sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

பண்ணையாரின் கருமித்தனம்!

/

பண்ணையாரின் கருமித்தனம்!

பண்ணையாரின் கருமித்தனம்!

பண்ணையாரின் கருமித்தனம்!


PUBLISHED ON : ஏப் 29, 2016

Google News

PUBLISHED ON : ஏப் 29, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்னொரு காலத்தில் ஒரு பெரிய பண்ணையார் இருந்தார்.

அவருக்கு ஐநூறு ஏக்கர் பண்ணை நிலமும், நிறைய ஆடுகளும், மாடுகளும், குதிரைகளும் இருந்தன.

அவருக்கு மூன்று ஆண் மக்கள். மூவருக்கும் பெரும் பணக்காரர்கள் வீட்டில் பெண் எடுத்து திருமணம் செய்திருந்தார். அவருடைய பண்ணையில் நூறு வேலைக்காரர்கள் இருந்தனர்.

அவ்வளவு சொத்துக்கள் இருந்தும் அவர் கடைந்த மோரில் வெண்ணெய் தேடும் கஞ்சப் பிரபுவாக இருந்தார். மூன்று வேளையும் அவர் வீட்டில் வெறும் கஞ்சியும், துவையலும் தான் சாப்பாடு. மகன்கள், மருமகள்கள், வேலைக்காரர்கள் எல்லாருக்குமே அதுதான் சாப்பாடு. தானும் கஞ்சியையே குடித்து வந்தார்.

அவர் வீட்டுக்கு வந்த பணக்கார மருமகள்கள் மூவரும் சில காலம் வரை அதை பொறுத்துக் கொண்டனர். பின்னர், முணுமுணுக்கத் தொடங்கினர்.

''நமக்கென்ன பணமா இல்லை. இறைவன் அருளால் நமக்கு எல்லா செல்வமும் குறைவில்லாமல் தானே இருக்கிறது? அப்படியிருந்தும் நாம் ஏன் உப்புப் போட்ட கஞ்சியைக் குடித்து அவதிப்பட வேண்டும்? மற்றவர்களைப் போல நாமும் வயிறார உண்டு மகிழ்ச்சியோடு வாழ்ந்தால் என்ன?'' என்று மூன்று மருமகள்களும் தம் கணவர்களிடம் கேட்கத் தொடங்கினர்.

''எங்களுக்கும் நல்ல சாப்பாடு சாப்பிட ஆசை இல்லையா? எங்கள் தந்தை பணம், பணம் என்று அலைகிறாரே. அவருக்குத் தெரியாமல் நாம் எப்படி நல்ல சாப்பாடு சாப்பிட முடியும்? சாப்பிட்டால் அவர் கத்துவாரே,'' என்றான் மூத்த மகன்.

அவன் பேசியதிலிருந்தே, அவனுக்குத் தன் தந்தையின் மீது துளியும் மரியாதை இல்லை என்பது தெரிந்தது.

அப்போது மூத்தவனின் மனைவி, ''அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். உங்கள் அப்பாவோடு இன்று சாப்பிடும் போது எல்லாரும் பெயரளவுக்கு குறைவாகவே சாப்பிடுங்கள். சாப்பிட்டு விட்டு அவர் வெளியே போனதும் நான் மறுபடி சமைத்துத் தருகிறேன். எல்லாரும் நிம்மதியாகச் சாப்பிடலாம்,'' என்றாள்.

''சரி!'' என்று அனைவரும் சம்மதித்தனர்.

சாப்பாட்டு வேளை வந்தது. மூத்த மருமகள் சொன்னபடி எல்லாரும் கொஞ்சமாகவே கஞ்சி குடித்தனர். அதைக் கண்ட கஞ்சப் பண்ணையார் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

'என் மகன்களுக்கும், மருமகள்களுக்கும் இறைவன் மிகவும் சிறியவயிற்றையே படைத்திருக்கிறார். இதுவும் நல்லதுதான். அதிகம் செலவாகாது' என்று எண்ணியவாறு புறப்பட்டார்.

உடனே, மறுபடியும் உணவு தயாரிப்பதில் மூன்று மருமகள்களும் ஈடுபட்டனர். பண்ணையார் மாலையில்தான் வீடு திரும்புவார் என்பதால், ஆற, அமர சமைத்து வகை வகையாக காய்கறிகள் வைத்து எல்லாரும் வயிறாரச் சாப்பிட்டனர்.

இருந்தாலும், அவர்களில் இளைய மருமகளுக்கு அப்போதும் அச்சம் தீரவில்லை.

''இப்போது நம் மாமனார் வந்து விட்டால் நம் கதி என்ன ஆகும்?'' என்று அச்சத்தோடு கேட்டாள்.

''அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். மாமனார் வந்தாலும் வெளியில் உளுந்தைச் சிந்தி இறைத்து வைத்து இருக்கிறேன். அதைப் பார்த்ததும் நம்மைத் திட்டியபடியே ஒவ்வொன்றாகப் பொறுக்கத் தொடங்குவார். அதிலேயே நீண்ட நேரம் போய்விடும்,'' என்றாள் மூத்த மருமகள்.

