PUBLISHED ON : மே 04, 2018

கடலுார், நகராட்சி பள்ளியில், 1962ல் படித்தேன். ஸ்ரீனிவாச சாஸ்திரி என்பவர் கணக்கு ஆசிரியராக இருந்தார். பாடவேளைகளில், ஒவ்வொரு மாணவருக்கும், ஒரு கணக்கு கொடுத்து, கரும்பலகையில் போட சொல்வார்.
வரிசையில் நின்று போட வேண்டும். தவறாக போட்டவன் தலையில், 'ணங்...' என்று குட்டி, 'முண்டம்... முண்டம்...' என திட்டுவார்.
ஒரு நாள், தவறாக கணக்கு போட்ட என் நண்பன் ராகவேந்திரன், தலையில் குட்டி, திட்டினார். வலியால் துடித்தபடி கண்ணீர் சொட்ட நின்றவன், 'முண்டம்... முண்டம்... என்கிறீர்களே சார்... தலையில்லாததைத்தானே முண்டம் என்பர்; எனக்குத்தான் தலை இருக்கிறதே... அதில் தானே குட்டுனீங்க...' என்றான். இதை எதிர்பார்க்காத ஆசிரியர், 'குபீர்' என சிரித்து விட்டார்.
அன்றுமுதல், எந்த மாணவனையும், அவர் குட்டுவதும், திட்டுவதும் இல்லை. அந்த சம்பவம் நடந்து, 55 ஆண்டுகள் கடந்துவிட்டன. அது, இப்போதும் மனதில் பசுமையாக உள்ளது. இன்று நினைத்தாலும், சிரித்து விடுகிறேன்.
- கி.கலியபெருமாள், கடலுார்.
