
கடலுார் மாவட்டம், இறையூர், அருணா மேல்நிலைப் பள்ளியில், 1979ல், 6ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு!
திருமண பத்திரிகைகளில் அச்சிட்டிருக்கும், சாமி படங்களை சேகரிக்கும் பழக்கத்தை பொழுதுபோக்காக வைத்திருந்தேன். அதற்காக தேடியபோது, வகுப்பறை அருகே, ஒரு திருமண பத்திரிகையை கண்டு எடுத்தேன்; அதில், 'குஞ்சிதபாதம், தலைமை ஆசிரியர்' என குறிப்பிட்டு இருந்தது.
கவரை பிரித்ததும் அதிர்ந்து போனேன்; அதில் நிறைய பணம் இருந்தது. பயந்து போய், தலைமையாசிரியரிடம் தந்தேன். மிகவும் மகிழ்ந்து புன்னகைத்தார்.
இச்சம்பவம் நடந்து, 40 ஆண்டுகள் கடந்து விட்டன. சமீபத்தில் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, அப்பள்ளியில் நடந்தது. வயோதிகம் காரணமாக அந்த தலைமை ஆசிரியரால் பங்கேற்க இயலவில்லை.
நண்பர்களுடன் அவரது வீட்டை கண்டுபிடித்து, பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு அளித்தேன். சிரித்தபடியே, 'என் முதல் மாத சம்பளத்தை அன்று எடுத்து தந்தாய்; ஓய்வுக்குப் பின் பொன்னாடையும், நினைவு பரிசும் நீ தான் அளித்துள்ளாய்...' என மனதார வாழ்த்தி புன்னகைத்தார்.
தற்போது, என் வயது, 56; ஆசிரியராக பணிபுரிகிறேன்; அந்த தலைமை ஆசிரியரின் வாழ்த்து மிகவும் மகிழ்ச்சி தருகிறது.
- சா.ராஜ்குமார், சென்னை.
தொடர்புக்கு: 94442 27413

