PUBLISHED ON : அக் 23, 2021

காற்றே நீ கதவு திறந்தாய்!
கொரோனா தொற்று நோய் அதிகரித்திருந்த காலத்தில், காற்றுக்காக, கண்டம் விட்டு கண்டங்களைத் தேடி அலைந்தன நாடுகள்.
'காற்றுதான், எல்லா இடத்திலும் இருக்கிறதே... இதெல்லாம் ஒரு விஷயமா...' என்ற எண்ணத்தில் இருந்த பலர், உயிர் பயத்தில் நடுங்கினர். பிராணவாயு சிலிண்டர்களைத் தேடி கண்டங்கள் தோறும் அலைந்தனர்.
துாய்மையுடன் இருக்க வேண்டும் காற்று. அது மாசுபட்டால் ஆயுசு அவ்வளவுதான்.
தொழிற்சாலைகளில் வெளியேறும் புகை மற்றும் நச்சுக்கழிவுகள், வாகனங்கள் வெளியேற்றும் புகை போன்றவை காற்று மாசுபட காரணமாகின்றன.
ஆனால், வீட்டிற்குள் ஏற்படும் காற்று மாசு பற்றி யாரும் கவனத்தில் கொள்வதில்லை. இது, வெளிப்புற மாசை விட, 10 மடங்கு மோசமானது.
உலக அளவில் பெரும்பாலானோர் வாழ்வின் பெரும் பகுதியை வீடு, வேலை செய்யும் இடம், பள்ளிகளில் தான் செலவிடுகின்றனர்.
கொரோனா தொற்று பரவல் ஏற்பட்ட போது, வீட்டிற்குள் செலவிடும் நேரம் அதிகரித்தது. கூடுதல் பாதுகாப்புக்காக வீட்டிற்குள் முடங்கி இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போது, காற்று மாசு பாதிப்பு அதிகமானது.
வீட்டின் உட்புறம் காற்று மாசுபட பல காரணங்கள் உள்ளன.
கிராமங்களில் சமைப்பதற்கு விறகு, மண்ணெண்ணெய் உபயோகிக்கின்றனர். இது காற்று மாசுக்கு வழி வகுக்கக்கூடும்.
நகர்ப்புறம் நெரிசலான பகுதிகளில் வசிப்பது, காற்றோட்ட வசதியற்ற அறை போன்றவை மாசுடன் தொடர்புடையவை.
ஊதுவர்த்தி, நறுமணத்துக்கு பயன்படுத்தும், ரூம் பிரெஷ்னர், கொசு விரட்டி போன்றவற்றில் ஆவியாகும் கரிம சேர்மங்கள் வீட்டுக்குள் காற்று மாசை உருவாக்கும்.
இந்தியாவில் ஆண்டுதோறும், 26 லட்சம் பேர் மரணத்திற்கு, வீட்டின் உட்புற காற்று மாசு காரணமாக இருப்பதாக ஓர் ஆய்வு குறிப்பிடுகிறது. நிமோனியா, மூச்சுக்குழாய் அழற்சி, நுரையீரல் கோளாறு ஆகியவை உட்புற காற்று மாசுபாட்டுடன் தொடர்புள்ள நோய்கள்.
வீட்டுக்குள் காற்றின் தரம் குறைந்தால் இருமல், தொண்டை எரிச்சல், கண் உலர்வடைதல், தலைவலி, குமட்டல் மற்றும் சோர்வு போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
காற்றின் தரத்தை மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து பார்ப்போம்...
குளியல் அறையை காற்றோட்ட வசதியுடன் வைத்திருப்பது அவசியம். அங்கு காற்றை சீரமைக்க, காற்று வெளியேற்றும் மின்விசிறி நிறுவுவது நல்லது
வீட்டை சுத்தப்படுத்த பயன்படுத்தும் ரசாயனப்பொருட்களும் காற்றில் கலந்து மாசு உருவாக்கும். அதனால் முகக்கவசம் அணிவது நல்லது
வீட்டில் அறை மற்றும் குளியல் அறையில் புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும்
வீட்டை சுத்தம் செய்தால், ஜன்னல்களை திறந்தே வைத்திருங்கள். வெளிக்காற்று அறைக்குள் ஊடுருவி மேம்படுத்தும்
சாலையோரமாகவோ, மாசு அதிகம் கொண்ட பகுதியிலோ வசித்தால் காற்றை சுத்திகரிக்கும் செடிகளை, உள் அறைகளில் வளர்ப்பது நல்லது. காற்றை சுத்திகரிக்கும் கருவியையும் நிறுவலாம்.
இவையன்றி, இயற்கையோடு இயைந்து வாழும் முறையை கடைப்பிடிப்பது நிரந்தர பலன் தரும்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.
