PUBLISHED ON : அக் 23, 2021

''ஏழாம் தேதி எனக்கு பிறந்த நாள்... பரிசாக, மொபைல் போன் வாங்கி தாருங்கள்...''
பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் சுந்தர், அப்பாவிடம் கேட்டான்.
''நிச்சயம் வாங்கித் தரேன்; உன் சந்தோஷம் தான் முக்கியம்...'' என்றார் அப்பா. மிகப்பெரிய தொழில் அதிபர் அவர்.
பிறந்த நாளும் வந்தது.
புதிய மாடல் ஸ்மார்ட்
போனும் கிடைத்தது.
சுந்தரின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
அன்று ஞாயிற்றுக்கிழமை --
வழக்கமாக கிரிக்கெட் பயிற்சிக்கு போவான் சுந்தர்; ஆனால், அதிகாலையே மொபைல் கேமில் மூழ்கி விட்டான்.
தினமும் பள்ளி முடிந்து, வீடு திரும்பியவுடன், அம்மாவுடன் அரட்டை அடிப்பான். அறிவுரைகளை கேட்பான். ஆனால், மொபைல் கிடைத்ததும் உலகம் வேறாகிவிட்டது.
கலங்கி தவித்தார் அம்மா.
இறுதி தேர்வு நெருங்கியது.
தேர்வுக்கு தயாராகவில்லை சுந்தர். மொபைல் போன் பிடியிலிருந்ததால், எந்த கேள்விக்கும் விடை தெரியாமல் தவித்தான். தேர்வு எழுதிய போதே மயங்கி விழுந்தான்.
மருத்துவமனைக்கு கூட்டி சென்றனர்.
இதயம் பலவீனமாக இருப்பது தெரிய வந்தது; மூளைக்குச் செல்லும் நரம்புகளில் அதிக அழுத்தம் இருந்ததை கண்டு அதிர்ந்தார் மருத்துவர். விபரங்களை அவன் தந்தையிடம் விளக்கினார்.
மொபைல் போன் விளையாட்டால் ஏற்படும் ஆபத்து குறித்து விவரித்தார். அது, தந்தையின் காதுகளில் ஒலித்தபடியே இருந்தது.
சிகிச்சை பெற்று வீடு திரும்பினான் சுந்தர். அம்மா ஏதாவது பேச வந்தால் எரிச்சல் அடைந்தான்.
ஒரு நாள் -
சுந்தரின் நண்பன் கோபால் வீட்டுக்கு வந்தான்.
''எப்போதுமே நீ தான் விளையாட்டு மைதானத்துக்கு முதல்ல வருவ... இப்ப என்னடா ஆச்சு... ஆளையே காணோம்...'' என்று விசாரித்தான்.
சுந்தர் அதை கண்டுக்கொள்ளவில்லை.
மொபைல் போன் பிடியில் இருந்து விடுபட முடியவில்லை. அதுவே உலகம் என்றாகி விட்டான்.
கோடை விடுமுறைக்கு ஊட்டியில் மாமா வீட்டிற்கு சென்றான் சுந்தர்; அங்கு நடந்த தற்சார்பு விவசாயம் மிகவும் கவர்ந்தது.
சிறிய பகுதி நிலத்தில் குடும்ப தேவைக்கு காய்கறிகளை சாகுபடி செய்து வந்தார் மாமா. அதைக் கண்டதும் ஆர்வம் ஏற்பட்டது. தோட்ட வேலையில் நேரத்தை செலவிட்டான் சுந்தர். மொபைல் போன் பக்கம் மனம் செல்லவில்லை.
அவனுக்கு வாழ்க்கை குறித்த சிந்தனையை ஏற்படுத்தினார் மாமா; தவறுகளை சுட்டிக்காட்டி மனமாற்றத்திற்கு வழிவகுத்தார். புத்துணர்வு பெற்று, புதிய மனிதனாக திரும்பினான் சுந்தர்.
பள்ளியில், காமராஜர் பிறந்தநாளை கொண்டாட ஏற்பாடுகள் நடந்தன. சுந்தரின் அப்பா தான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
யாரும் எதிர்பாராத வகையில், 'மாணவர்களின் எதிர்காலம்' என்ற தலைப்பில் அருமையாக உரையாற்றி பாராட்டு பெற்றான் சுந்தர்.
அவன் செயல் கண்டு, நம்பிக்கையில் கண் கலங்கினார் அப்பா.
செல்லங்களே... அலைபேசி போன்ற தொடர்பு கருவிகளை, உரிய பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- வித்யுத்
