
மதுரை, மாரியம்மன் தெப்பகுளம், தியாகராஜர் மேல்நிலைப் பள்ளியில், 1968ல், 10ம் வகுப்பு படித்தபோது, வகுப்பு ஆசிரியையாக இருந்தார் பிலோமினா. மிக பிரியமாக நன்கு கற்பிப்பார்.
ஒருநாள் மதியம், வகுப்பறை மேஜையில் ஏறி விளையாடி, அட்டகாசம் செய்து கொண்டிருந்தோம். திடீரென வந்து கண்டித்தார்.
என்னை கண்டதும், 'நல்லவன் என்று நம்பினேன்; நீயும், கெட்டு விட்டாய்...' என்றார்; மிகவும் வேதனையடைந்தேன். மதிய இடைவேளையில், நண்பர்களிடம் இதைக்கூறி வருந்தினேன்.
ஒருவன் அலட்சியமாக, 'இதற்காகவா வருத்தப்படுகிறாய்; அவ கிடக்கா...' என்றான். உடனே, 'டீச்சரையா இப்படி பழித்து திட்டுகிறாய்... இனிமேல் என்கூட பேசாதே...' என்று கண்டித்தேன். இதை மறைந்து நின்று கவனித்துள்ளார் ஆசிரியை.
அடுத்த வகுப்பில் என்னை அழைத்து, 'ஆசிரியரை மதிக்க தெரிந்த குருபக்தி, உன்னை காப்பாற்றும்; ஒரு ஞானியை குருவாக ஏற்று வழிபடு; நன்றாக இருப்பாய்...' என்று அறிவுரைத்தார். மறுக்காமல், பாம்பன் சுவாமிகளை வணங்கி நலமாக உள்ளேன்.
எனக்கு, 68 வயதாகிறது; குருபக்தி ஊட்டிய அந்த ஆசிரியையை மறக்க முடியவில்லை!
- க.ராஜேந்திரன், மதுரை.
தொடர்புக்கு: 94425 30969

