தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பூங்குழலி (10) - சரண்யா

பூங்குழலி (10) - சரண்யா

பூங்குழலி (10) - சரண்யா


PUBLISHED ON : மே 20, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 20, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இதுவரை: பட்டத்து யானையால் இளவரசி ஆன பூங்குழலியை அரசகுருவிடம் அழைத்துச் சென்றனர் கல்வி கற்பதற்காக இனி-

தலைநகர் மின்னல்புரியில் பல குருகுலம் இருந்தன. ஆனால், அவற்றில் சகல வேதங்களையும், சாஸ்திரங்களையும், சம்பிரதாயங்களையும், ஆகமவிதிகளையும், அர்த்த சாஸ்திரத்தையும் கற்பிக்கிற ஒரே குருகுலம், குரு ஞானபிரகாசரது குருகுலம் ஒன்றே என்று, அரசர் அமரசிம்மனிடம், ராஜகுரு கூறினார்.

அங்கேயே பூங்குழலியை கல்வி கற்க சேர்ப்பதென்று, அரசரும், அரசியும் தீர்மானித்தனர். அங்கு தான், ராஜகுருவின் பேத்திகளான கங்காவும், காவிரியும் கல்வி கற்று வந்தனர். அமைச்சர் அறிவுமதியின் மகன் பேரறிவாளனும், அங்கு தான் கல்வி கற்க சேர்ந்திருந்தான்.

இளவரசியின் சிறிய ரதத்தில், பூங்குழலியை, கங்கா, காவிரியுடன், குரு ஞானப்பிரகாசர் குருகுலத்துக்கு அனுப்புவதென்று முடிவாயிற்று.

''அரசே! குரு ஞானப்பிரகாசரை தாங்கள் அரண்மனைக்கு அழைப்பதாக அவருக்கு செய்தி சொல்லி அனுப்பவா?'' என்று கேட்டார் ராஜகுரு.

''வேண்டாம் ராஜகுரு அவர்களே! மாணாக்கரை தேடி குரு வருவது முறையல்ல... மாணாக்கர் தான் குருவை காண குருகுலம் செல்ல வேண்டும். நாம் குருகுலம் செல்வோம்!'' என்றார் அரசர் அமரசிம்மன்.

ரதங்கள் தயாராயின. குதிரைப் படைகள் முன்னே செல்ல, அதன் பின் ராஜரதத்தில், நடுவில் பட்டாடை உடுத்திய பூங்குழலியை உட்கார வைத்து, இருபுறமும், அரசரும், அரசியும் அவளை பத்திரமாக பிடித்துக்கொண்டு வர, அடுத்த ரதத்தில் ராஜகுரு, அவர் பேத்திகளான கங்கா, காவிரியுடன் உட்கார்ந்துவர, கடைசி ரதத்தில், அமைச்சர் அறிவுமதியும், அவர் மகன் பேரறிவாளனும் வரிசையாக வந்தனர்.

ரதங்கள் ராஜவீதியில் ஓடியபோது, மகள் பூங்குழலி, ரதத்தில் அரசர், அரசிக்கு சமமாக உட்கார்ந்து கொண்டு குருகுலம் செல்வதை பாதையோரம் நின்றிருந்த பொன்னன் பார்த்தான். மகிழ்ச்சியில் அவன் கண்களில் ஆனந்த கண்ணீர் பெருகிற்று.

ரதங்கள் குருகுலத்தை அடைந்து நின்றன. தத்தம் ரதத்திலிருந்து ஒவ்வொருவராக இறங்கி, குருகுலம் உள்ளே சென்றனர். வாசலில் கால் கழுவிக் கொண்டனர். குருகுலத்தின் முன் வாசற்படியில் கைகளை தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டனர் உள்ளே சென்றவர்கள்.

குரு ஞானப்பிரகாசர், அனைவரையும் வரவேற்று அமரச் செய்தார். பருக எல்லாருக்கும் நீர்மோர் வழங்கப்பட்டது. குரு ஞான பிரகாசரிடம் விவரம் கூறினார் ராஜகுரு.

