PUBLISHED ON : ஏப் 03, 2021

பையனுார் கிராமத்தில் வசித்து வந்தாள் மலர்கொடி. கணவனை இழந்தவள்; ஒரே மகன் மீது, உயிரையே வைத்திருந்தாள்.
ஒரு நாள், ''பக்கத்து நாட்டில், பொருளீட்ட எண்ணம் கொண்டுள்ளேன். திரும்பி வர, ஒரு ஆண்டு ஆகும். எனக்கு அனுமதி தாருங்கள்...'' என்றான் மகன்.
மலர்கொடி திகைத்தாள்.
''மகனே... உன்னைப் பிரிந்து எப்படி இருப்பேன்... நமக்கு தான் பொருள் வசதி இருக்கிறதே. வெளியூர் செல்லும் எண்ணத்தை கைவிடு...'' என்றாள்.
அதை ஏற்காமல் மீண்டும் வற்புறுத்தினான்.
வேறு வழியின்றி, ''செல்லும் இடங்களில், புளிய மர நிழலிலேயே தங்க வேண்டும். வரும் போது, வேப்ப மர நிழலில் தங்க வேண்டும்; இப்படி தங்குவதாக உறுதி தந்தால், வெளியூருக்கு அனுப்பி வைக்கிறேன்...'' என்று கூறினாள்.
அப்படியே உறுதி கூறி புறப்பட்டான்.
தாய் கூறியபடியே, செல்லும் வழி எல்லாம், புளிய மர நிழலிலேயே தங்கினான்.
இரு வாரத்தில், அவன் உடல் நலம் கெட துவங்கியது. நாளுக்கு நாள் நிலை மோசமாகியது.
'இந்த உடல் நிலையுடன், பயணம் மேற்கொள்வதை விட, ஊர் திரும்புவதே நல்லது' என்று நினைத்தான். அதன்படி திரும்பியபோது, வேப்ப மர நிழலில் தங்கி வந்தான். ஊரை அடைவதற்குள், அவன் உடல் ஆரோக்கியம் அடைந்தது.
வீடு திரும்பிய மகனை அன்புடன் வரவேற்றாள் தாய்.
உடனே திரும்பி வந்தது குறித்து, தாய் வியப்பு காட்டாதது கண்டு, ''அம்மா... நான், ஒரு மாதத்திற்குள் திரும்பி விடுவேன் என்பது முன்பே தெரியுமா...'' என்று கேட்டான்.
''ஆமாம்...'' என்றாள்.
வியப்பை அடக்க முடியாமல், ''எப்படியம்மா...'' என்று வினவினான்.
''நான் கூறியபடி, செல்லும் வழி எல்லாம், புளிய மர நிழலில் தங்கினாய். அந்த நிழல், உடலுக்கு மிகுந்த வெப்பத்தை தந்திருக்கும். அதனால், உடல் நலம், 10 நாட்களுக்குள் கெட்டிருக்கும். பயணத்தை தொடர முடியாது...
''திரும்பி வரும் போது, வேப்ப மர நிழலில் தங்க சொன்னேன்... வேப்ப மர நிழல், உடல் நலத்தை காக்க கூடியது; அதனால், திரும்பிய போது, உடல் நலம் சீரானது...
''உன்னை, பிரிந்திருக்க இயலாது; அதனால் தான், இந்த சூழ்ச்சியை செய்து வரவழைத்தேன்...'' என்று விளக்கினாள்.
தாயின் அன்புள்ளத்தையும், அறிவுக் கூர்மையையும் வியந்து, வெளியூர் செல்லும் எண்ணத்தை கைவிட்டான் மகன்.
செல்லங்களே... எதையும் ஆராய்ந்து அறிந்து முடிவு செய்யுங்கள்.

