
இமயமலை, மகாலங்கூர் மலைத்தொடரில் அமைந்துள்ளது எவரெஸ்ட் சிகரம்; இதன் உயரத்தை முடிவு செய்வதில் அண்டை நாடுகளான சீனாவும், நேபாளமும் போட்டி போட்டன. இறுதியில், 8 ஆயிரத்து, 848 மீட்டர் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நாடுகள் இடையே, எவரெஸ்ட் உயரம் பற்றி, 2005ல் விவாதம் நடந்தது. சீனா, 8 ஆயிரத்து, 844 மீட்டர் என்றது; நேபாளம், 8 ஆயிரத்து, 848 மீட்டர் என்றது. இந்த சர்ச்சை, 2010ல் முடிவுக்கு வந்தது. சிகரத்தின் உயரம், 8 ஆயிரத்து, 848 மீட்டர் என, இரு நாடுகளும் ஏற்று ஒப்பந்தம் செய்துகொண்டன.
எவரெஸ்ட் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. எவரெஸ்ட் சாகர் என அழைக்கிறது நேபாளம். சோமலுங்கமா என அழைக்கிறது சீனா. சாகர் மாதா என அழைக்கிறது இந்தியா.
உலகின் உயர்ந்த எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியவர்கள் பற்றிய தகவல்கள் சுவாரசியமானவை.
கடந்த, 2010ல், 3 ஆயிரத்து, 142 பேர் தனிநபராக எவரெஸ்ட் உச்சியை அடைந்துள்ளனர். இதில், மின்பகதுார் செர்ஷன், 77ம் வயதில் உச்சியை அடைந்தார். நேபாள நாட்டைச் சேர்ந்த கமி ரைடா ெஷர்பா, 24 முறை எவரெஸ்ட் உச்சியில் ஏறி சாதனை படைத்துள்ளார்.
நேபாளத்தை சேர்ந்த லக்பா ெஷர்பா என்ற பெண், ஒன்பது முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளார்.
எவரெஸ்ட் மலை ஏற்றத்துக்கு சென்ற பலர் மரணமடைந்துள்ளனர். கடந்த, 1927ல் துவங்கி, இன்று வரை, 295 பேர் இறந்துள்ளனர்; இதில், 200க்கும் அதிகமான உடல்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவோர், உலர்ந்த மாமிசம், தக்காளி சாஸில் தோய்த்த முந்திரி, பாதாம், முட்டை, பாலாடைக் கட்டி, சாக்லெட் கைவசம் வைத்திருப்பர். மலை ஏறும் போது, 8 ஆயிரம் மீட்டருக்கு மேல் உள்ள பகுதி மிகவும் ஆபத்தானது. இதில் ஏறியபோது, 191 பேரும், இறங்கும் போது, 52 பேரும் இறந்துள்ளனர்.
எவரெஸ்ட் சிகரத்தில், பாராசூட்டிலிருந்து குதிப்பது நடக்காத காரியம். பல திசைகளிலிருந்தும் காற்று வீசும். பாராசூட் பறக்கும் திசையை உறுதியாக கூற இயலாது. எனவே, அந்த முயற்சி பலன் தராது.
எவரெஸ்டில், மழை அபூர்வம்; ஆனால், பனி சிதறல் உண்டு. உச்சியில் மணிக்கு, 280 கி.மீ., வேகத்தில் காற்று வீசும்; நான்கு நாட்களுக்கு, ஒரு முறை சூறாவளி வீசும். பனிப்பாறை சரிவு சகஜமாக நடக்கும்.
ஒரு முறை, பனிப்பாறை சரிவில் சிக்கி, 19 பேர் இறந்தனர்.
இந்த சிகரத்தை அடைவது சுலபம் அல்ல. மலையில், 8 ஆயிரம் மீட்டர் ஏறி, மீதமுள்ள, 848 மீட்டரை, 172 கி.மீ., துார பாதை வழியாகக் கடக்க வேண்டும். இதற்கு, 12 மணி நேரம் வரை ஆகும்.
மலை ஏறும்போது, பனிச்சிறுத்தை, இமாலயன் கரடி, இமாலயன் கூர் கொம்பு மான், சிவப்பு பாண்டா, இமாலயன் டாகிர் வகை ஆடு என பல உயிரினங்களை பார்க்கலாம்.
- செல்வ கணபதி