குரு ஞானப்பிரகாசர், பூங்குழலியை அழைத்து, அவளை தலைமுதல் கால் வரை ஒருமுறை பார்த்தார். பிறகு, ''ஞானக் குழந்தை இவள்!'' என்று, பூங்குழலியின் தலையை தொட்டு ஆசிர்வதித்து கூறினார்.

பேரறிவாளனும், கங்கா, காவிரியும், அவரவர்கள் இடத்தில் சென்று அமர்ந்து கொண்டனர். அங்கு, முப்பது மாணாக்கள் வரை இருந்தனர்.

''குழந்தாய்! உன்னைப் பார்த்தாலே அறிவுமிக்கவள் என்று தெரிகிறது. உன்னால், இந்த குருகுலம் பெருமையடையப் போகிறது என்பது தெரிகிறது. வேதங்களும், உபநிஷத்துக்களும் ஒலி வடிவமானவை. அவை ஒலியாலேயே போதிக்கப்படுகின்றன. அட்சரசுத்தம் என்பது மிகவும் முக்கியமானது. ஒரு எழுத்து பிசகி வேறு ஒரு ஒலி பிரயோகிக்கப்பட்டாலும், அர்த்தம் அனர்த்தமாகிவிடும். அதனால், நான் சொல்வதை ஒருமுறை சொல் பார்ப்போம்!'' என்றார் குரு.

''தங்கள் சித்தம் என் பாக்கியம்!'' என்றாள் பூங்குழலி அவரை வணங்கியபடி.

''பழம் நழுவி பாலில் விழுந்தது!'' என்றார் குரு.

ஒலி வடிவம் சிதறாமல், நாக்குழறாமல், பூங்குழலி அதை அப்படியே சொன்னாள்.

''மிகவும் கவனத்துடன் கேட்டு, ஒரு அட்சரமும், அதன் வடிவ ஒலியை இழுக்காமல், மிகவும் சரியாகச் சொன்னாய் பூங்குழலி. நீ இக்குருகுலத்தில் சேர்க்கப்பட்டு விட்டாய். கல்வியில் நீ சிறந்து விளங்க, அந்த சரஸ்வதி தேவி உனக்கு முழு அனுக்கிரகமும் அளிப்பாள்!'' என்ற குரு, மாணாக்கள் அமரும் வரிசையில் அவள் உட்கார ஒரு இடத்தை காட்டினார்.

அங்கு சென்றமர்ந்தாள் பூங்குழலி.

''புலந்திரா!'' என்று ஒரு மாணவனை அழைத்தார் குரு. மாணவன் எழுந்து பவ்யமாக கைகளை கட்டிக்கொண்டு, அவர் எதிரே வந்து நின்றான்.

''ஈயார் தேட்டை தீயார் கொள்வர்; இதன் பொருள் என்ன புலந்திரா?'' என்று கேட்டார் குரு.

­''தருமம் செய்யாதவர்களின் செல்வத்தை திருடர்கள் அபகரித்துச் செல்வர்!'' என்றான் புலந்திரன்.

''இன்னொரு பொருள் கூட சொல்லலாம் குருவே!'' என்றாள் பூங்குழலி.

''சொல் குழந்தாய்!''

''மரங்களில் தேனடைகள் இருக்கும். அதை எடுக்கச் செல்பவர்கள், கண்கள் மட்டும் தெரிய, முகத்தை துணியால் மூடிக்கொண்டு, எரியும் தீப்பந்தத்தை, தேனடையின் அடியில் பிடிப்பர். தீயின் சூடு தாங்காமல், தேனடையிலுள்ள ஈக்கள் எல்லாம், நாலா திசையிலும் பறந்து செல்லும். பிறகு, தேனடையை மரக்கிளையிலிருந்து பிய்த்து எடுத்து வந்து பிழிந்து அதிலுள்ள தேனை எடுப்பர். தேனிக்களின், அதாவது, ஈயாரின் தேட்டை தேனீ, தீயார் தீயைக்காட்டி கொள்வார்கள்; அடைவார்கள். அதாவது ஈயார்தேட்டை தீயாரி கொள்வர்!'' என்று கூறி முடித்தாள் பூங்குழலி.