அவளுடைய அறிவையும், முன் யோசனையையும் அனைவரும் மெச்சினர்.

இவ்வாறே நாள்தோறும் அவர்கள் பண்ணையாரோடு சாப்பிடும் பொழுது ஆளுக்கு அரைக்குவளை கஞ்சி குடிப்பதும், அவர் வெளியே போனதும் விருந்து சமைத்து உண்பதுமாக இருந்து வந்தனர். இதை கருமிப் பண்ணையார் அறியவே இல்லை.

ஒருநாள்-

வெளியே போய்விட்டு வந்த பண்ணையார் வயிறு வலிப்பதாகக் கூறிப்படுத்தவர் பலநாட்கள் தொடர்ந்து அவதிப்பட்டு படுத்த படுக்கையாகி விட்டார். வைத்தியரை அழைத்து வந்து காட்டலாம் என்று அவருடைய மகன்கள் சொன்னபோது வீண் செலவு என்று கூறி அதையும் மறுத்து விட்டார்.

கைப்பக்குவமாகப் பண்ணை ஆட்கள் கொண்டு வந்து கொடுத்த பச்சிலை மருந்துகளையே சாப்பிட்டு மேலும் உடலை கெடுத்துக் கொண்டார்.

நிலைமை மோசமாகி இன்றோ, நாளையோ இறந்து விடுவார் என்ற கட்டமும் நெருங்கியது.

அப்போது கஞ்சப் பண்ணையார் தம் மகன்களை அழைத்துக் குடும்ப விஷயங்களையும், சொத்து விபரங்களையும் பேசினார். தம்முடைய மூத்த மகனைப் பார்த்து, ''நான் இன்றோ, நாளையோ இறந்து விடுவேன். என் உடலை எப்படி அடக்கம் செய்வாய்?'' என்று கேட்டார்.

உடனே, மூத்தமகன் அவரை மகிழ்ச்சியுறச் செய்யும் நோக்கத்தில், ''நமக்கு என்னப்பா குறை? உங்கள் உடலை விலை மதிப்பற்ற பொற்காசுகள், முத்துக்கள், பவளங்கள், வாசனைத் திரவியங்களோடு சேர்த்து சந்தனப் பேழையில் வைத்து அடக்கம் செய்வேன்,'' என்றான்.

அதைக் கேட்ட கஞ்சப் பண்ணையார், ''அடப்பாவி! நான் செத்தவுடனேயே நம் சொத்தை எல்லாம் நீயே அழித்து விடுவாய் போலிருக்கிறதே. எனக்குப் போய் இப்படிப் பட்ட பிள்ளையா பிறக்க வேண்டும்,'' என்று தலையில் அடித்துக் கொண்டார்.

பின்னர், அருகில் நின்ற தன் இரண்டாவது மகனைப் பார்த்து, ''நீ சொல்லு! என் உடலை நீ எப்படி அடக்கம் செய்வாய்?'' என்று கேட்டார்.

தன் அண்ணனுக்குக் கிடைத்த மரியாதையைப் பார்த்துக் கொண்டிருந்த அவன், ''நான் உங்கள் உடலை சாதாரணப் பலகையால் செய்த பெட்டியில் வைத்து ஒரு சில தங்க நாணயங்களை மட்டும் அதில் வைத்து எளிமையாக அடக்கம் செய்வேன்,'' என்றான்.

''என்னது? தங்க நாணயங்களை வைத்து அடக்கம் செய்வாயா? இது தான் எளிமையா? அண்ணனுக்குத் தம்பி, தப்பாமல்தான் வந்திருக்கிறாய். தங்கத்தின் அருமை தெரியாதவனாக இருக்கிறாயே...'' என்று திட்டிய கஞ்சப் பண்ணையார், கடைசியாக தம் மூன்றாவது மகனை அழைத்து, ''நீ எப்படி அடக்கம் செய்வாய்?'' என்று கேட்டார்.

அண்ணன்கள் இருவருக்கும் ஏற்பட்ட அனுபவத்தை அறிந்திருந்ததால் அவன் தந்தையாருக்கு அதிர்ச்சி தரும் வகையில் பேச வேண்டும் என்று முடிவு செய்தான்.

''அப்பா! நீங்கள் இறந்த பின்னர் உங்கள் உடலை, நம் ஊர் ஆற்றில் வீசி விட நினைக்கிறேன்,'' என்றான்.

அதைக் கேட்டதும் கருமி, பண்ணையாருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.

''மகனே நீ தான் புத்திசாலி; இந்தக் குடும்பத்துக்கு ஏற்றவனும் நீதான். எனக்குக் கூட இப்படி ஒரு யோசனை இதுநாள் வரை தோன்றியது இல்லை. நீதான் என் உண்மையான வாரிசு!'' என்றார்.

அதைக் கேட்ட அவருடைய முதல் இரு மகன்களும் அதிர்ச்சியில் பேச முடியாமல் நின்றனர்.

இவரை எல்லாம் திருத்தவே முடியாது என தலையில் அடித்துக் கொண்டனர் மகன்கள்.






      Dinamalar
      Follow us