தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தாங்கள் யாரோ? (2)

தாங்கள் யாரோ? (2)

தாங்கள் யாரோ? (2)


PUBLISHED ON : மே 20, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 20, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சில ஆண்டுகள் மதுரகவிராயரின் வாழ்க்கை இன்பம் மிக்கதாகவே நடந்து வந்தது. அவரும் தமிழ்ச் சுவையில் திளைத்திருந்தார். அதன் பிறகு அவர் வறுமைக்கு ஆளானார். வறுமை அவருடைய தமிழ்ப் பணியையும் கெடுத்தது. அவர் என்ன செய்வது என்று திகைத்தார். இறுதியில் காளத்தி பூபதியே தம்முடைய கொடிய வறுமைக்குரிய நல்ல மருந்து என்று துணிந்தார். உடனே காளத்தி பூபதி என்னும் காளத்தியப்பரைக் காணப்புறப்பட்டார்.

காளத்தியப்பர் புலவர்களைப் போற்றும் பேரியல்பும், இரவலர்களைப் பேணும் பெருங் குணமும் உடையவர். அவரிடத்தில் பல புலவர்கள் சென்று பாடிப் பரிசில் பெற்று மகிழ்ந்தனர். பலபட்டாடை சொக்கநாத புலவர், படிக்காசுப் புலவரெல்லாம் சென்று அவரைப் பாராட்டிப் பாடினர். அவர், தம்மிடம் பொருள் இருந்தபோது பாடி வந்த புலவர்கட்கும், நாடி வந்த இரவலர்கட்கும், இன்முகத்தோடு பொருள் கொடுத்தார்.

அவ்வாறு கொடுத்துக் கொடுத்து அவரது குடி முழுகிப் போயிற்று. அவர் இருந்த அழகிய மாளிகையையும் விற்று இரவலர்களுக்குக் கொடுத்து விட்டுக் குடிசையில் குடியேறினார்.

ஒருநாள் அவரது கையில் ஒரு காசு கூட இல்லை. அதனால், உள்ளம் 'இனி கொடுப்பதற்குப் பொருள் இல்லையே. நாளைக்கு என்னை நம்பிவரும் இரவலர்க்கு இல்லை என்று சொல்லி அவரது துன்பத்தைக் காண்பதை விட, எங்கேயாகிலும் தலைமறைவாகச் சென்று விடுவதே நல்லது' என்று எண்ணி, நெருப்பில் பட்ட மெழுகைப் போல் உருகியது. அவ்வாறு எண்ணிய அவர், அந்த ஊரை விட்டுச் சென்றார்.

அக்காளத்தியப்பரைக் காணப் புறப்பட்டுச் சென்ற மதுரகவிராயர், வழியில் ஓர் இன்பச் சோலையை அடைந்தார். அது இன்பச் சோலையாக இருந்தாலும், கவிராயருக்குத் துன்பச் சோலையாக தோன்றியது. கவிராயர் அங்கிருந்த உயிர்களை உற்று நோக்கினார்.

'இங்கு இருக்கும் உயிர்களெல்லாம் பசியால் படாத பாடுபடுகின்றன. இதோ செல்லும் இந்த எறும்பிற்குக் கண்ணிற்குத் தெரியாத வயிறு. அவ்வளவு சிறிய வயிற்றிற்கும் இரைக்காக இரவு பகலாக அலைகிறது. மழை பெய்தால் ஏரி குளங்கள் நிறைந்து பல மாதங்கள் அமைதியாக இருக்கின்றன. இந்த வயிறு ஒரு நாளைக்கு எத்தனை முறை உணவு கேட்கிறது? இந்த வயிற்றினுள் பெரிய நெருப்புத்தான் இருக்கிறதோ? அல்லது வடவைத் தீதான் இருக்கிறதோ?' என்று எண்ணி வருந்தினார்.

அவ்வாறு வருந்திய கவிராயர், பிறகு வழி நடந்தார். சூரியன் கனலைக் கக்கி விட்டு மறைந்தான். இருளும் மெதுவாகச் சூழ்ந்து கொண்டிருந்தது, எங்கும் இருள் பரவியது. மதுரகவிராயர் மெதுவாக நடந்து சென்று ஒரு சத்திரத்தை அடைந்தார். அந்தச் சத்திரத்தின் ஒரு மூலையில் ஒரு மங்கலான விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

அங்கும் இங்கும் சிலர் துணிகளை விரித்தும், சிலர் வெறுந்தரையிலும் படுத்துக் கொண்டிருந்தனர். கவிராயருக்கு வழி நடந்த களைப்பும், உள்ளத்தின் சோர்வும், பசித் துன்பமும் மிகுதியாக இருந்தன. அதனால், அவரும் அச்சத்திரத்தில் படுத்தார். உடம்பின் வலியாலும், பசியின் கடுமையினாலும் அவருக்குத் தூக்கம் வரவில்லை. அதற்குப் பதில் ஏக்கமே வந்தது.

