PUBLISHED ON : மே 04, 2018

தேனி மாவட்டம், தர்மபுரி, ஸ்ரீ கிருஷ்ணா வித்யாலயா பள்ளியில், 1955ல், ஒன்றாம் வகுப்பு படித்தேன். அப்போது நடந்த சம்பவம், என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. பள்ளியில் சேர்ந்த பின், வகுப்புக்கு செல்லாமல், விளையாடி திரிந்தேன்.
அந்த காலத்தில், மாணவர்களை பள்ளியில் சேர்க்கவும், வகுப்புக்கு வராதவர்களைப் பிடித்து வரவும், ஆசிரியர்கள் ஊருக்குள் வருவர்.
ஒரு நாள், அய்யர் வாத்தியார், மாணவர்கள் சிலருடன் என்னை சுற்றி வளைத்தார். அழுது, அரற்றி, கூச்சலிட்டு தப்ப முயன்ற என்னை, அமுக்கி விட்டனர்.
விழுந்து, புரண்டு, திமிறிய போதும் விடவில்லை; மட்டையாகக் கிடந்த என் ஒரு கையை, வாத்தியாரும், மற்றொரு கையை, ஒரு மாணவனும், கால்களை இரண்டு பேர் பிடித்துக் கொள்ள, மல்லாக்கா துாக்கி சென்றனர்.
பள்ளி அருகே வந்ததும், வாத்தியார் கையை கடித்து, தப்பி ஓட முயன்றேன்; விடவில்லை.
வகுப்புக்குள் துாக்கிச் சென்று, குப்புறப்படுக்க வைத்து, ஆத்திரம் தீர அடித்து துவைத்தார் வாத்தியார்.
உதைத்தபடியே, 'என்னையே கடிக்கிறியா... கொன்னுருவேன்...' என்று மிரட்டிய போது, வந்து விட்டார் என் அம்மா.
'சின்னப்புள்ளய போட்டு, இப்டி அடிக்கிறியே... நீ எல்லாம் ஒரு வாத்தியாரா...' என்று கடும் கோபத்தில் திட்டியதுடன், என்னை விடுவித்து வீட்டுக்கு அழைத்து சென்றார்.
மறுநாள் ஒரு அதிசயம் நடந்தது! அம்மா திட்டியதையும், நான் கடித்ததையும் பெரிதுபடுத்தாமல், என் வீட்டிற்கே வந்து விட்டார் வாத்தியார். அம்மாவிடம் மிகவும் அன்பாக, 'படித்தால், உன் மகனுக்கு தானம்மா நல்லது...' என்று பேசி, நெகிழவைத்து, என்னைப் பள்ளிக்கு அழைத்து சென்றார்.
அதன்பின், ஒழுங்காக பள்ளி சென்று படித்தேன்; அருள்மிகு பழனியாண்டவர் கலை கல்லுாரியில், தமிழ் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றேன்.
பெரிய மனசுடன் வாத்தியார், அன்று என் வீட்டுக்கு வராமல் இருந்திருந்தால், படிப்பறிவின்றி, ஆடு, மாடு மேய்த்து கொண்டிருந்திருப்பேன். என் வாழ்வின் திசையை மாற்றியவரை நினைத்து, நெஞ்சம் நிறைய வணங்கி மகிழ்கிறேன்.
- க.மாரிமுத்து, கோவை.
