
மதுரை மாவட்டம், மேலுார், ஸ்ரீ சுந்தரேஸ்வரா வித்யாசாலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 2004ல், 8ம் வகுப்பு படித்த போது, வகுப்பு ஆசிரியையாக இருந்தார் தெய்வானை. மிகவும் கண்டிப்பானவர்.
அன்று காலாண்டு தேர்வு துவங்க இருந்தது. தமிழ் முதல் தாள். தேர்வறைக்குச் செல்லும் முன், கட்டுரை நோட்டு, வீட்டுப் பயிற்சி புத்தகம் போன்றவற்றை ஆசிரியையிடம் ஒப்படைத்திருக்க வேண்டும்.
அவசரத்தில், பயிற்சி நோட்டை வீட்டிலேயே மறந்து விட்டு வந்து விட்டேன். பள்ளிக்கு சென்ற பின்தான் அதை அறிந்தேன். தேர்வு துவங்க சிறிது நேரமே இருந்தது. ஆசிரியை திட்டுவார் என பயந்து, வீட்டிற்குச் சென்று எடுத்து வந்து விடலாமா என எண்ணினேன்.
நேரம் குறைவாக இருந்தது; வீடும் தொலைவில் இருந்தது. தோழி சோனியா மிதிவண்டியில் வருவாள். விஷயத்தைக் கூறி, உதவிக் கேட்டேன்; அன்று அவள் மிதிவண்டியில் வரவில்லை. செய்வதறியாது திகைத்தேன். நடந்தே சென்று எடுத்து வர முடிவு செய்தேன். தோழியும் உடன் வந்தாள். ஓடியும், நடந்தும் சென்று, மூச்சிரைக்க திரும்பி வந்து சேர்ந்தோம்.
அப்போது, வகுப்பறையில் இருந்து மாணவ, மாணவியர் வரிசையாக வேறு இடத்திற்கு சென்று கொண்டிருந்தனர்; குழப்பமடைந்தேன்; பின் தான் தெரிந்தது, பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வதந்தி பரவியிருந்தது.
வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்திக்கொண்டிருந்தனர். அன்றைய தேர்வு ரத்தாகியிருந்தது. நடக்காத தேர்வுக்காக, கால் வலிக்க ஓடியதை எண்ணி நொந்து கொண்டேன். தற்போது, என் வயது, 28; எங்கு சென்றாலும், எடுத்து செல்ல வேண்டிய பொருட்களை சரி பார்த்த பின்தான் இன்றும் கிளம்புகிறேன்; இதனால், தேவையற்ற பதட்டத்தைத் தவிர்க்க முடிகிறது.
- த.சாந்திபிரியா, மதுரை.