அந்த ஏக்கத்தில் அவர் சிறிது நேரம் புரண்டு புரண்டு படுத்தார். அப்போதும் அவருக்குத் தூக்கம் வரவில்லை. அந்நிலையில் அவர் பெருமூச்சு விட்டபடியே எழுந்தார். மனம் நொந்து, தமது வருமையை நோக்கி, ''ஏ வருமையே! என்னுடைய உடலை விட்டுப் பிரியாத நிழல் போல், நீ நெடுநாளாக என்னோடு அலைந்து வருந்தினாய். நீ நாளைக்கு என்னோடு இருப்பாயோ? நான் காளத்தியப்பரைக் காணும் போது நீ எங்கிருப்பாயோ? நான் நாளைக்கு இருக்கும் நிலையில் நீயும் என்னை நெருங்குவாயோ? இன்று மட்டும் நீ என்னோடு இரு!'' என்ற கருத்தமைந்த ஒரு பாடலைப் பாடினார்.

அப்பாடல் அக்கவிராயருக்கு அருகில் படுத்திருந்தவரின் உள்ளத்தைக் கவர்ந்தது. அவர் தாம் காளத்தியப்பர். அப்பாடலைக் கேட்டவுடன் காளத்தியப்பர், 'என்னை நம்பி வந்திருக்கும் இப்புலவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லையே. இரப்பவர் எந்த ஊரோ, இவர் பெயர் என்னவோ, ஊரையும், பேரையும் அறிவதால் கொடும்பசி நீங்குமோ? இவருக்கு இல்லை என்று சொல்வதை விட இறப்பதே இன்பம்!' என்று எண்ணினார். உடனே சென்று ஒரு பாம்பின் புற்றினுள் கையை விட்டார்.

பாம்பினால் கடிக்கப்பட்டு இறந்துவிடுவோம் என்ற துணிவால் காளத்தியப்பர் அவ்வாறு செய்தார். புற்றினுள் இருந்த நல்ல பாம்பு, அறம் வளர்த்த காளத்தியப்பர் கையில் ஒளிவீசும் மாணிக்கம் ஒன்றைக் கக்கியது. காளத்தியப்பர் கையை வெளியே எடுத்துப் பார்த்தார். அளவு கடந்த மகிழ்ச்சி கொண்டார். உடனே கவிராயரிடம் சென்றார்.

கவிராயரை வணங்கி, ''இந்த மாணிக்கத்தைப் பெற்று உங்களது வறுமையைப் போக்குங்கள்!'' என்று முகமலர்ச்சியுடன் கூறி, மாணிக்கத்தை அவரிடம் கொடுத்தார். அப்போது மதுரகவிராயர் ஒன்றும் புரியாமல் திகைத்தார்.

அதைக் கண்ட காளத்தியப்பர், அவருடைய பாட்டைக் கேட்டது முதல் மாணிக்கத்தை அவரிடம் கொடுத்தது வரை கூறினார். அதைக் கேட்ட கவிராயர், ''இத்தகைய பெருங்குணம் படைத்த தங்கள் பெயரை அறியாதவனாக இருக்கிறேன்!'' என்று கூறினார்.

காளத்தியப்பர் உடனே, ''நீங்கள் யாரைக் காண வந்தீரோ, அந்த ஏழைதான் அடியேன். மதுரகவி பாடிய தங்கள் பெயர் என்னவோ?'' என்றுகேட்டார்.

கவிராயர், ''மதுரகவி என்று சொன்னீரே, அதுவே என் பெயர்!'' என்றார்.

அதைக் கேட்ட அளவில் காளத்தியப்பர், ''தாங்கள்தாம் மதுரகவிராயரோ...'' என்று கூறி மகிழ்ந்தவாறு, மதுரகவிராயரை மார்புறத் தழுவிக் கொண்டார். அதன் பின் இருவரும் உரையாடி மகிழ்ந்தனர்.

(-முற்றும்)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us