எல்லாரும் பூங்குழலியை வியந்து பர்த்தனர். புலந்திரனும், புதியதொரு விளக்கம் கொடுத்த பூங்குழலியின் அறிவை மெச்சுவது போல, அவளைப் பார்த்து புன்னகைத்தான்; அவளும் புன்னகைத்தாள்.

இருவரும், ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக்கொள்வதை, அமைச்சரின் மகன் பேரறிவாளனும் பார்த்தான்.

''குழந்தாய்! நீ கல்வி அறிவு பெற நல்ல குருவையும், குருகுலத்தையும் அடைந்துவிட்டாய். படிக்க வேண்டுமென்ற அபிலாஷை நன்றாக ஈடேறும். வாதங்களிலும், விவாதங்களிலும் ஈடுபட்டு, நீ பெயரும், புகழும் அடைவாய்,'' என்ற அரசர் அமரசிம்மன் தொடர்ந்தார்.

''ஒரு அரசகுமாரி சிறந்து விளங்க, கல்வி கற்பது மட்டும் போதாது பூங்குழலி. நீ கற்க வேண்டியது இன்னும் நிறைய உள்ளது. வாட் போர், வில் வித்தை, மற்போர், குதிரையேற்றம், யானை ஏற்றம், நீதி பரிபாலனம், நிதி நிர்வாகம், அரசை நடத்திச் செல்லல் என பல வகை உண்டு. அவைகளையும் நீ கற்று தேர்ந்தாக வேண்டும்!'' என்றார்.

''எனக்கு வில்வித்தை, வாட்போர், மற்போர் எல்லாம் எவர் தந்தையே கற்பிப்பர்!'' என்று கேட்டாள் பூங்குழலி.

''ஒவ்வொன்றுக்கும் ஒரு பயிற்சிகூடம் இருக்கிறது பூங்குழலி! அவர்கள் பயிற்சி தருவர். அமைச்சர் அதற்கான ஏற்பாடுகளையெல்லாம் செய்வார்!'' என்றார் அரசர் அமரசிம்மன்.

''தாங்களே ஏற்பாடு செய்வதோடு, நேரிலேயே அவ்வப்போது வந்து என் முன்னேற்றத்தை கவனிக்கலாமே தந்தையே!'' என்றாள் பூங்குழலி.

''அரசர் ஆணையிடுவதும், அதை அமைச்சர் நிறைவேற்றுவதும் தான் எங்கும் நடக்கும் வழக்கம் பூங்குழலி!''

அமைச்சர் அறிவுமதி, கல்வி அறிவில்லாத ஒரு போலி குருவை அழைத்து வந்தது போல், மற்ற பயிற்சிகளுக்கும், தரமற்ற, அனுபவமற்றவர்களை நியமித்துவிட்டால் என்ன செய்வது?''

சிறிது யோசித்த பூங்குழலி, ''தந்தையே நமது அரண்மனையில் நூலகம் உள்ளதா?'' என்று கேட்டாள்.

''இருக்கிறது பூங்குழலி. அங்கில்லாத ஏடுகளே கிடையாது. ஆயக்கலைகள் அறுபத்து நான்குக்கும் அங்கு ஏடுகள் உண்டு. நிதி, நீதிக்கும் எண்ணற்ற ஏடுகள் உண்டு. ஏன் கேட்கிறாய் குழந்தாய்?'' என்று கேட்டார் அரசர் அமரசிம்மன்.

''குருகுலத்தில், செவிவழி கல்வி தான் அதிகம். அது சம்பந்தப்பட்ட ஏடுகளை படித்தால், அவை தெள்ளத் தெளிவாக புரியுமல்லவா தந்தையே!''

''நீ சொல்வது சரியே குழந்தாய்! இப்போதே உன்னை நூலகத்துக்கு அனுப்பி வைக்கிறேன். உனக்கு விருப்பமான நூல்கள், ஏடுகளை எடுத்துப்படி!'' என்று கூறி, பூங்குழலியை, அரண்மனை தாதி ஒருத்தியுடன் நூலகத்துக்கு அனுப்பி வைத்தார் அரசர் அமரசிம்மன்.

(-தொடரும்)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us