்டிலே சிங்க ராஜாவுக்குப் பிறந்தநாள் நெருங்கிக் கொண்டிருந்தது. 'யார் பெரிய முட்டை கொண்டுவருகின்றனரோ அவர்களுக்கு வெகுமானம்!' என்று பறை அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனால் குருவி, காக்காய், கழுகு என்று முட்டையிடும் பறவைகளெல்லாம் ஏகமாய் தின்று கொழுத்திருந்தன. கோழிக்கு, தானே பரிசைத் தட்டிச் செல்ல வேண்டுமென்று ஆசை. என்ன செய்வது என்று யோசித்தபடி நடந்தது.

அந்தப் பகுதிக்கு விளையாட வந்த ஒரு கோஷ்டியினர், கால்பந்தைத் தவற விட்டிருந்தனர். அது நரியின் கண்ணில் சிக்கியது. எப்படித் தெரியுமா?

காட்டு அதிகாரிகள் தங்கும் மாளிகையில் மராமத்துவேலை நடந்து கொண்டிருந்தது. வெள்ளையடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் வாளியில் கால்பந்து குளித்துக்கொண்டிருந்தது. சாப்பாட்டு வேளை முடிந்து மறுபடி வெள்ளையடிக்க வந்த கந்தன், பந்தைத் தூக்கி வீசி எறிந்தான். சுண்ணாம்பில் ஊறிய வெள்ளைப்பந்துதான் நரி பார்வையில் பட்டது. நரி அதை உருட்டிக்கொண்டே போய் கோழியிடம் காண்பித்தது.

''பார்த்தாயா! எத்தனை பெரிய முட்டை... சிங்கராஜாவின் பிறந்த நாள் பரிசை தட்டிச்செல்!'' என்றது நரி.

கோழி கண்கள் விரிய, ''அடேயப்பா! யார் போட்ட முட்டை?'' என்று கேட்டது.

''யாருக்குத் தெரியும்! அநாதையாய் கிடந்தது எடுத்துவந்தேன். பயன்படுத்திக்கொள். யோசிக்காதே!'' என்றது நரி.

பூறந்தநாள் தினம் வந்தது. எல்லாப் பறவைகளும் கோழியையே பொறாமையோடு பார்த்தன. 'கோழியைவிட முட்டை பெரிதாயிருக்கிறதே! எப்படிப் போட்டிருக்கும்?' என்று யோசித்தன.

மயிலும், குயிலும், கருடனும் எப்படியெல்லாமோ கேட்டும் கோழி வாயே திறக்கவில்லை. 'தளுக்காய் அலங்காரம் வேறு பண்ணிக்கொண்டிருக்கிறது. அதற்குத்தான் பரிசு!' என்று எல்லாம் பெருமூச்செறிந்தன.

சிங்கராஜா ஒவ்வொறு முட்டையாய் பார்வையிட்டபடி வந்தார். கோழியின் வெள்ளை வெளேர் முட்டை அவரைக் கவர்ந்தது. வேகமாக நெருங்கி அதைக் கையிலெடுத்தார்.

''மந்திரியாரே! எத்தனை பெரியது! இதற்கே பரிசு கொடுத்து விடலாமா?'' என்று அருகிலிருந்த கரடியின் பக்கம் திரும்பினார்.

அஜாக்கிரதையால் கை நழுவிய பந்து, விழுந்த வேகத்தில் காய்ந்த சுண்ணாம்பு செதில் செதிலாக உதிர்ந்தது. ஒன்று சிங்கத்தின் கண்ணுக்குள்ளும் புகுந்தது. அவ்வளவுதான், சிங்கத்தின் கோபத்துக்கு அளவே இல்லை.

''இது மனிதர்கள் விளையாடும் பந்து. என்னை ஏமாற்ற உனக்கு எத்தனை துணிச்சல். இதற்காக உன்னை நாடு கடத்துகிறேன். நாட்டிலுள்ளோர் பொருளைக் கொண்டுவந்து ஏமாற்றிய நயவஞ்சகனே! மானிடர்களுக்கு நீ விருந்தாவாய்! இனி உனக்குக் காட்டில் இடமில்லை!'' என்று ஆணையிட்டது.

அன்றைக்கு ஓடிவந்த கோழிதான், மனிதர்களின் விதவிதமான விருப்ப உணவாக மாறிவிட்டது. காட்டுக்கே போக முடியவில்லை.

சுயபுத்தியோடு செயல்படுவதே நன்மை தரும். சதிகாரர்கள் பேச்சை கேட்டு குறுக்கு வழியில் புகழ் தேடுவது ஆபத்தையும் அவமானத்தையும் தரும்!

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us